சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட்டும் காலியாகியுள்ளது.

“தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு, பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. என்னைப் பொருத்தவரையில் மகத்தான வெற்றி பெறுவதுதான் லட்சியம்” இது கடந்த வாரம் ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் கர்ஜனை.

எனக்கு எல்லாமே மக்கள்தான். மக்களால் நான்… மக்களுக்காக நான்… எனது அரசு நிறைவேற்றியுள்ள சமூக நலத்திட்டங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சீர்தூக்கிப் பார்த்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் ஜெயலலிதா.
27ம் தேதியன்று நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.4 சதவிகித வாக்குகள் பதிவானது. இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.
ஜெயலலிதா கேட்டுக்கொண்டது போலவே ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள் அவருக்கு 1,60,432 வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை பரிசளித்துள்ளனர்.
1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உட்பட 27 பேரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
இது தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாகும். எதிரிகளை களத்திலேயே காணோம்… எதிர்த்தவர்களையும் காணோம் என்று ஜெயலலிதா இனி அறிக்கை விட்டாலும் ஆச்சரியமில்லை.

 

Share.
Leave A Reply