சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை கோயம்பேடு தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல் முறையான ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண் பைலட்டுகளும் இடம் பெற்றுள்ளனர்.
பிரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளுக்கும் தற்போது 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
பின்னர் அவர்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து, மெட்ரோ ரயிலை இயக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரீத்தி கூறுகையில்,” மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது.
முதலில் எனக்கு புறநகர் ரயில் இயக்கும் வேலையில் சேரதான் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே மெட்ரோ ரயிலில் வேலை கிடைத்து விட்டது” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
ஜெயஸ்ரீ கூறுகையில், “பரீட்சாத்த முறையில் முதலில் நாங்கள் பணிமைனைக்குள்ளேயே மெட்ரோ ரயிலை இயக்கி பழகினோம். அதில் சிறப்பாக செயல்பட்டதால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க நியமிக்கப்பட்டோம்” என்கிறார்.
உலகில் பைலட்டுகளே இல்லாத மெட்ரோ ரயில்களும் உள்ளன. அது போன்ற மெட்ரோ ரயில்களும் விரைவில் சென்னையில் ஓட வாய்ப்பிருக்கிறது.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா! (படங்கள்)
சென்னை: சென்னை ஆலந்தூர்- கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2வது வழித்தடமான சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்கள், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.