வவுனியாவில் கடத்தப்பட்ட 5 வயது சிறுமியொருவரை 10 இலட்சம் ரூபாய் கப்பம் செலுத்தி, அவரது பெற்றோர் தங்களது பிள்ளையை காப்பாற்றியுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான மேற்படி சிறுமி, பாலர் பாடசாலைக்கு சென்று திரும்பிய போது இனந்தெரியாதோர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சிறுமியை விடுவிக்க வேண்டுமாயின் 30 இலட்சம் ரூபாவினை கப்பமாக வழங்குமாறு குறித்த சிறுமியின் தந்தையை மேற்படி குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், தன்னிடம் அந்தளவு தொகைப் பணம் இல்லை என்று சிறுமியின் தந்தை கூறியதை அடுத்து, 10 இலட்சம் ரூபாவினை வழங்குமாறும் அப்பணத்தை, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் வைக்குமாறும் மேற்படி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, கொள்ளையர்கள் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை வைத்ததை அடுத்து, தங்களது மகள் விடுவிக்கப்பட்டதாக மேற்படி வர்த்தகர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் கூறினர்.

கப்பப் பணத்தை செலுத்துவதற்கு முன்னர், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தால், சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்திருக்கும் என்று தெரிவித்த பொலிஸார், எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Share.
Leave A Reply