ஈழத் தமிழ் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கட் போட்டி ஒன்றில் விளையடிக்கொண்டிருந்த போது மார்பில் பந்து விசையுடன் தாக்கியதால் மரணம் அடைந்துள்ளார்.
பிரித்தானியாவில் வருடாந்தம் பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டி சறே சேர்பிற்றன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் நடைபெற்றபோதே அந்தப்போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த பத்மநாதன் பாவலன் என்ற 24 வயது இளம் விளையயாட்டு வீரர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் ஒரு சகலதுறை ஆட்டக்காரராவார். இவர் மானிப்பாய் பரீஷின் கழகத்துக்காக விளையாடிவந்தார்.
பந்தினால் தாக்கப்பட்ட பாவலனின் நெஞ்சுப்பகுதியில் ஏற்ப்பட்ட தாக்கம் காரணமாக உயிருக்கு போராடியபோது, விசேட அம்புலன்ஸ் வண்டிகளிலும், உலங்குவானூர்தியிலும் மைதானத்துக்கு விரைந்த வைத்தியர்கள் அவரை காப்பாற்ற கடுமையாகப் போராடியபோதும், முதலுதவிகள் எதுவும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
பிரித்தானியாவில் கோடைக் காலதின் வார இறுதிநாட்களில் பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனம் நடத்திவரும் இந்த கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. சுமார் நாற்பதுக்கும் அதிகமான விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வது வழமை.
பாவலனின் இந்த மரணச் செய்தி சறே கிரிக்கட் கவுன்சிலில் உள்ள அனைவர் மத்தியிலும் சகல கிரிக்கட் சமூகங்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது இழப்புக் குறித்து அவரது குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் தமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவிதுக்கொள்வதாகவும் சறே கிரிக்கட் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் கௌல்ட் தெரிவித்துள்ளார்.