“நான் கடந்த சில வரு­டங்­க­ளாக பெண் ஒரு­வரைக் காத­லித்து வரு­கின்றேன். ஆயினும், என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை. ஆரம்­பத்­தி­லி­ருந்தே என் தந்­தைக்கு நான் காத­லிக்கும் பெண்ணைப் பிடிக்­க­வில்லை.

இதனால் எனது காதலை ஏற்க மறுத்து விட்டார். ஒரு நாள் என்­னு­டைய காத­லியின் வீட்­டுக்கு நான் சென்றிருந்த போது எனது தந்தை அங்கு வந்து எனது காத­லி­யையும், என்­னையும் தகாத வார்த்­தை­க­ளினால் திட்­டி­விட்டு என் கரங்­களை இறு­கப்­பற்றி இழுத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

பின் தந்­தையின் முச்­சக்­க­ர­வண்­டியில் என்னைக் கூட்டிக் கொண்டு வீட்­டுக்கு வந்­து­விட்டார். அதன்பின் வீட்டின் சமை­ய­லறை மூலை­யி­லி­ருந்த  இரும்புக் கம்­பி­யொன்றை எடுத்து என்னை அடித்தார்.

அந்த இரும்புக் கம்பி என் உடலைப் பதம் பார்க்­கவே நான் வலியால் “அப்பா அடிக்­கா­தீங்க, அடிக்­கா­தீங்க” என்று பல­மாகக் கத்­தினேன்.

எனினும், அப்பா அதைச் சிறிதும் காது கொடுத்துக் கேட்­க­வில்லை. இறு­தியில் அப்­பாவின் கையி­லி­ருந்த இரும்புக் கம்­பியை வாங்கி அப்­பாவைத் தாக்க ஆரம்­பித்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு இருந்த கோபம் தந்தை- மகன் உறவு, பந்­த­பாசம் என்­ப­வற்றை மறைத்­தது. எனவே தான், ஆத்­திரம் தீரும்­வரை என் அப்­பாவைத் தாக்­கினேன்.

அப்­போது அப்­பாவின் தலையில் ஏற்­பட்ட பலத்த காயத்­தினால், தலையில் இருந்து இரத்தம் கசிய ஆரம்­பித்­தது. பின் அப்பா மயங்கிக் கீழே வீழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பா என்று கூடப் பார்க்­காமல் அப்­பாவின் உடலைத் தாண்டிக் கொண்டு வெளியில் வந்து முச்­சக்­கர வண்­டியில் ஏறி அங்­கி­ருந்து தப்­பி­யோ­டினேன்“

இது மாவ­னல்லை பிர­தே­சத்தில் தந்தை ஒரு­வரைக் கொலை செய்த குற்­றத்தின் பேரில் மாவ­னல்லை குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் கைதான சந்­தேக நபரின் வாக்­கு­மூ­லத்தின் ஒரு பகுதியாகும்.

மாவ­னல்லை பட­வல பிர­தே­சத்தை வதி­வி­ட­மாகக் கொண்ட 42 வய­தான விம­ல­சேன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்­தையே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டவர் ஆவார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அவரின் 23 வயதான மகனாவார்.

அன்று மாவ­னல்லை பொலிஸ் நிலை­யத்­துக்கு 119 அவ­சர அழை ப்பு சேவையின் ஊடா­கவே மேற்­படி தகவல் கிடைத்­தது.

இதனைத் தொடர்ந்து, மாவ­னல்லை குற்­றத்­த­டுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதி­கா­ரி­களை கொண்ட குழுவொன்று  மாவ­னல்ல பட­வல பிர­தே­சத்தை நோக்கி விரைந்­தது.

எனினும், அப்போது உயி­ருக்குப் போரா­டிய நிலையில் விம­ல­சேன மாவ­னல்லை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்தார்.

