டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்திய பெண்களை செக்ஸ் அடிமைகளாக நடத்துவதாக அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து இந்தியா திரும்பியுள்ள ஆரீப் மஜீத் தெரிவித்துள்ளார்.
ஆரீப் மஜீத் மற்றும் நண்பர்கள் 3 பேரும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் குறித்து படித்து தெரிந்துகொண்டு, போர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து சென்றனர்.
ஆனால், கேள்விப்பட்டதற்கும், உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்து ஆரீப் மஜீத் திரும்பிவிட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திய இந்திய விசாரணை ஏஜென்சி (என்ஐஏ) 8 ஆயிரம் பக்க, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆரீப் மஜீதின் வாக்குமூலம் பல புதிய உண்மைகளை வெளியே கொண்டு வருவதாக உள்ளது.
ரத்த வெறி
ஆரீப் மஜீத் வாக்குமூலத்தின் சில முக்கிய அம்சங்கள்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்கள் தலைவன் அல் பகாதியை, இறை தூதர் என்று கூறியிருந்தது.
ஆனால், உண்மையில் அப்படி எதுவும் கிடையாது. உண்மையான இறை தூதராக இருந்திருந்தால் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார். அங்கு, ரத்த வெறியில் வேட்டை நடக்கிறதே தவிர போர் நடக்கவில்லை.
பெண்களுக்கு மதிப்பில்லை
பாக்தாதி இறைதூதர் என்றால், ஐஎஸ்ஐஎஸ் ஏன், பெண்களை இழிவாக நடத்துகிறது. பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
அவர்கள் ஒரு உடமைகளைப் போலதான் பார்க்கப்படுகிறார்கள், உயிருள்ள மனுஷிகளாக மதிக்கப்படுவதில்லை. இறைதூதராக இருந்திருந்தால் பெண்களை இப்படி நடத்தியிருக்க மாட்டார்.
ஐஎஸ்ஐஎஸ் தங்கள் இயக்கம் பற்றி ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு ஆட்களை பிடித்து வருகிறது. ஆனால் வீடியோவில் இருப்பது போல உண்மையில் கிடையாது.
மிதிபடும் இந்தியர்கள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்திய முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். பாத்திரம் கழுவது, துடைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள்தான் இந்தியாவில் இருந்து போராட போனவர்களுக்கு தரப்படுகிறது.. இந்தியாவிலிருந்து சென்ற பெண்களும், ஆண்களும் செக்ஸ் அடிமைகளாகத்தான் பயன்படுகின்றனர்.
அரேபியர்களுக்கு முன்னுரிமை
இதுகுறித்து நான் கேட்டபோது, இந்தியர்களை நம்ப முடியாது. அவர்களை நம்பி, போர் செய்யும் அதிகாரத்தை தர முடியாது என்று ஐஎஸ்ஐஎஸ் நிர்வாகிகள் கூறிவிட்டனர்.
அரேபியாவை சேர்ந்தவர்களுக்குதான் அங்கு முன்னுரிமை. இரண்டாவதாக ஐரோப்பாவை சேர்ந்த முஸ்லிம்களுக்கு முன்னுரிமை. கடைசி நிலையில்தான் இந்தியர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
பணம் கொடுத்து சேர்த்தனர்
ஆடில் டோலாரிஸ் என்பவர்தான், என்னை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்க உதவினார். முதலில் ஆப்கனை சேர்ந்த ரகுமானிடம்தான் என்னை ஒப்படைத்தார்.
அவர் என்னை ஈராக்கை சேர்ந்த அகமது ரதீப்பிடம் ஒப்படைத்தார். ரகுமான் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து, பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பு வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பவராகும். எனக்கு ஈராக் செல்ல ரகுமான் ரூ.1.25 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால், எனக்கு ரூ.2.40 லட்சம் செலவானது.
குண்டுவைக்க திட்டம்
முதலில் நான் புறக்கணிக்கப்படுவதை உணரவில்லை. எனக்கு ஆயுத பயிற்சியெல்லாம் தந்தார்கள். வெடி மருந்து நிரப்பிய லாரியை ஓட்டிச் சென்று, எதிரிகள் முகாமில் வெடிக்க செய்யும் பணியை எனக்கு தருவதாக கூறியிருந்தார்கள்.
ஈராக்கிற்கு நான் வந்த பணி முடியப்போகிறது என்று நான் சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் என்னை அந்த வேலைக்கு பயன்படுத்தவில்லை. இந்தியர்கள் இதுபோன்ற ஆபத்தான வேலைக்கு சரிபடமாட்டார்கள் என்று நினைத்து விட்டதாக சிலர் சொன்னார்கள்.
மனிதாபிமானம் இல்லை
அடுத்த சில நாட்களில் எங்கள் கேம்ப்பில் நடந்த தாக்குதலில் எனக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவ உதவி செய்யுமாறு கெஞ்சியும் என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. நான் இந்தியாவுக்கு திரும்ப முயன்று ஒருவழியாக வந்துவிட்டேன்.
இனிமேல் ஈராக் பக்கம் போகமாட்டேன். அங்கு புனிதப்போர் நடக்கவில்லை. சொந்த லாபங்களுக்கான சண்டைதான் அங்கு நடக்கிறது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ பதிவு செய்துள்ளது.