ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப் பேசியிருந்தார். வரும் செப்டெம்பருக்குள் அவ்வாறான ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசு உருவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அவரைப் போலவே தமிழ்ப் பகுதிகளுக்கு வந்து போகும் மேற்கத்தேய தூதுவர்களும் இங்கு சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உள்ளாட்டுப் பொறிமுறையை ஆதரித்துக் கதைத்து வருகிறார்கள்.
அண்மையில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய லண்டன் சந்திப்பின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று என்று சந்தேகிக்கப்படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவான தமிழ்த் தரப்புக்களை ஒன்றுதிரட்டும் நோக்கிலானது என்று.
இது ஆட்சி மாற்றத்தின் பிரதான விளைவுகளில் ஒன்றெனக் கூறலாம். அதாவது, உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து அனைத்துலக சமூகம் முன்னெப்பொழுதையும் விட அதிகம் அழுத்தமாக உரையாடத் தொடங்கியிருக்கிறது என்பது.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் அவர்கள் நம்பிக்கை கொள்ள முடியாத ஒரு கடந்த காலமே இலங்கைத் தீவிற்கு உண்டு.
கடந்த சுமார் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட எல்லா ஆணைக்குழுக்களும் காலங்கடத்தும் நோக்கிலானவையாகவும் நீதிக்கான எதிர்பார்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலானவையாகவும் வெளிப்பார்வையாளர்களை பேய்க்காட்டும் நோக்கிலானவையாகவுமே காணப்பட்டன.
இவ்வாணைக் குழுக்கள் வெற்றிகரமாகச் செயற்பட்டு இருந்திருந்தால், அதன் மூலம் உண்மை கண்டு பிடிக்கப்பட்டிருந்தால், அல்லது நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் நந்திக் கடற்கரையில் அப்படி ஒரு பேரழிவு நடந்திருந்திருக்காது.
அதாவது, 2009 இற்கு முன் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகள் அனைத்தினதும் தோல்வியே நந்திக்கடற்கரையில் நிகழ்ந்த பேரழிவு எனலாம். அதற்குப் பின்னரும் கூட உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவும் முன்னைய ஆணைக்குழுக்களின் தொடர்ச்சியே என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
இத்தகையதோர் வரலாற்றுப் பின்னணியில் தான் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நாலாம்கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பொறுத்தவரை உள்நாட்டுப் பொறிமுறையை நம்பும் நிலையில் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இல்லை.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர்களில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் போதெல்லாம் அனைத்துலக விசாரணை ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புக்களும் உரையாடல்களும் அதிகரித்த அளவில் நிகழ்ந்து வந்துள்ளன.
இதை இன்னும் கூராகச் சொன்னால் மேற்கு நாடுகள் ராஜபக்ஷ அரசுக்கு எதிராக தமிழர்களின் விவகாரத்தை ஒரு கருவியாகக் கையாண்டு வந்ததன் விளைவாகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பிலான ஓர் அனைத்துலகப் பொறிமுறை மீதான கற்பனைகளும் எதிர்பார்ப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் உருவாகின எனலாம்.
ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின் அத்தகைய அனைத்துலக பொறிமுறை ஒன்றுக்கான வாய்ப்புக்கள் குறையத் தொடங்கிவிட்டன. அதாவது, வெளியாருக்காக காத்திருக்கும் அரசியலானது அதன் விரக்திக் கோட்டை நெருங்கத் தொடங்கிவிட்டது.
இந்த இடத்தில் இக்கட்டுரையானது தமிழ் மக்களை நோக்கி மூன்று முக்கிய கேள்விகளை கேட்கிறது.
கேள்வி ஒன்று – எந்தவொரு சக்திமிக்க நாட்டின் அரசுத் தலைவரோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரியோ அனைத்துலக பொறிமுறை ஒன்றைக் குறித்து தமிழ் மக்களுக்கு எப்பொழுதாவது வாக்குறுதிகள் எதையாவது வழங்கியிருக்கிறார்களா?
