நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால் செரிமானம் நடைபெறுகிறது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உணவு செரிப்பது எப்படி?நாம் உண்ணும் உணவானது, நாக்கில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. நாக்கினால் உணவை புரட்டி, பற்களால் அரைத்ததும், தொண்டை வழியாக இரைப்பைக்கு செல்கிறது.இரைப்பைக்குள் உணவு குறைந்தது 4 மணி நேரமாவது இருக்கும்.
இரைப்பையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள் பல்வேறு மடிப்பு நிலையில் காணப்படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்குமாக சூழ்ந்திருக்கும்.
அந்த தசைகளின் உதவியால், இரைப்பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்கப்படும். இரைப்பையில் இருந்து வெளியாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரையாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக சிறுகுடலுக்குள் தள்ளப்படும். அங்குதான் உணவு முற்றிலும் ஜீரணமாகிறது.
உணவில் இருக்கும் புரதம், சர்க்கரை மாவு, நிணநீர் போன்றவை சிறுகுடலினால் ஜீரணிக்கப்பட்டு, அவை குடல் உறிஞ்சிகளால் ரத்தத்துக்குள் செலுத்தப்படுகின்றன.
இதற்கென்று கணையத்தில் தக்க அமிலங்கள் சுரக்கின்றன. சிறுகுடலின் தொடக்கத்தில் இடதுபுறமாக கணையம் இருக்கிறது. கல்லீரல் பித்தத்தை சுரக்கிறது.
கணையத்துக்கு ரத்தம் செல்லும்போது, இச்சுரப்பு கணையத்தை சுரக்கச் செய்கிறது. இந்த சுரப்புகள் ‘என்சைம்’ எனப்படும் வேதிப்பொருளாகும்.
என்சைம்களாலேயே நம் உடலில் ஜீரணம் நடைபெறுகிறது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறுகுடலின் சவ்வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்பதால், குடலுக்கு பலமடங்கு உணவு சத்துக்கள் கிடைக்கின்றன.
இதில் செல்லும் உணவானது ஜீரணமாகி, கல்லீரலில் சத்தான அமிலங்களாக சேமிக்கப்படுகின்றன.மிகுதியாக உள்ளவை, ரத்தத்தின் கலவையாக மற்ற உறுப்புகளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்துக்கள் நீங்கிய திப்பிகள் பெருங்குடலுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.
மலத்துக்கு ஈரம் கொடுப்பதற்கு வேண்டிய அளவு போக, மிகுதியான நீர்ப்பகுதி ரத்தத்தில் நீக்கப்படும்.மேலும் கடினமான கழிவுகள், பித்தம், பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் எல்லாம் சளியோடு சேர்ந்து, பெருங்குடலில் உள்ள தசைகளால் ஆசனத்துக்குள் தள்ளப்படும்.
இது, பொதுவாக நடைபெறும் உணவு செரிமானமாகும். மேற்கூறிய உறுப்புகளில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரிமானம் ஆவதில் குளறுபடி ஏற்படும்.
ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு சக்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
நாக்கு ருசிக்காக அடிக்கடி சாப்பிடாமல், பசித்தபின் உணவருந்த வேண்டும். அதிகளவு உணவு, அடிக்கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாச் சத்து உணவுகளை அதிகம் சேர்ப்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகளை நிறைய சாப்பிடுவதால் நமக்கு ஜீரண கோளாறுகள் வரலாம்.
ஜீரண கோளாறை தடுப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய இடர்பாடுகளை களைய, ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன.
1. ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.
2. திராட்டை பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்கலாம். கொய்யா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து சாப்பிடலாம்.
கொத்தமல்லி விதையை வறுத்து சாப்பிட்டால், ஜீரணமாகாமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முதலியவற்றை 100 கிராம் எடுத்து, இவற்றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
ஒரு பங்கு வசம்புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷாயமாக வடிகட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும்.
ஒரு துண்டு இஞ்சியை நன்றாக அரைத்து, ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும்.
சுக்கு, இலவங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!
‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழலாம்.