சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் விழாவில் பதவி ஏற்றுக் கொள்ள உள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள் குறித்த விரிவான தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெறவுள்ளன.

முதல்வராக சனிக்கிழமை பதவியேற்கவுள்ள ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்திக்கவுள்ளார்.

இதற்காக பிற்பகல் 1 மணியளவில் அவர் ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். தனது தலைமையிலான அமைச்சரவையை அமைப்பதற்கும், பேரவை கட்சித் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கான கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்து அனுமதி கோருகிறார். இதன்பிறகு, மூன்று தலைவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இதற்காக, பிற்பகல் 1.30 மணிக்கு அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாஸா சிக்னல் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், 1.45 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், 2 மணிக்கு ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வுகளை முடித்த பிறகு, அவர் தனது போயஸ் தோட்ட இல்லத்துக்குச் செல்கிறார்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி, அண்ணா சாலை நெடுக அவரை வாழ்த்தி அதிமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர். மேலும் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது கடிதத்தை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அளிப்பார் என தெரிகிறது. இதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை ஆளும் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படவுள்ளார். இந்தத் தேர்வுக்குப் பிறகு ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம்.ஆளுநரிடம் அளிக்கவுள்ளார் .

Share.
Leave A Reply