அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் 13 வயது மகளை அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

வால் ஸ்டார்க் என்ற அந்த தாய் பேஸ்புக்கில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தன் 13 வயது மகள் கிறிஸ்டினாவும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

காரணம், பேஸ்புக்கில் தனது வயதை 19 வயது என்று குறிப்பிட்டுள்ள கிறிஸ்டினா தன்னை ஒரு ஃப்ரீக் (சபல எண்ணம் கொண்ட குறும்புக்காரி) என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஸ்டார்க் தன் மகள் வீட்டுக்கு வந்ததும் அவளை தோட்டத்தில் உள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு தயாராக இருந்த கேமரா முன் நிறுத்தினார்.

என்ன ஏதென்று புரியாமல் தவித்த கிறிஸ்டினாவிடம் உன்னுடைய வயது என்ன? பிறகு பின் ஏன் பேஸ்புக்கில் 19 என்று குறிப்பிட்டாய்? ஃப்ரீக் என்றால் என்ன தெரியுமா உனக்கு? நீ என்ன ஃப்ரீக்கா? என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்கத் தொடங்கினார்.

அம்மாவின் ஒவ்வொரு கேள்விக்கும் அவமானப்பட்டு திக்கித்திக்கி பதில் கூறும் கிறிஸ்டினா, இறுதியில் அழுது கொண்டே நான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

ஸ்டார்க் இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் கடந்த 18-ம் தேதி பதிவேற்றினார். இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

4 லட்சம் பேர் இதை ஷேர் செய்துள்ளனர். இந்த அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டார்க், ”என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா…” என்று தன்னை விமர்சிப்பவர்களுக்கு “எல்லாவற்றுக்கும் மேலாக நான் அவளது அம்மா, அவள் மீது அக்கறை கொண்ட அம்மா,”  என்று பதிலடி தந்துள்ளார்.

Share.
Leave A Reply