சிவலோகநாதன் வித்தியா 18 வயதான பாடசாலை மாணவி. யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர்.
அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்பத்தின் கடைக்குட்டி. அக்கா வவுனியா கல்வியியல் கல்லூரியில் பயின்று வரும் நிலையில் அண்ணன் மின் இலத்திரனியல் கார் திருத்துனராக கடமையாற்றுபவர்.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்று வந்த வித்தியா கெட்டிக்காரி. கல்வி நடவடிக்கைகளில் மட்டுமல்லாது புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் அவளது திறமையை வியக்காதவர்கள் அப்பிரதேசத்தில் இருக்க முடியாது எனலாம்.
இந்நிலையில் வித்தியாவின் தாய் தனது மகளை யாழ்ப்பாணத்தில் உயர் நிலை பாடசாலையொன்றில் சேர்ப்பதற்கான ஆயத்தங்களையும் முன்னெடுத்திருந்தார்.
இது தொடர்பில் விண்ணப்பங்கள் கூட பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு கெட்டிக்காரி என்ற நிலையில் வித்தியாவின் பாடசாலை அவளை இழக்க விரும்பாததால் அம்மாவின் அந்த கனவு நிறைவேறவில்லை.
ஆம். அன்று 13ஆம் திகதி புதன்கிழமை வழமை போன்றே வித்தியா பாடசாலைக்கு செல்கிறாள்.
பல சமயங்களில் வித்தியாவை அவள் அண்ணன் சிவலோகநாதன் நிஷாந்தன் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது வழமை.
எனினும் அன்று காலை நிஷாந்தனுக்கு அவசர வேலையொன்று இருந்ததால் அவரால் தனது தங்கையை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை.
அப்போது நேரம் காலை 7.00மணியை கடந்திருந்தது வித்தியா தான் வழமையாக பாடசாலை செல்லும் வழியே தனியே பாடசாலையை நோக்கி நடக்கலானாள்.
பாடசாலை நேரம் முடிவடைந்தது. வித்தியா வீடு திரும்பவில்லை. நேரம் செல்லச் செல்ல வித்தியா வீடு திரும்புவாள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவள் குடும்பத்தாரின் மனதில் அச்சம் குடிகொள்ளத் தொடங்கியது.
அந்த அச்சம் அவர்களை பாடசாலை தரப்பை வினவச் செய்தது. வித்தியா இன்று பாடசாலைக்கு வரவே இல்லை என்ற பாடசாலை தரப்பு பதிலால் அவள் குடும்பம் மேலும் அச்சமடைந்தது.
வித்தியாவின் நண்பிகள் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் குடும்பத்தார் விசாரித்தும் சாதகமான எந்தவொரு தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சூரியன் மறைந்து தீவகம் எங்கும் காரிருள் கவ்விக் கொண்ட போதும் வித்தியா வீடு திரும்பவில்லை.
நேரம் இரவு 9.00 மணியைக் கடந்திருந்தது. வித்தியாவின் அம்மா தனது மகளை தேட பொலிஸாரின் உதவியை நாடினார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் சென்ற வித்தியாவின் தாய் பாடசாலை சென்ற தனது மகளைக் காணவில்லையென முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அன்றைய நாள் முழுதும் வித்தியாவின் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அந்த குடும்பம் மறுநாள் வியாழன் விடிந்ததும் வித்தியாவை தேடும் பணியினை ஆரம்பிக்கின்றது.
வித்தியாவின் அம்மா அண்ணன் நிஷாந்தன் மேலும் இருவரும் இணைந்து இந்த தேடுதலை ஆரம்பிக்கின்றனர்.
வித்தியா வழமையாக பாடசாலைக்குச் செல்லும் பாதை வழியே அந்தத் தேடல் தொடர்கிறது. இதன் போதுதான் புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் பகுதியில் அந்தக் குடும்பத்தினர் வித்தியாவின் பாதணியை ஒத்த ஒரு பாதணியை பாதை ஓரத்தில் காண்கின்றனர்.
இதனையடுத்து வித்தியாவின் அண்ணன் இந்த பாதணி இருந்த திசையாக காட்டுக்குள் சென்றுள்ளார். சுமார் 15 மீற்றர்கள் செல்லும் போது புதர் நிறைந்த அந்த காட்டில் நிஷாந்தன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் உறையச் செய்தது.
ஆம். வித்தியா சடலமாக இருந்தாள். பாடசாலை சீருடை களையப்பட்டு கால்கள் இரண்டும் அரளி மரங்களில் வெவ்வேறாக கட்டப்பட்டு கைகளும் அவளது கழுத்துப்பட்டியினாலேயே கட்டப்பட்டு வாயில் ஏதோ திணிக்கப்பட்டிருக்க சடலத்தின் மேல் பனை ஓலை ஒன்றும் போடப்பட்டிருந்தது.
தனது தங்கை சடலமாக கிடப்பதைக் கண்ட நிஷாந்தன் சப்தமிட்டு அழுதவாறே அதிர்ச்சியில் உறைந்து போக ஊரார் இந்த சப்தத்தில் அவ்விடத்தில் ஒன்று கூடினர்.
அடுத்த கணமே 119 பொலிஸ் அவசர இலக்கத்துக்கு பறந்த அழைப்பொன்று சேர் புங்குடுதீவு பகுதியில் காணாமல் போன மாணவி சடலமாக உள்ளார் என தகவல் கொடுத்தது.
அந்த தகவல் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு பரிமாற்றப்படவே அப்பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் அங்கு குழுவொன்று விரைந்தது.
அந்தக் குழு அவ்விடத்தை அடையும் போதும் குறிகட்டுவான் உப காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பீ.என். இரான் தலைமையிலான பொலிஸ் குழு அவ்விடம் சென்றிருந்தது.
இதனையடுத்து வித்தியாவின் சடலத்தை மீட்ட பொலிஸார் நீதிவான் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.கே. பெரேரா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எல். விஜயசேகர ஆகியோரின் மேற்பார்வை ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சேனாரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் க்யூ. ஆர். பெரேரா தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகின.
மேற்படி உயர் பொலிஸ் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து உடனடியாக ஆலோசித்து சிறப்பு பொலிஸ் குழுவொன்றை விசாரணைகளுக்காக அமைப்பது எனவும் தீர்மானித்தனர்.
அதன்படி குறிகட்டுவான் உப காவல் நிலைய பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பி. என். இரான் தலைமையில் சார்ஜன்களான அமரசிங்க, அபேசிறி, நடராஜா கான்ஸ்டபிள்களான போதி கிருஷ்ணன், புஷ்பகுமார கிரிஷாந்த உள்ளிட்ட பெரிய குழுவொன்று அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக யாழ். பல் குற்ற விசாரணை பிரிவு, யாழ். குற்றத்தடுப்புப் பிரிவு, யாழ். புலன் விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பொலிஸ் குழுக்களும் விசாரணை உதவிகளுக்கு அழைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில்தான் வித்தியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரியின் சிறப்பு அறிக்கையும் சிறப்பு விசாரணைக்குழுவிற்கு கிடைத்தது.
அந்த அறிக்கைகளில் வித்தியா கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு வித்தியா உட்படுத்தப்படும் போது அவளது வாயில் சந்தேக நபர்கள் கீழ் உள்ளாடையை திணித்திருந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் வித்தியாவின் மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் சிறப்பு அறிக்கை தெரிவிக்கவே வித்தியாவை பலாத்காரம் செய்த சந்தேக நபர்கள் அனைவரும் அவளது கொலை தொடர்பிலும் சந்தேக நபர்களாயினர்.
இதனையடுத்தே விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் போது கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வித்தியாவின் அம்மாவிடம் சிறப்பு பொலிஸ் குழுவினர் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்தனர்.
அந்த வாக்கு மூலத்தில் வித்தியாவின் தாயார் கொடுத்த சில தகவல்கள் விசாரணையின் திருப்பு முனையாக அமைந்தது.
