மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஒடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்றபெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இதையொட்டி கமல்ஹாசன் ஆழ்வார் பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- மலையாள ரீமேக் படத்தில் நடிக்க அவசியம் என்ன?

பதில்:- நல்லது செய்ய வேண்டும் என்பது தான் காரணம். மலையாளத்தில் மோகன்லால் நடித்து இருந்த இந்த படம் சிறந்த படமாக அமைந்தது.

கன்னடம் தெலுங்கில் ரீமேக் செய்தும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை என் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்ற உந்துதலில் ரீமேக் செய்து நடித்தேன். சில நல்ல கதைகள் தானாக எனக்கு வரும் அப்படி வந்த படம்தான் பாபநாசம்.

கேள்வி:- கவுதமி, இந்த படத்தில் நாயகியாக நடிக்க யார் காரணம்.

பதில்:- பாபநாசம் படத்தின் டைரக்டர் ஜீத்துஜோசப் தான் காரணம். அவர் தான் என்னிடம் கவுதமியை நடிக்க வைக்கலாம் என்றார். எனக்கு தயக்கமாக இருந்தது. தயாரிப்பாளரும் கவுதமி நடிப்பதை விரும்பினார்.

எழுத்தாளர் ஜெயமோகனும் கவுதமி பொருத்தமாக இருப்பார் என்றார். எனவே நானும் ஒப்புக்கொண்டேன். படத்தை பார்த்த பிறகு எல்லோரது முடிவும் சரியாக இருந்தது தெரிந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்து இருந்தார்.

கேள்வி:- எஸ்.எஸ்.ராஜேந்திரன் புராண படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து இருந்தார். நீங்கள் தசாவதாரம் படத்தில் விபூதி பூசி நடித்தீர்களே.

பதில்:- தனிமனித கொள்கை வேறு, சினிமா வேறு சில விஷயங்கள் படங்களில் மேலோட்டமாக இழையோடும் என் படங்களும் அப்படித்தான் இருக்கும் திணிப்பு இருக்காது. சாதியை போற்றும் படங்களில் நான் நடிப்பதில்லை.

கேள்வி:- பாபநாசம் படப்பிடிப்பின் போது நாங்குனேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளை சந்தித்தீர்களே?

பதில்:- பாபநாசம் படப்பிடிப்பு நடத்த இடம் தந்து உதவினார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்தேன். மனிதம் முக்கியம். மதம் இல்லாமல் போனாலும், மனிதம் இல்லாமல் போகாது, எல்லா ஆட்களையும் மனிதராக பார்க்கிறேன். அவர் ஜீயரா அய்யரா என்றெல்லாம் பார்ப்பது இல்லை.

கேள்வி:- பாலியல் குற்றமே பாபநாசம் படத்தின் கரு சமூகத்தில் இக்குற்றங்கள் அதிகரிக்கிறதே?

பதில்:-ஒரு பெண் நகைகளுடன் நள்ளிரவில் தனியாக செல்லும் போதுதான் முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இப்போது அந்த நிலை இல்லை.

பஸ்சுக்குள்ளேயே கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. ஒவ்வொருவரும் தானாக திருந்தினால் தான் இக்குற்றங்கள் குறையும்.

குப்பைகள் இல்லாமல் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்து இருப்பது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் அதை செய்வது இல்லை. பிரதமர் தூய்மை இயக்கத்தை துவக்கி குப்பைகளை அகற்றும்படி வற்புறுத்த வேண்டி உள்ளது. ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு வேண்டும்.

கேள்வி:- பாலியல் குற்றங்களை தடுக்க கடும் தண்டனை வேண்டும் என்கிறீர்களா?

பதில்:- கடும் தண்டனை என்பது மரண தண்டனை. நான் மரண தண்டனையை ஆதரிப்பது இல்லை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்காலில் இட்டதையும் நீதியாக கருதமாட்டேன்.

ஆயுள் தண்டனையிலும் எனக்கு மறுப்பு உண்டு. மஞ்சள் கோட்டை தாண்டக்கூடாது என்று போக்குவரத்து விதி இருக்கிறது.

அந்த விதியை பின்பற்றி மஞ்சள் கோட்டை தாண்டாமல் இருப்பதை ஒவ்வொருவரும் தங்களின் கடமையாக நினைக்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது உயிரை பாதுகாக்க கூடியது. சினிமா நடிகர்கள் அணிய வில்லையே என்று வாதம் செய்யக்கூடாது. படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு நிறைய ஆட்களை வைத்துக்கொண்டு தான் அவர்கள் நடிக்கிறார்கள்.

கேள்வி:- மருதநாயகம் படம் ஏன் வரவில்லை.

பதில்:- அந்த படத்துக்கு ’பைனான்ஸ்’ செய்த அமெரிக்கர்கள் கைவிட்டு விட்டனர்.

கேள்வி:- இவ்வளவு வயதிலும் உடம்பை கட்டுக் கோப்பாக வைத்து இருக்கிறீர்களே என்ன சாப்பிடுகிறீர்கள்.

பதில்:- என் பெற்றோர் சொல்லி தந்த உணவை சாப்பிடுவது இல்லை. சிறுவயதிலேயே அசைவத்துக்கு மாறி விட்டேன். கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். பாக்கு போடும் பழக்கம் இருந்தது. அதை விட்டு விட்டேன். சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தி விட்டேன்.

கேள்வி:- யாருடன் நடிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.

பதில்:- நடிகர் ரங்காராவுடன் கடைசி வரை நடிக்க முடியவில்லை. அந்த ஆதங்கம் எனக்குள் உள்ளது.  இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Share.
Leave A Reply