எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரட்டைக் கொடி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக   தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வேட்பு மனுத்தாக்கல் நிறைவடையும் நேரமான நண்பகல் 12 மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக தானும் சுயேச்சைக் குழுவாக வேட்புமனுத்தாக்கல் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ ஒரு போர் குற்றவாளி, அவரை சிங்கள மக்கள் நிராகரித்துள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நானும் களமிறங்கியுள்ளேன்.

எனது சின்னம் இரட்டைக்கொடியாகும். என்னோடு இணைந்து 18 தமிழர்கள் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள்.

நல்லாட்சி என்று கூறி நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு சந்தர்ப்பம் அளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிராகவும் போர்க்குற்றம் தொடர்பில் தமிழ்மக்களின் எதிபார்ப்புகளுக்கு முரணாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கும் நான் தீர்மானித்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply