வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் அதிகாரப்பகிர்வுக்கு செல்ல முடியாது.
அதிகாரப்பகிர்வுக்கு சென்று நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டை நாம் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம். ஆனால்
ரணில் – -சம்பந்தன் கூட்டணி நாட்டை பிரிக்கும் உடன்பாட்டில் தான் கைகோர்த்துள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவு தேவைப்படாது. அதேபோல் எந்த சந்தர்ப் பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத் தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனமானது
வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைத்த தமிழர் தாயகமாகும். அவர்களது சுய நிர்ணய கோரிக்கையானது நாட்டில் மீண்டுமொரு பிரச்சினைக்கு வித்திட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அது அவ்வாறு இருக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் முக்கிய பங்குதாரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஓரணியில் தான் செயற்படுகின்றனர். ஆகவே இவர்களது தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தமிழீழத்தை ரணில் நிச்சயமாக பெற்றுக்கொடுப்பார். அதற்கான காய்நகர்த்தல்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதேபோல் ரணில், சம்பந்தன் கூட்டணியின் புதிய உறுப்பினராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசானாயகவும் கைகோர்த்துள்ளார். இவர்களின் பிரிவினைவாத செயற்பாடுகளை இந்த ஏழு மாதகாலத்தில் மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.
அதேபோல் தொடர்ந்தும் இவர்களுக்கு மக்கள் அனுமதி வழங்கினால் இந்த நாட்டில் மீண்டுமொரு ஆயுதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்படும். கடந்த காலத்தில் நாம் ஆயுத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.
ஆகவே நாம் வென்றெடுத்துள்ள சமாதானத்தை மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர்த்திவிடக் கூடாது.
கேள்வி :-எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆட்சியை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படுமாயின் ?
பதில் :- இந்த கேள்விக்கு என்னால் பதில்கூற முடியாது. எதிர்காலத்தை எங்களால் அனுமானிக்கவும் முடியாது. ஆனால் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துடன் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்ளும் நிலைபாட்டில் நாம் இல்லை.
அதேபோல் கூட்டமைப்பின் தயவில் ஆட்சியை அமைக்கும் நிலைமை ஒன்றும் வரப்போவதில்லை. ஏனெனில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நாம் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதேபோல் நாம் அதிகாரத்துக்கு வந்தால் எதிர்க்கட்சியில் இருந்து பலர் எம்முடன் வந்து கைகோர்ப்பார்கள்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை தானே முன்வைத்துள்ளனர்.அதிகாரப் பகிர்வுக்கு நீங்கள் தயார் இல்லையா?
பதில் :- வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்த்துள்ளதா. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான நிலையில் செயற்பட்டு வருகின்றதா.
இரண்டுபேருமே தமது சுயநல அரசியலை செய்கின்றனர். வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை அதிகாரப் பகிவுக்கு செல்ல முடியாது. நாம் கடந்த காலத்தில் 13 ஐ வழங்கும் ஒரு நிலைப்பாட்டிலும் இருந்தோம்.
ஆனால் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளையும் யுத்தத்தையும் கவனத்தில் கொண்டே அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. எதிர்கால நிகழ்வுகளை வைத்து இந்த விடயங்களா தொடர்பில் சிந்திக்கலாம்.