தாங்கள் ஒரு நாளில் ஐந்து முறை வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக இராக்கில் ஐஎஸ் குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த யஸீதி மதச் சிறுபான்மையினர் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் குழுவினரிடம் சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு ஆளானதாகத் தெரிவிக்கின்றனர் யஸீதி பெண்கள்.
ஒராண்டிற்கு முன்பாக, இராக்கில் யஸீதிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் படையெடுத்ததையடுத்து, அவர்கள் சிஞ்சார் என்ற மலைப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது யஸீதி இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டனர். இளம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர்.
அங்கிருந்து தப்பித்த சிலர், தமக்கு நேர்ந்த கொடூரத்தை பிபிசியிடம் நினைவுகூர்ந்தனர். இன்னும் ஐஎஸ் பிடியில் உள்ள தமது உறவுகளுக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை.
ஐஎஸ் படைகள் வடக்கு இராக்கில் உள்ள யஸீதி கிராமங்களில் நுழைந்தபோது, அவர்களை சாத்தானை வழிபடுபவர்கள் என வர்ணித்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு பெண்களைக் கவர்ந்து சென்றது.
அப்படிப் பிடித்துச் செல்லப்பட்ட இருபது வயதுப் பெண்ணான புஷ்ரா, “ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம். கடுமையாக அடிவாங்கினோம்” என்று தெரிவித்தார்.
“முஸ்லிமாக மாற வேண்டும். எங்கள் மதத்தை துறந்துவிட வேண்டும். ஏனென்றல் அது மனிதர்களுக்கான மதமல்ல; மிருகங்களுக்கானது என்று சொன்னார்கள். மறுத்த மூத்த பெண்களை உடனடியாக தலையை வெட்டி அவர்கள் கொலைசெய்தனர்” என்று புஷ்ரா தெரிவித்தார்.
அறுபது வயது ஐஎஸ் தலைவர் ஒருவர் முனீரா என்ற பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியபோது அவருக்கு பதினைந்தே வயதுதான் ஆகியிருந்தது.
“நீ கன்னியாக இருந்ததால் உன்னோடு உறவுகொண்டேன். இப்போது நீ எனக்கு சலித்து விட்டாய். எனக்கு வேறு கன்னிப் பெண் வேண்டும் என்று சொல்லி வேறொரு ஆளுக்கு விற்றுவிட்டார். அவரும் கொஞ்ச நாள் அனுபவித்துவிட்டு, இன்னொரு ஆளுக்கு என்னை விற்றார்” என்கிறார் முனீரா.
கடைசியாக முனீரா விற்கப்பட்ட விலை ஐநூறு டாலர்கள். ஐ எஸ் படைகளிடம் சிக்கி, பத்து வாரங்களுக்குப் பின்னர் புஷ்ராவுக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், இப்படியான வாய்ப்பு மிகச் சில பேருக்கே வாய்த்தது. சுமார் ஐயாயிரம் யஸீதி நங்கையர் இராக்கிலும் சிரியாவிலும் இன்னமும் ஐஎஸ் ஆயுததாரிகளால் பாலியல் அடிமைகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.