வித்தியாவின் குடும்பத்தாருடன் எவருக்கேனும் பகை உள்ளதா என்று பொலிஸாரின் கேள்விக்கு வித்தியாவின் தாயார் அளித்த பதிலே அந்த திருப்பத்திற்கு காரணமானது.
அவ்வாக்கு மூலத்தில் வழக்கொன்றின் போது தான் சில நபர்களுக்கெதிராக சாட்சியம் அளித்ததாகவும் அவர்களுடனேயே தமக்கு பகையிருந்ததாகவும் அவர்கள் தொடர்பிலேயே சந்தேகம் உள்ளதாகவும் தாயார் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த அனைவரும் வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட போது ஒன்று கூடியிருந்தனர்.
எனினும் தாயார் சந்தேகம் வெளியிட்ட நபர்கள் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களை அங்கு காண முடியவில்லை. இந்நிலையில் அது தொடர்பிலான தகவல்களை சேகரித்த ஊர்காவற்றுறை பொலிஸார் முதலில் மூவரை கைது செய்தனர்.
பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 34), பூபாலசிங்கம் தவகுமார் (வயது 32) ஆகிய மூவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இம் மூவரில் இருவருக்கெதிராகவே வித்தியாவின் தாயார் சாட்சியம் அளித்திருந்தார். மருத்துவர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே இவ்வாறு அவர் சாட்சியம் அளித்திருந்தார்.
அந்த வழக்கில் அவ்விருவரும் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனையும் அனுபவித்திருந்தனர்.
இதன் பின்னணிலேயே அம் மூவரையும் கைது செய்திருந்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்தனர்.
இதனையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் இரான் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தது.
இதன் போது அந்த பொலிஸ் குழுவுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஐவர் அடையாளம் காணப்பட்டனர்.
மகாலிங்கம் சஷேந்திரன், தில்லைநாதன் சந்திரஹாஷன், சிவதேவன் குஷாந்தன், பழனி ரூபசிங்கம், குகநாதன், ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணன்.
ஆகிய ஐவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர். இதில் குஷாந்தன் வேலணை பிரதேச சபையில் டிரெக்டர் சாரதியாக பணியாற்றுபவர்.
சஷேந்திரன், குகநாதன், சந்திரஹாஷன் ஆகிய மூவரும் கொழும்பில் பணியாற்றுபவர்கள். இதை விட இவர்கள் அனைவரும் ஒரே நண்பர் குழாத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இவ் ஐந்து நபர்களும் வித்தியாவின் சடலம் மீட்கப்படும் போதும் இறுதி கிரியைகளின் போதும் முன்னின்று செயற்பட்டவர்களாவர்.
இப்படியிருக்கையில் உப பொலிஸ் பரிசோதகர் இரானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது இந்த ஐந்து பேரும் புங்குடுதீவு நாகன்கடை சந்தியில் இணைந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராகவுள்ளதாகவும் அது தொடர்பில் வாகனமும் தயார் நிலையில் உள்ளதாகவும் அத் தகவல் குறிப்பிட்டது.
இதனையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழு அந்த ஐவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்படும் போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததுடன் கடற்கரைக்குச் சென்று ஓய்வாக இருந்துள்ளமையும் கோயிலுக்கு சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலையின் பின்னணியை கண்டறிந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகரவின் தகவல்களின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரும் வேலணை பிரதேச சபையில் பணியாற்றும் குஷாந்தனுக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வித்தியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தமானது குஷாந்தனுக்கு வழங்கப்பட்டதுடன் அவன் தனது நண்பர்களை இது தொடர்பில் கொழும்பில் இருந்து அழைத்து இணைத்துக் கொண்டு இக் கொடூரத்தை புரிந்தமை தொடர்பில் பிரதான சந்தேக
நபரான குஷாந்தன் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இந்த 5 சந்தேக நபர்களையும் சிறப்பு விசாரணைக்குழு கைது செய்த பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் காதணி ஜோடி மூக்குக் கண்ணாடியும் பிரதான சந்தேக நபரான குஷாந்தனின் வீட்டிலிருந்து விசாரணை குழுவினரால் மீட்கப்பட்டதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்கள் ஊடாக அறிய முடிந்தது.