எனவே, விம­ல­சே­னவை அங்கு சென்று பார்­வை­யி­டு­வ­தற்­காக பொலிஸ் அதி­கா­ரி­களைக் கொண்ட குழு சென்றது. எனினும், அவர்கள்  அங்கு சென்­ற­போது விம­ல­சே­னவின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையின் ஊடாக சடலம் பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் இக்­கொலைச் சம்­பவம் தொடர்­பாக தமது மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். அதன்­படி, சம்பவம் நடை­பெற்ற இட­மான மாவ­னல்லை பட­வல பிர­தே­சத்தை நோக்கிச் குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் சென்றனர். அங்கு விம­ல­சே­னவின் மனை­வி­யிடம் இது தொடர்­பாக வின­விய போது,

“என்­னு­டைய மூத்த மக­னுக்கும் உஷா­ பி­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கும் இடையில் சில வரு­டங்­க­ளாக காதல் தொடர்­பொன்று இருந்து வரு­கின்­றது.

நானும் எனது கண­வரும் இது தொடர்பில் அறிந்தே இருந்தோம். எனினும், என்ன கார­ண­மென்று தெரி­ய­ வில்லை, என்­னு­டைய கண­வ­ருக்கு இது பிடிக்­க­வில்லை.

மக­னு­டைய காதல் விவ­காரம் அறிந்த நாள் முதல் கணவன் இந்தக் காதல் தொடர்பை துண்­டித்து விடு­மாறு, தினமும் மக­னிடம் கூறுவார் ஆயினும், மகனோ பிடி­வா­தக்­காரன்.

கணவன் எத்­த­கைய தகாத வார்த்­தை­க­ளினால் திட்­டி­னாலும் அவற்­றை­யெல்லாம் கேட்டுக் கொண்டு இருப்­பானே தவிர, அந்த பெண்­ணு­ட­னான காதல் தொடர்பை துண்­டிக்க நினைக்­க­வில்லை.

இதனால், என்­னு­டைய கண­வ­ருக்கு மகன் மீது இன்னும் கோபம் அதி­க­ரித்­தது. ஒரே வீட்டில் இருந்­த­போதும் இரு­வரும் கீரியும் பாம்பும் போலவே நடந்­து­கொண்­டார்கள்.

சம்­பவம் இடம்­பெற்ற தின­மான அன்று மகன், காத­லிக்கும் பெண்ணின் வீட்­டுக்கு சென்­றி­ருந்தான். இதை எப்படியோ என்­னு­டைய கண­வ­ருக்குத் தெரி­ய­வர மகனைத் தேடி அங்கு சென்றார்.

அப்­போது அவ­ரு­டைய முச்­சக்­கர வண்­டி­யி­லேயே அங்கு சென்று மகனை அடித்து, வீட்­டுக்கு கூட்டி வந்தார். வீட்­டுக்கு வந்ததும் இரும்புக் கம்­பி­யொன்றை எடுத்து மகனை அடித்தார்.

அடிக்கும் போது இனிமேல் அந்த பெண்ணின் வீட்­டுக்குச் சென்றால் உன் காலை உடைத்து முட­மாக்கி விடுவேன் என்று கூறிக் கொண்டே அடித்தார்.

அதன்பின் தான் மகன் கண­வ­ரு­டைய கையி­லி­ருந்த இரும்புக் கம்­பியைப் பறித்து கண­வனைத் தாக்கி விட்டு முச்­சக்­கர வண்­டியில் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டினான்.

நான் கண­வனை மகன் அடிக்கும் போது “அப்பா வய­தா­னவர் அடிக்­கா­தடா” என்று கெஞ்சி மன்­றா­டினேன். எனினும், இந்த அப்­பாவி தாயின் அழு­குரல் அவன் காதில் கேட்­கவே இல்லை.

என்­னு­டைய ஒவ்­வொரு முயற்­சியும் தோல்­வி­யி­லேயே முடிந்­தது. தலையில் ஏற்­பட்ட பலத்த காயத்­தினால் மயங்கி கீழே விழுந்தார்.

