புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு ஷரிஆ சட்டத்தின் படி தண்டனை வழங்குதன் மூலம் இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
வித்தியாவின் படுகொலை குறித்து வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வித்தியாவின் படுகொலை சம்பவமானது மனித நேயம் மிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படு பாதக செயலாகும்.
இது போன்ற பல்வேறு வன்செயல்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
இலங்கையில் அதிகரித்து வரும் இவ்வாறான குற்றச்செயல்கள் பல்லின சமூகம் வாழும் சூழலில் மாபெரும் கலாசார சீரழிவை அதிகரிக்க செய்துள்ளது.
வடக்கில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வாறான குற்றச்செயல்களை குறைக்க முடியாத கையறு நிலை காணப்படுகின்றது.
அதாவது தனி மனிதனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையோடு உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலையே காணப்படுகின்றது.
எனவே வித்தியாவின் படுகொலை போன்ற அதிகரித்து வருகின்ற பெருங்குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் தண்டனை வழங்குவதற்குமான மூலோபாயமாக இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை அடுல்படுத்துவதே ஒரே வழியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.