யாழ்., ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விஷேட விசாரணைகளுக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ்.புங்குடு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர், சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரியிடம் தெரிவித்தார்.
பொலிஸ் பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில், மாணவி வித்தியா, பலாத்காரம் செய்யப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை ஆகிய விடயங்களுடன் சந்தேக நபர்கள் குறித்த பின்னணி தொடர்பாகவும் இந்த குழு விசாரணை செய்யப்படவுள்ளது.
அதனை விட எவரேனும் சந்தேக நபர்களை காப்பாற்ற முனைந்தனரா, அவர்களுக்கு தெரிந்துகொண்டே அடைக்கலம் கொடுத்தனாரா உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உள்ளடங்கியதாக பரந்துபட்ட வகையில் இந்த விசாரணை அமையும் என்றார்.
இதனிடையே நேற்று முன் தினம் வெள்ளவத்தை, ஸ்டேஷன் வீதி விடுதியொன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்ட மாணவி வித்தியா படுகொலை சம்பவத்தின் ஒன்பதாவது சந்தேக நபர் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு வெள்ளவத்தை பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த விஷேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராஜசிங்கம் சசிகுமார் என்ற குறித்த சந்தேக நபர் சுவிட்ஸ்ர்லாந்துக்கு தப்பிச் செல்லும் நோக்கில் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள தாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் சந்தேக நபர் சுவிசர்லாந்தில் இருந்து இங்கு வந்துள்ள நிலையில் இந்த கொலையின் பின்னர் அவர் மீண்டும் சுவிசர்லாந்துக்கு தப்பிச் செல்லவே கொழும்பு வெள்ளவத்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று குறிகட்டுவான் பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கொழும்புக்கு வர முற்பட்ட போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது வைத்தியசாலையில் இருந்து சிலரின் ஒத்துழைப்புடன் ஒருவாறு தப்பியுள்ள இந்த சந்தேக நபர் கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
இதன் போதே வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லர் தலமைமையிலான பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபர் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொன்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில் வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந் நிலையில் யாழ்ப்பாணம் சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் தமது நடவ்டிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பர் என தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையிலேயே சந்தேக நபர்களை பாதுகாக்க முனைந்தவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், ‘மாணவியின் படுகொலைச் சம்பவத்துடன் முதல் மூன்று சந்தேகநபர்களும் தொடர்ந்து ஐந்து சந்தேகநபர்களும் வெள்ளவத்தையில் சுவிஸ் நாட்டுச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மாணவியின் உடல் கூற்றும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது” என்றார்.
அத்துடன், சந்தேகநபர்கள் அனைவரும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனையில் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படும் எவரும் தப்ப முடியாது.
அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். நீதிமன்றமும் பொலிஸாரும் நீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது, விசாரணை செய்வது என்பன பொலிஸாரின் பணி. அதனை பொலிஸார் செய்து வருகின்றனர்.
யாரும் சட்டத்தை கையில் எடுத்து சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பொலிஸார் புலனாய்வு செய்து சாட்சியங்களை பதிவு செய்வதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவருக்கும் அனுமதியுண்டு. ஆனால் போராட்டங்களில் வேண்டத்தகாத முறையில் நடந்துகொள்ள முடியாது.
நேற்று நடந்த சம்பவத்தில் அதிகளவான பொலிஸாரைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தியிருக்க முடியும். அதிகளவான பொலிஸாரை பயன்படுத்தினால் தமிழர் உரிமை பறிக்கப்படுகின்றது என்ற கோஷங்கள் எழுந்திருக்கும்.
அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தவறாக நடந்துள்ளனர். அது ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
கொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வியாழக்கிழமை (21) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் புலனாய்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இச்சம்பவத்தை விசாரணை செய்ய கொழும்பிலுள்ள புலனாய்வாய்வு பிரிவையும் பொலிஸ்மா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.