லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் மரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்க உதவாமல், சிறுமியின் சடலத்தை செல்போனில் படம் பிடித்ததால், சிறுமியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
9ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, காலையில் வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 14 மணி நேரத்திற்குப் பின்னர் அச்சிறுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரத்தில் இருந்து சிறுமியின் உடலை மீட்காமல் தங்களது செல்போனில் அதனை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்களே மரத்தில் ஏறி சிறுமியின் உடலை கீழே இறக்கினர்.சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பதற்கு முன்னர் அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து தகவல்கள் தெரிய வரும். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.