இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் இறுதி மோதல்களின் இறுதி நாளான மே 18, 2009 காலையில் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்தனர்.
ஆனாலும், அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறுக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே சந்திரநேரு சந்திரகாந்தன் இறுதி மோதல்களின் பரபரப்பான நிமிடங்கள் பற்றி தன்னுடைய அனுவங்களைப் பகிர்ந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தபோது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தகவல் பரிமாற்ற அனுசரணையை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
இறுதி மோதல்களின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் தீர்மானத்துக்கு வந்து, அந்த விடயத்தை சர்வதேசத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் அறிவிக்கும் பொறுப்பை பா.நடேசனுக்கு ஊடாக தன்னிடம் வழங்கியதாகவும் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளையும், பொதுமக்களையும் உயிர்ச் சேதங்கள் இன்றி சரணடைய வைப்பதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் பஷில் ராஜபக்ஷவுடன் தான் தொடர்புகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் பேசியதாகவும்,
அதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே 18 காலை 6.10 மணிக்கு தன்னுடன் தொலைபேசியில் உரையாடி சரணடைவர்களின் உயிருக்கான உத்தரவாதத்தை தன்னிடம் வழங்கியதாகவும் சந்திரகாந்தன் சந்திரநேரு குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடலின்போது மஹிந்த ராஜபக்ஷ, தமது இராணுவம் மிகவும் கட்டுக்கோப்பான இராணுவம் என்றும் புலிகளின் சரணடைவை வரவேற்பதாகவும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்ததுடன் இதனை புலிகளுக்கு தெரிவிக்கும்படி தன்னை கேட்டுக்கொண்டதாகவும் சந்திரகாந்தன் கூறினார்.
எத்தனை பேர் சரணடையவிருப்பதாக ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாகவும் , இதன்போது புலிகளின் தகவலின்படி 3000 போராளிகளும் ஏறத்தாள 22,000 பொதுமக்களும் என்று தான் தெரிவித்ததாகவும் கூறிய சந்திரகாந்தன், ஆனால் சரணடையும் இடத்துக்கு தான் செல்வதற்கு அனுமதி தர முடியாது என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதன்படி ஜனாதிபதியின் செய்தியை நடேசனுக்கு தான் தொலைபேசியில் தெரிவித்தபோது ஜனாதிபதி அவ்வாறு கூறினாரா என்று மீண்டும் தன்னிடம் நடேசன் உறுதிப்படுத்தியதாகவும் இதன்போது பசில் ராஜபக்ஷவின் தொலைபேசி இலக்கத்தையும் நடசனுக்கு கொடுத்ததாகவும் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பின்னர் 6.15 மணிக்கு பசில் ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பு கொண்டு செய்தி புலிகளுக்கு அனுப்பப்பட்டதா என்று கேட்டதாகவும் இதன்போது வெள்ளைக்கொடியுடன் புலிகள் சரண் அடைவர் என்று தான் கூறியதாக தெரிவித்த சந்திரகாந்தன் பின்னர் 6.25 மணி அளவில் தன்னுடன் தொடர்பு கொண்ட நடேசன் ” நாங்கள் போகிறோம்” என்று கூறியதாகவும் இதுவே அவர் பேசிய கடைசி வார்த்தை என்றும் கூறினார்.
பின்னர் எந்த செய்திகளும் தனக்கு கிடைக்காத நிலையில் மாதிவலையில் தனக்கு முன் விடுதியில் இருந்த அபோதைய ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்ணடோவுக்கு நடந்த விடயங்களை கூறியபோது , அவர் சண்டைக்களத்தில்முன்னரங்கில் இருந்த தனக்கு தெரிந்த ஒரு இராணுவ அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சரணடைந்தவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக்கொன்றதாக அந்த வீரர் கூறியதாக ஜோன்சன் பெர்னாண்டோ கூறியதாக சந்திரகாந்தன் தெரிவித்தார்.
சந்திரகாந்தன் மின்னல் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒளிப்பதிவை கீழே காணலாம்.