நேற்று காலை வரை உபபொலிஸ் பரிசோதகர் இரான் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளின்படி நடந்ததை இப்படி விபரிக்கலாம்.
இந்திரகுமார், ஜெயகுமார், தவக்குமார் ஆகிய மூவரும் 10000 ரூபாவை பின்னர் தருவதாக கூறியதன் அடிப்படையில் குஷாந்தனிடம் வித்தியாவை கொலை செய்யும் திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவை கொலை செய்யும் திட்டத்திற்கு கொழும்பில் உள்ள தனது கூட்டாளிகளை குஷாந்தன் இதனை தொடர்ந்தே ஒன்று சேர்த்துள்ளான்.
மாதம் ஒரு முறையேனும் குஷாந்தன் இல்லத்துக்கு வந்து செல்லும் கொழும்பில் பணியாற்றும் சசேந்திரன் குகநாதன் சந்திரஹாசன் ஆகியோரையும் கண்ணன் எனப்படும் கோகிலனையும் இது தொடர்பில் குஷாந்தன் புங்குடு தீவுக்கு அழைத்துள்ளான்.
இதனையடுத்து கடந்த 12 ஆம் திகதி செவ்வாயன்று இரவு 9.00 மணிக்கு கொழும்பிலிருந்து பஸ்ஸேறிய சசேந்திரன் குகநாதன் சந்திரஹாசன் ஆகியோர் புதன் அதிகாலை 5.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளனர்.
அங்கிருந்து முதல் பஸ்ஸிலேயே குறிகட்டுவானை அடைந்துள்ள அம்மூவரும் ஆலடி சந்தியில் இறங்கி நேராக குஷாந்தனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே காலை 7.30 மணியளவில் வித்தியா வழமையாக பாடசாலை செல்லும் பாதைக்கு சென்றுள்ள இவர்கள் அங்கு மறைந்திருந்துள்ளனர்.
இதன்போது வழமை போல பாடசாலைக்குச் செல்ல வித்தியா வந்த போது ஐவரும் சேர்ந்து அவளை கடத்தி அருகில் உள்ள புதர்க்காட்டிற்குள் இழுத்துச் சென்று கட்டிப்போட்டு மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கைதாகி பொலிஸ் தடுப்பில் உள்ள 5 சந்தேக நபர்களும் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பிரகாரம் அந்த 5 பேரும் சேர்ந்தே வித்தியாவை பலாத்காரம் செய்து தீர்த்துக் கட்டியமை தெரிய வந்துள்ளது.
கைதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலம் ஒன்றில்
நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை காலை புங்குடுதீவில் மது அருந்திக்கொண்டு இருந்தோம்.
அந்தவேளை 14 ம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் எனக்கு தொலைபேசியில் அயிட்டம் (பொண்ணு) ஒன்று இருக்கு வா என ஒரு இடத்தை சொல்லி அழைத்தார்.
அதையடுத்து நாங்கள் அந்த இடத்திற்கு காரில் சென்றோம். அங்கே ஒரு பெண்ணை கடத்தி பின் புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய நிலையில் இருந்தார்கள்.
அந்த பெண் எமக்கு ஒரு முறையில் உறவினர் கூட. அந்த வேளை நாம் மது மயக்கத்தில் இருந்ததால் நாமும் அந்தப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினோம்.
பின்னர் நாம் காரில் காலை 10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்று விட்டோம். மறுநாளே எமக்கு அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.
நாம் செல்லும் போது அந்த பெண் உயிரிழக்கவில்லை. அவரது கைகள் பின்னால் தான் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கைகள் தலைக்கு மேல் விரித்து இரண்டு மரங்களில் கட்டப்பட்டது தொடர்பில் எமக்கு தெரியாது.
எமக்கு அயிட்டம் பெண் இருக்கு என்று சொல்லி அழைத்தவர் ஏற்கனவே ஒரு திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
அவரை பொலிசாரிடம் காட்டி கொடுத்தது உயிரிழந்த பெண்ணின் தயாராவார். எனவே தாய் மீதான கோபத்திலேயே அவர் அந்த பெண்ணை கடத்தி வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதுடன் எம்மையும் அழைத்து இருந்தார்.
