இலங்கையில் யாழ். குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை என்ற இடத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறையினருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர கூறுகின்றார்.
உடுத்துறையைச் சேர்ந்த 55 வயதான சிவபாதசுந்தரம் என்பவர் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்குவதாகக் கூறி, அந்த ஊரில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவொன்று தன்னைத் தாக்கியதாக உடுத்துறை ஊர்வாசி ஒருவர் பளை காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் சென்றிருந்தபோதே அங்கு மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
முறைப்பாடு செய்திருந்தவரை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்குப் பொலிசார் தயாரானபோது, அங்கு கூடியிருந்தவர்கள் பொலிசார் மீது கற்களைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர்.
இதனால் பொலிசாரின் வாகனம் சேதமடைந்தது. கைது செய்யப்பட்டவரின் கைகளில் விலங்கு மாட்ட முயற்சித்த பொலிசாரை கோடரியைக் கொண்டு தாக்குவதற்கு ஒருவர் முயற்சித்திருக்கின்றார்.
அவரை நோக்கி பொலிஸார் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் கோடரியால் வெட்ட முயன்றவர் கையில் காயமடைந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
ஊர் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதையடுத்தே ஊர் மக்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக ஊர்வாசிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சமூகவிரோதச் செயற்பாடுகள்
இதற்கிடையில் யாழ். மாவட்டத்தில் 28 இடங்களில் சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டு யாழ் அரச செயலக அதிகாரிகள், அங்குள்ள பிரதி காவல்துறை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து வட பகுதியில் சமூக விரோதச் செயற்பாடுகள் பல இடங்களிலும் இடம்பெற்று வருவதனால் சிறுவர்கள், சிறுமியர், பெண்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அங்கு அதிகரித்த மதுபாவனை, போதைப் பொருள் பாவனை, பெண்கள் மீதான வன்முறைகள் என்பவற்றுடன் மாணவர்களுக்கு பாடசாலைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்கள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கும் இடங்கள், விபச்சாரம் இடம்பெறும் இடங்கள் என்பவற்றின் விபரங்கள் காவல்துறையினருடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வு-கோரக்கொலைக்கு போதைப் பொருளும் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.
இதேவேளை, யாழ் நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணியின்போது யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குலையடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 130 பேரில் அப்பாவிகளும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார்.
அந்த அப்பாவிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரி்க்கை விடுத்துள்ளது.