நெல்லூர்: ஆந்திராவில் இரவு நேரத்தில் பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட உருவங்கள் வானத்தில் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

நெல்லூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த ஒரு வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் இறக்கைகளுடன்  பறப்பதாக அதிர்ச்சித் தகவல் பரவி  உள்ளது.
இந்த உருவங்களின்  2 இறக்கைகள் வெள்ளித் தகடு போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.

இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் பீதியுடன் கூறுகின்றனர்.

சில உருவங்கள் வீட்டுக்  கூரை மீது நின்றபடி கீச்… கீச்… என்று வித்தியாசமான ஒலியில் பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

தற்போது கோடை வெயில் அதிகம் என்பதால் இரவுப் புழுக்கத்தில் இருந்து தப்பிக்க நெல்லூர் புறநகர்  மக்கள்  காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குவது வழக்கம்.இந்நிலையில்,  மனித உருவங்கள் பறப்பதாக தகவல் வந்தவுடன் யாரும் வெளியே படுப்பது இல்லை.

இரவு 7 மணிக்கே வீட்டு ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். சிலர் ஜன்னலை மட்டும் திறந்து அந்த உருவங்களை பார்த்துள்ளனர்.

அந்த உருவங்கள் முதலில் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும்   இவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த உருவத்தால் நெல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பரபரப்பு கலந்த பீதி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதில், இரண்டு உருவங்கள் பறவைகள் போன்ற தோற்றத்துடன் வானில் பறப்பது பதிவாகியுள்ளது.

ஆனால், அந்த வீடியோ தெளிவற்றதாக இருப்பதால், அது பறவைகள் தானா என்பதை உறுதியாகவும் இயலவில்லை.

நாள்தோறும் இரவு நேரத்தில் இந்த நிலை தொடருவதால் நெல்லூர் மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Share.
Leave A Reply