தாயின் மீதான கோபத்தினால் தான் அவர் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து இருக்கலாம்.
அதனை அடுத்து நாம் புங்குடுதீவுக்கு வந்து அந்த பெண்ணின் இறுதி கிரியைகளிலும் கலந்து கொண்டு இறுதி கிரியைகளில் உதவிகளையும் முன்னின்று செய்தோம்.
அதன் பின்னர் இன்று ஞாயிறு இரவு மீண்டும் கொழும்பு நோக்கி செல்ல இருந்தோம். அந்த நிலையிலேயே பொலிசார் எம்மை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்களை பொலிஸார் நிராகரிக்கின்றனர்.
ஏனைய சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களுடன் ஒப்பிடும் போது சில தகவல்கள் முரணாக உள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரும் சேர்ந்து மிகத் திட்டமிட்டு இந்த பாதக செயலை புரிந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகத் திட்டமிட்டு செய்யப்பட்ட பாதகம் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு பொலிஸாரிடம் ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில் வித்தியாவை பலாத்காரம் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நபர்களை அடையாளம் காணவும் வேறு எவரேனும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை கண்டறியவும் வித்தியாவின் பிரேதத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மரபணு D.N.A. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவையும் மரபணு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தின்படி குஷாந்தன் கோகிலன் ஊடாக கொழும்பு நண்பர்களை ஒருங்கிணைத்ததாக தெரிகிறது.
எனினும் சந்தேக நபர்கள் சொல்லும் தொலைபேசிக் கதைகளை உறுதிப்படுத்த சிறப்பு பொலிஸ் குழுவானது சந்தேக நபர்களின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறது.
இதனைவிட சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை அடையாளங்களும் பெறப்பட்டு அவர்கள் இதற்கு முன்னர் வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்ய கொழும்பு குற்றப்பதிவுப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த கொடூரத்தின் பின்னணியில் வித்தியாவின் தூரத்து உறவினர்களான (சசேந்திரன், குகநாதன்) இருவரும் அப்பிரதேசத்தை சார்ந்தவர்களுமே சம்பந்தப்பட்டுள்ள நிலையில் புங்குடுதீவு கடந்த மூன்று நாட்களாக பற்றி எரிந்து வருகிறது.
சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது எனவும் ஆவேசத்துடன் அலையும் பொதுமக்கள் சந்தேக நபர் ஒருவரின் வீட்டுக்கும் தீ வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
யாழ். வைத்தியசாலையில் சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட அழைத்துச் சென்ற போதும் வைத்தியசாலைக்குள் கூடிய பொதுமக்கள் சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதில் பல சிக்கல்களை பொலிஸார் எதிர்கொண்டனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவுறாத நிலையில் மரபணு பரிசோதனை அறிக்கையும் தடுப்புக் காவல் விசாரணைகளும் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தலாம்.
இந்நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் இரான் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கிறது.
வித்தியாவின் தாய் சொன்ன சாட்சியம் இறுதியில் அவள் மகளின் உயிரையே பறித்து விட்டது. சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலான சட்டம் ஒன்றின் அவசியத்தை வித்தியாவின் படுகொலை அரசுக்கு வலியுறுத்துகிறது.
இதனை விட யாழில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த விஷேட திட்டங்களின் அவசியத்தையும் இந்த கொடூர சம்பவம் சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.
இந்த கொடூரத்தை புரிந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் கோரிக்கை ஒரு புறமிருக்க இன்னுமொரு வித்தியாவை இழக்க முன்னர் குற்றத்தடுப்பு தொடர்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பிலும் யதார்த்தமான நடவடிக்கைகள் அவசியம்.
தூக்கு தண்டனையை அடிக்கடி ஞாபகப்படுத்தும் இவ்வாறு சம்பவங்களை அத்தண்டனையை அமுல்படுத்தியேனும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.
வித்தியா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேசரி தொடர்ந்தும் அவதானத்துடன்.
(எம்.எப். எம். பஸீர்)