வித்தியா படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் அமைப்புக்கள் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் முழுநேர ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த படங்களை இங்கே காணலாம்.
வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு (படங்கள்)
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று முற்றிலும் செயலிழந்தன.
‘கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், கொலையாளிகள் சார்பில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பு நகரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டிருந்தன.
பேருந்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைந்தளவிலேயே வருகை தந்திருந்தனர். அரச மற்றும் தனியார் நிறுவனங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாணவர்கள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பரவலாக கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன.
இதில் பெருமளவில் மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
நேற்றும் மட்டக்களப்பின் பல்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.