அல்லது எந்தவொரு சக்திமிக்க நாட்டினதும் உத்தியோகபூர்வ அறிக்கையில் அல்லது ஐ.நா. போன்ற அனைத்துலக நிறுவனங்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் அவ்வாறு அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் குறித்து எங்கேயாவது கூறப்பட்டுள்ளதா?
கேள்வி இரண்டு – அனைத்துலகப் பொறிமுறை ஒன்றுக்கூடாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படுமிடத்து அதன் இறுதிக்கட்டத்தில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு இலங்கைத் தீவில் போர்க்குற்றம் புரிந்தவர்களை தண்டிக்கத் தேவையான அரசியல் திடசித்தத்தை – (political will) எந்தவொரு சக்திமிக்க நாடாவது இதுவரை வெளிக்காட்டி இருக்கிறதா?
கேள்வி மூன்று – போர்க்குற்றங்கள் தொடர்பிலான அனைத்துலக விசாரணை எனப்படுவது உலகின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் ஒரேவிதமானதாகவும் எல்லாத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு சம நீதியை வழங்கத்தக்கதாகவும் காணப்படுகிறதா?
இம்மூன்று கேள்விகளுக்குமான விடைகளைச் சிறிது ஆழமாகப் பார்க்கலாம்.
அனைத்துலக பொறிமுறை ஒன்றைக் குறித்த தமிழ் மக்களின் விருப்பம் என்பது வேறு, அதற்கான அனைத்துலக யதார்த்தம் என்பது வேறு. மேற்கு நாடுகள் இனப்பிரச்சினைய ஒரு கருவியாகக் கையாண்டபோது தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்றைக் குறித்த கற்பனைகளை வளர்த்துக்கொண்டார்கள்.
மேற்கு நாடுகளும் அந்தக் கற்பனைகளைத் தடுத்து நிறுத்தாமல் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. ஆனால், எந்தவொரு சக்திமிக்க நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கையிலும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் குறித்துக் கூறப்பட்டிருக்கவில்லை.
தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் அப்படிப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆயின், தமிழ் மக்கள் அப்பாவித் தனமாக அப்படிப்பட்ட கற்பனைகளை வளர்த்துக்கொண்டார்களா? செயலின்றி வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியலின் விளைவா இது?
இதுவரையிலும் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் “இனப்படுகொலை, போர்க்குற்றம்” போன்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல கடைசியாக வந்த அறிக்கையில் தமிழ் மக்கள் என்ற வார்த்தையே இல்லை. இது எதைக் காட்டுகிறது?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அவற்றின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிளுக்குப் போகுமிடத்து அவை அனைத்துலக பொறிமுறை ஒன்றைநோக்கி நகரக் கூடும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இயல்பாகவே எழும்.
ஆனால், நவிப்பிள்ளை அம்மையார் இலங்கைக்கு வந்தபோது திருகோணமலையில் வைத்துக் கூறியது போல ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மட்டும் ஐ.நா அல்ல. அது ஐ.நாவின் ஓர் உறுப்பு மட்டுமே.
ஆனால், ஐ.நாவிற்கு வேறு பல உறுப்புக்களும் உண்டு. எல்லா உறுப்புக்களும் இணைந்தே ஓர் இறுதித் தீர்மானத்தை எடுக்கின்றன. ஆனால், அது ஒரு மனிதாபிமானத் தீர்மானமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
ஏனெனில், ஐ.நா. எனப்படுவது அரசுகளின் அரங்கம். அங்கே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான புவிசார் அரசியல் நலன்கள்தான் முதன்மையாகக் கவனிக்கப்படுமே தவிர நீதி நியாயங்கள் அல்ல. இதற்கு ஓர் ஆகப்பிந்திய உதாரணத்தைக் கூறலாம்.
கிழக்கு ஐரோப்பாவில், குரோசியாவில், சேர்பியா மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பிலான வழக்கை ஐ.நாவின் ஓர் அங்கமான அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice – ICJ) விசாரித்து வந்தது.
இந்த வழக்கிற்கு பதிலடியாக சேர்பியாவும் குரோசியாவிற்கு எதிராக இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஒரு வழக்கைத் தொடுத்திருந்தது. பதினாறு ஆண்டுகால விசாரணைகளின் முடிவில் இவ்வாண்டின் தொடக்கத்தில் அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில் இரு நாடுகளுமே இனப்படுகொலை செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேர்பியா, பொஸ்னியாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அண்மைய ஆண்டுகளில் சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றது.