பின் நான் பலத்த குரலில் கத்­தினேன். என் சத்­தத்தை கேட்டே அய­வ­லர்கள் ஓடி வந்து முச்­சக்­கர வண்­டியில் எனது கண­வரை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

ஆயினும், பலன் கிடைக்­க­வில்லை. வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழி­யி­லேயே கணவர் இவ்­வு­லக வாழ்­வி­லி­ருந்து விடை­பெற்றுச் சென்­று­விட்டார். தந்­தையும் மகனும் போட்ட சண்­டையில் நானும் எனது இளைய மக­னுமே ­இன்று் அநா­தை­க­ளாகி நிற்­கின்றோம்.” என்று கண்ணீர் மல்க நடை­பெற்ற சம்­ப­வத்தை விம­ல­சே­னவின் மனைவி விப­ரித்தார்.

அதன்பின் பின் சந்­தேக நப­ரான விம­ல­சே­னவின் மகனை கைது செய்து இது தொடர்­பாக விசா­ரித்­த­போது,

“நான் காத­லிக்கும் பெண்ணின் முன்­பாக எனது அப்பா தகாத வார்த்­தை­க­ளினால் திட்­டினார்.  அடித்தார். என்னால் அந்த அவ­மா­னத்தை தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. வெட்­கத்தில் தலை குனிந்தேன்.

ஆயினும், அப்பா தானே என்று எல்­லா­வற்­றையும் பொறுத்துக் கொண்டு மௌன­மாக வீட்­டுக்கு வந்தேன். இருந்தாலும், அப்பா வீட்­டுக்கு வந்தும் அந்த பிரச்­சி­னையை விடு­வதாய் இல்லை.

வீட்­டி­லி­ருந்த இரும்புக் கம்­பியை எடுத்து என்னை அடித்தார். இதனால் தான் தந்­தையின் கையி­லி­ருந்த அதே இரும்புக் கம்­பி­யைப்­ப­றித்து அவரை நானும் தாக்­கினேன்.

இறு­தியில் தந்தை பலத்த காயத்­துடன் நிலத்தில் விழ, நான் , அங்­கி­ருந்து முச்­சக்­கர வண்­டியில் தப்பியோடினேன். நான் தந்­தையை அடித்த போது என்­னு­டைய தாயும், இளைய சகோ­த­ர­னுமே அரு­கி­லி­ருந்­தார்கள்.

நான் அந்தப் பெண்ணை திரு­மணம் செய்­து­கொள்ளும் நோக்­கு­ட­னேயே காத­லித்தேன். அவளை நான் உண்­மை­யாகக் காத­லித்தேன். எனினும் அப்­பாவின் இந்த செயற்­பா­டு­க­ளினால் நான் இன்று அவ­ளையும் இழந்து விட்டேன், என்­னு­டைய வாழ்க்­கை­யையும் இழந்து விட்டேன்.

பெற்ற தந்தை என்று கூட பார்க்­காமல் கொலை செய்த ஒரு கொலை­யா­ளி­யா­கவே அவள் இனிமேல் என்னைப் பார்ப்பாள். இவை­யெல்­லாமே நடை­பெற்­றது என்னுடைய கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தான் ஆகும்.”

என்று கண்ணீருடன் தான் செய்த குற்றத்தினை ஒப்புக்கொண்டு பொலிஸ் விசாரணையின் போது கூறியிருந்தான்.

இக்கொலைச் சம்பவமானது மகனின் காதல் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தான் இறுதியில் தந்தையின் உயிரைக் குடித்தது. என்பது பொலிஸாருக்கு உறுதியானது.

எது எவ்வாறாயினும், இன்றைய இளம் சமூகத்தினரை அணுகும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தவறுமாயின், இத்தகைய பாரதூரமான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்பது மேற்படி சம்பவம் ஒரு சிறந்த உதாரண மாகும்.

Share.
Leave A Reply