எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் மூன்றாவது அணியினைக் களமிறக்கும் முயற்சிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த கூட்டணியுடன் இணைத்துக்கொள்ளவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பலமான கூட்டணியாக களமிறங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன் னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப க் ஷ ஆகியோருடனான விசேட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதான வேட்பாளராக களமிறக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உடன்படாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மஹிந்த கூட்டணி மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் பெரும்பான்மையான கூட்டுக் கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வரும் நிலையில் அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரையும் ஒன்றிணைத்து மூன்றாவது அணியாக பொதுத் தேர்தலில் களமிறங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் அபயராம விகாரையில் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்த நிலையில் மஹிந்த கூட்டணி இந்த முயற்சிக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது அவர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்தவே நாம் ஏனைய பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தோம்.
அதேபோல் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஏனைய தலைவர்களை ஒன்றிணைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எமது கூட்டணியை ஒன்றிணைக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஒன்றிணைக்க முயற்சிக்கவில்லை.
மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த முயற்சிக்கின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த கூட்டணி மற்றும் மைத்திரி கூட்டணியாக இவர்கள் செயற்பட்டாலும் தற்போது இருவருமே ஒரே கட்சியின் முக்கிய நபர்களாகவே உள்ளனர்.
ஆகவே இருவரையும் இணைத்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க மஹிந்த தான் தகுதியான வேட்பாளர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு 57 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளதை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது.
பெரும்பான்மை மக்கள் இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர். ஆயிரக் கணக்கிலான மக்கள் அவரை சென்று பார்க்கின்றனர்.
அவருக்காக நாம் ஏற்பாடு செய்துள்ள மக்கள் கூட்டங்களை வந்து பார்த்தால் உண்மை என்னவென்பது தெரியும். இன்று மக்கள் வரம் இல்லாத ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக உள்ளார்.
ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நடத்துகின்றது. மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவையே மட்டுமே கடந்த தேர்தலில் மக்கள் ஆதரித்தனர். எனவே மக்கள் விரும்பும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த ராஜபக் ஷவை களமிறக்குவதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அதற்கு ஜனாதிபதி இடம் கொடுக்க வேண்டும். அப்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்தவை களமிறக்காவிடின் வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இது குறித்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக் ஷவை களமிறக்குவது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்த போதிலும் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக் ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் களமிறக்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை பலப்படுத்த வேண்டுமாயின் மஹிந்த மீண்டும் கட்சியில் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இணக்கம் தெரிவிக்காவிடின் மூன்றாவது கட்சியாக களமிறங்குவோம்.
மஹிந்தவின் தலைமையில் கீழ் பலர் கைகோர்க்க தயாராகவே உள்ளனர். எனவே மூன்றாவதுகட்சியும் சாத்தியமானதே என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.