அது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்றியும் இருக்கிறது. இந்நிலையில், சேர்பியாவைத் தண்டிக்கும் ஒரு தீர்ப்பை வழங்குமிடத்து அது குரோசியாவிற்கும் சேர்பியாவிற்கும் இடையிலான உறவை மேலும் பகை நிலைக்குத் தள்ளும். அதேசமயம், சேர்பியா ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதையும் பின்தள்ளும்.
எனவே, சேர்பியாவைத் தண்டிப்பதன் மூலம் அதை மேலும் தனிமைப்படுத்துவதா? அல்லது அதை அரவணைப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்துவதா என்ற கேள்வியே ராஜீய உறவுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும்.
இந்த அடிப்படையில் பரந்தகன்ற முழுமையான ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் சேர்பியாவை தண்டிப்பதை விடவும் அரவணைப்பதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கும். எனவே, இங்கு இனப்படுகொலை தொடர்பிலான நீதியை விடவும் நீண்டகால நோக்கிலான பிராந்திய நலன்களே அதிகம் கவனிப்பைப் பெற்றன.
இனி இரண்டாவது கேள்விக்கு வரலாம். இலங்கைத் தீவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் முக்கிய பிரதானிகளில் இருவர் அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர்கள். எனவே, இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையாக விசாரிப்பது என்று சொன்னால் அமெரிக்கா எப்பொழுதோ தனது பிரசைகளை விசாரிப்பதிலிருந்து அதைத் தொடங்கியிருந்திருக்கலாம்.
ஆனால், அவ்வாறான ஒரு விசாரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் தயாராகக் காணப்படவில்லை. பதிலாக ராஜபக்ஷ சகோதரர்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பணியவைப்பதே அவர்களுடைய உத்தியாகக் காணப்பட்டது.
இனியும் மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கில் ராஜபக்ஷ சகோதரர்களை முற்றுகைக்குள் வைத்திருப்பதற்கு அக்குற்றச்சாட்டுக்களை அவர்கள் அழுத்தப் பிரயோக உத்தியாகப் பயன்படுத்துவார்கள்.
ஆனால், அதன் அர்த்தம் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து தண்டிக்கப் போகிறார்கள் என்பதல்ல. அப்படித் தண்டிக்க முற்பட்டால் அது மாற்றத்தின் பங்காளிகளையும் தண்டிப்பதில் போய்முடியும். அது மாற்றத்தையே தோற்கடித்துவிடும். எனவே, மாற்றத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி உள்ள தென்னிலங்கைப் பிரமுகர்களைத் தண்டிக்கத் தேவையான அரசியல் திடசித்தம் (political will) மேற்கத்தேய நாடுகளிகளிடமும் இல்லை. இந்தியாவிடமும் இல்லை.
இனி மூன்றாவது கேள்விக்கு வரலாம். அனைத்துலக நீதி எனப்படுவது அனைத்துலக அரசியல்தான். நாடுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் நலன்களைவிட மேலான நீதி என்று ஒன்று கிடையாது. அப்படி நீதி நிலைநாட்டப்படுமாக இருந்தால் அது கூட ஏதோ ஒரு சக்திமிக்க நாட்டின் புவிசார் அரசியல் நலன்களின் பாற்பட்ட ஒரு தீர்ப்பாகவே இருக்கும்.
இந்த இடத்தில் மிகச் சமீபத்திய உதாரணம் ஒன்றை எடுத்துக்காட்டலாம். சூடானிய அரசுத் தலைவரான ஒமர் அல் பஷீர் அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார். அவர் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court-ICC) பிடியாணை ஒன்று உண்டு.
சூடானில் டார்பூர் பிராந்தியத்தில் மேலெழுந்த ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு அவர் மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக அவர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேற்கு நாடுகளுக்கு அவரைப் பிடிக்காது. 1990களின் தொடக்கத்தில் ஒசாமா பின்லேடனுக்கு அவர் புகலிடம் அளித்தார் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.
