சென்னை: டைட்டானிக் படத்தின் ஒவ்வொரு பிரேமும் காதல் கொள்ளத் தக்கவை.. ஒவ்வொரு காட்சியும் பிரியத்துக்குட்பட்டவை.. அந்தப் படத்தின் டைட்டில் முதல் முடிவு வரை ஒவ்வொரு துளியையும் ரசித்துப் பார்த்துக் கொண்டாடியது இந்த உலகம்.. அந்த உலகத்தை மெய் சிலிர்க்க வைத்த அப்படத்தின் உயிர் நாடியான இசையைக் கொடுத்த ஜேம்ஸ் ஹார்னர்
தற்போது அகால மரணத்தைத் தழுவியுள்ளார். ஹார்னரின் இசை அற்புதமானது.. உயிரின் உள்ளே வரை ஊடுறுவிப் போகக் கூடிய இசையைக் கொடுத்தவர் டைட்டானிக் படத்தின் மூலமாக
உலகப் புகழ் பெற்ற மை ஹார்ட் வில் கோ ஆன் “My Heart Will Go On” பாடலை மறக்க முடியுமா… ஆனால் இந்தப் பாட்டு டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்டுக்கு மட்டும் பிடிக்கவில்லையாம்.
அதை விடுங்க, அதுவா இப்ப முக்கியம்.. உலகக் காதலர்களை மெய் சிலிர்க்க வைத்த, கண்விரிய வைத்த, கண்ணீர் விட வைத்த இந்தப் பாடலை மறக்க முடியாது.. ஹார்னருக்கு இதற்காகவே ஒரு சல்யூட் வைக்கலாம்.
அந்தப் பாடல் வரிகளை நீங்களும் ரசியுங்கள்…(ஆங்கிலத்திலிருந்து சுருக்கமான மொழிபெயர்ப்பு)
எனது இதயம் தொடர்ந்து செல்லும்
ஒவ்வொரு இரவும் எனது கனவுகளில்
உன்னை பார்க்கிறேன்.. உன்னை உணர்கிறேன்
தூரம் அதிகம் இருப்பினும்
இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகம் இருப்பினும்
நீ என்னுடன் இருப்பதை நான் உணர்கிறேன்
அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக நான் நம்புகிறேன்
மீண்டும் ஒரு முறை எனது இதயக் கதவைத் திறந்து பார்
எனது இதயத்தில் நீ இருப்பாய் எனது
இதயம் தொடர்ந்து செல்லும்.
காதல் ஒரு முறைதான் நம்மைத் தொட்டுச் சென்றது
ஆனால் அது காலம் முழுவதும் நம் கூட வரும்
எப்போதும் நம்மை விட்டு அது அகலாது
நாம் முடிந்து போனாலும்…!
நான் உன்னைக் காதலித்தபோது காதலையும் காதலித்தேன்
வாழ்க்கை முழுவதும் எப்போதும் நாம் சேர்ந்தே இருப்போம்
அருகிலோ, தூரத்திலோ, நீ எங்கு இருந்தாலும்
எனது இதயம் உன்னைத் தொடர்ந்து செல்வதாக நான் நம்புகிறேன்
மீண்டும் ஒரு முறை எனது இதயக் கதவைத் திறந்து பார்
நீ என் அருகில் இருக்கிறாய்.. எனக்கு எந்தப் பயமும் இல்லை
எனது இதயம் தொடர்ந்து செல்லும்..
நான் அறிவேன் நாம் இருவரும் சேர்ந்திருப்போம்..
இப்படியே என் இதயத்தில் நீ பத்திரமாய் எனது இதயம் தொடர்ந்து செல்லும்.. தொடர்ந்து செல்லும்…!
இந்தப் பாடல் வரிகளும் சரி, பாடலைல் பாடிய செலின் டயானும் சரி நம்மை உருக வைத்திருப்பார்கள் என்றால் ஹார்னரின் இசை நம்மை அழ வைத்திருக்கும்… டைட்டானிக் இதயங்கள் உள்ளவரை ஹார்னரின் நினைவும் தொடர்ந்து செல்லும்…