இந்தியாவில் இருக்கும் சட்டத்தின் காரணமாகவும், சமூக கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒருபால் உறவினர்கள் தங்களின் பாலியல் தேர்வை பகிரங்கப்படுத்தாமல் ஒளிந்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் வாழும் பத்மா ஐயர் என்ற பெண்மணி ஒருபால் சேர்க்கையாளரான தனது மகன் ஹரிஷ் ஐயருக்கு ஆண் துணை தேவை என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். ஒரே நாளில் பலர் பேர் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
ஹரிஷ் ஐயர்
தன்னை திருமணம் புரிய விருப்பம் தெரிவித்துள்ளோர்களிடம் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து தனது தாய் தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரிடம் தான் பேச உத்தேசித்துள்ளதாகவும் பிறகே யாரைத் திருமணம் செய்வது என்பது குறித்து முடிவு செய்யப் போவதாகவும் ஹரிஷ் ஐயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மணமகன் விலங்குகளிடம் பிரியம் கொண்டிருக்க வேண்டும், சைவ உணவு உண்பவராக மட்டுமின்றி – விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால், தயிர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை ஹரிஷ் விதித்துள்ளார்.
ஐயராக இருந்தால் நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.”ஐயர் பிள்ளைதான் வேண்டுமென்று பாட்டி சொன்னார்”, என்கிறார் ஹரிஷ்.
தான் ஒருபால் சேர்க்கையாளர் என்று ஹரிஷ் சொன்னபோது தனக்கு வருத்தம் ஏற்பட்டது என்று கூறும் அவரின் தாய் பத்மா, காலம் செல்லச் செல்ல அதை ஏற்கும் பக்குவம் வந்து விட்டதாகவும், தற்போது 36 வயதாகும் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாலியல் தேர்வு குறித்து திறந்த மனதோடு பேசக் கூடிய சூழல் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் இல்லை.
ஒருபால் சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தால் பலர் வீட்டை விட்டுத் துரத்தப்படுகின்றனர். இந்நிலையில் பெற்ற தாய் மகனுக்கு உதவுவது பாராட்டத்தக்கது என்கிறார் எய்ட்ஸ் நோயாளர்கள் மற்றும் ஒருபால் சேர்க்கையாளர்களுக்கு உதவும் நாஸ் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஞ்சலி கோபாலன்
ஐரோப்பாவின் ஸக்சிம்பர்க் நாட்டின் பிரதமர் தனது ஆண் நண்பரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
சில கிறிஸ்தவ தேவாலங்கள் ஒருபால் சேர்க்கையாளர்களின் திருமணங்களை நடத்தி வைக்கின்றன. வேத மந்திரங்கள் முழங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு இந்து இளைஞர்கள் அமெரிக்காவில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் ஆண் பெண் திருணங்களில் இணையும் தம்பதியினருக்கு உள்ள உரிமைகள் ஒருபால் திருமணத்தில் ஈடுபடுவோருக்கும் சட்டரீதியாக கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் உரிமைகள் ஏதும் கிடையாது. பிரச்சனைகள் அதிகம்.
திருமணமான ஒருவர் மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு ஒரு பெண்ணை கணவன் மணம்முடித்தால் அது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்கள்தான் புகார் அளிக்க முடியும் என்று சட்டம் இருக்கிறது என்றும் ஆனால் ஒருபால் உறவினர்களைப் பொறுத்தவரை இவர்கள் இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்க இயலும் என்கிறார் வழக்கறிஞர் கீதா ராமசேஷன்.
ஆனால் இயற்கைக்கு மாறாக உடல் உறவு என்ற சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஏராளமான தம்பதியினர் குற்றம் இழைப்பவர்களே என்று சுட்டிக் காட்டுகிறார் ஹரிஷ் ஐயர்.
இவருடைய முயற்சிக்கு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் ஆதரவு அளிக்கின்றன. இருந்தும் சட்டம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இவரின் மண வாழ்க்கை அமையும்.