அதிலிருந்து தொடங்கி மேற்கு நாடுகள் அவரை முற்றுகைக்குள் வைத்திருக்கின்றன. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையை மீறி அவர் கடந்தவாரம் தென்னாபிரிக்காவிற்குச் சென்றார்.
இதற்கு முன்பு அவர் வேறு சில நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஆனால், அந்நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகள் அல்ல. ஆனால், தென்னாபிரிக்கா அந்நீதிமன்றத்தின் ஓர் உறுப்பு நாடு. கடந்த கிழமை அங்கு நடந்த ஆபிரிக்க ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அல் பஷீர் அங்கே போயிருந்தார்.
அவர் மீதுள்ள பிடியாணையை முன்வைத்து சில சிவில் சமூகக்குழுக்கள் தென்னாபிரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து அவரை தென்னாபிரிக்காவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. ஆனால், தென்னாபிரிக்கா அரசானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையையும் தனது சொந்த நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி அல் பஷீரைத் தப்பிச் செல்ல விட்டது.
தென்னாபிரிக்கா ஏன் அவ்வாறு நடந்துகொண்டது? அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமானது அண்மை தசாப்தங்களாக ஆபிரிக்கக் கண்டத்தின் மீதே அதிகளவு கவனத்தை குவித்து வருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு ஆபிரிக்கத் தலைவர்கள் மத்தியில் உண்டு. சில கிழக்கு ஐரோப்பிய பிரமுகர்களைத் தவிர அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவர்களே.
ஐ.நாவில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் பேரரசுகள் எதுவும் இந்நீதி மன்றத்தில் உறுப்பு நாடுகளாக இல்லை. அதேசமயம், ஆபிரிக்காவுக்கு வெளியே குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது நண்பர்களான தலைவர்களை சக்திமிக்க நாடுகள் தமது புவிசார் நலன்களின் பிரகாரம் பாதுகாக்க முற்படுகின்றன.
இஸ்ரேலிலுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு என்ன நடந்தது? இது விடயத்தில் சக்திமிக்க மேற்கு நாடுகளின் நிலைப்பாடுகள் என்ன? மாறாக வறிய ஆபிரிக்கக் கண்டத்தை அவர்கள் தண்டிக்க முற்படுகிறார்கள் என்று ஆபிரிக்கத் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இது ஒரு பாரபட்சமான நீதி என்று கூறும் அவர்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றீடாக ஒன்றிணைக்கப்பட்ட ஆபிரிக்க நீதிமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஒன்றிணைக்கப்பட்ட ஆபிரிக்க நீதிமன்றத்தைப் பலப்படுத்துவது என்பது மறைமுகமாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதுதான். தென்னாபிரிக்கா அல் பஷீரின் விடயத்தில் ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.
இது தவிர அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுகளின் பிரகாரமும் சூடானிய அரசுத்தலைவரை அவர்கள் பாதுகாக்க முற்பட்டிருக்கலாம். எதுவாயினும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை இங்கு அப்பட்டமாக அவமதிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, போர்க்குற்றங்களுக்கு எதிரான நீதியை விடவும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ராஜீய நலன்களுக்கும் பிராந்திய நலன்களுக்குமே இங்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அனைத்துலக நீதி எனப்படுவது அனைத்துலக அரசியல்தான்.
மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுத்து பின்வருமாறு பிழிவாகப் கூறலாம். போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அனைத்துலக பொறிமுறை எனப்படுவது ஈழத்தமிழர்களின் கனவுதான். அதற்குரிய அனைத்துலக யதார்த்தம் பலமாக இல்லை. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின் அக்கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி விரக்தி தரும் வகையில் அதிகரித்து வருகிறது.
அதாவது, வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியலானது வெளியாரால் கையாளப்படும் அரசியலாகவே கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தூரமாகிச் செல்லும் அக்கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கப் போகிறார்களா? அல்லது மிகக் குரூரமான யதார்த்தத்தை நோக்கிக் கனவை வளைக்கப் போகிறார்களா?
– நிலாந்தன் –