வடக்கில் சட்டத்தை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, ராஜபக் ஷ சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கத் தொடங்கியுள்ளனர்.
தான் பதவியில் இல்லாத காலத்தில், வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்தேற்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பல வாரங்களுக்கு முன்னரே கூறத் தொடங்கிவிட்டார்.
கடந்தவாரம் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய போதும் சரி, ஏனைய இடங்களில் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதும் சரி, வடக்கில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து விட்டதாகவும் அங்கு குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் புலம்பி வருகிறார்.
இப்போது, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக் ஷவும், அதேவழியில், வடக்கில் குற்றச்செயல்கள் தலைதூக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
யட்டிநுவரவில் கடந்த வாரம் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் அக்கறையீனத்தினால், வடக்கில் சட்டத்துக்கு விரோதமான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இது போன்ற நிலை தான் 1980களிலும் காணப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை கவனிக்காது விட்டால், நாட்டில் மீண்டும் போர் ஒன்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்றால், அவை எத்தகைய சுவரொட்டிகள் என்பது முக்கியமான விடயம்.
தேர்தலுக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளும் சட்டத்துக்கு முரணானது தான்.
அதேவேளை, பிரிவினைவாதம் அல்லது தனிநாட்டுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுவதும் சட்டவிரோதம் தான். ஆனால், அத்தகைய சுவரொட்டிகள் ஏதும் இப்போது ஒட்டப்பட்டதான தகவல்களோ செய்திகளோ வெளியாகவில்லை.
முன்னரென்றால், கோத்தாபய ராஜபக் ஷவுக்கு, அத்தகைய ஒரு சில சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவரது காதுக்கு புலனாய் வுப் பிரிவினர் மூலம் தெரிய வந்திருக்கும்.
ஆனால், தனக்கு இப்போது புலனாய்வு அறிக்கைகள் வருவதில்லை எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று சில வாரங்களுக்கு முன்னர்தான் அவர் கூறியிருந்தார்.
எனவே, புலனாய்வு பிரிவு மூலம் கோத்தாபய ராஜபக் ஷவுக்குத் தகவல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதேவேளை, தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் சட்டத்தை மீறி சுவரொட்டி மூலம் பிரசாரம் செய்யும் வழக்கம், வடக்கில் இருப்பதை விட தெற்கில் தான் அதிகம்.
கோத்தாபய ராஜபக் ஷ குறிப்பிட்ட சட்டமீறல்கள் தேர்தல் பிரசார சுவரொட்டிகளைத் தான் குறிக்கிறது என்றால், அவர் ஆதரவு தேடிப் பிரசாரம் செய்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுவரொட்டிகள் தான் வடக்கில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இதுபோன்ற மீறல்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டியுள்ள நிலையில், வடக்கின் மீது பயங்கரவாதச் சாயத்தைப் பூசுவதற்கு ராஜபக் ஷவினர் முனைவது அபத்தமானது.
வடக்கில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு வாய்ப்பில்லை, அதற்கேற்றவாறு புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்தி, தக்க பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, அரசாங்கத்தில் இருந்தபோது கூறிவந்த கோத்தாபய ராஜபக் ஷ தான், இப்போது வெறும் சுவரொட்டிகளை வைத்து 1980களின் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலைமையை கவனிக்காது போ னால் நாட்டில் மீண்டும் போர் வெடிக்கும் என்று அவர் கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
போரை வைத்து எப்படியெல்லாம் பிழை ப்பு நடத்தலாம் என்பதை, ராஜபக் ஷ சகோதரர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான் அவர்களால் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும், அதனை வைத்து அரசியல் செய்ய முடிகிறது,
ஜனாதிபதித் தேர்தலின் போதும், இதுபோன்று போரை வைத்து சிங்கள மக்கள் முன்பாக மஹிந்த ராஜபக் ஷ நடத்த முற்பட்ட அரசியல் வியாபாரம், களை கட்டவில்லை. அவருக்குத் தோல்வியே ஏற்பட்டது.
இந்தநிலையில், மீண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்காக வடக்கில் சட்டமீறல்கள், குற்ற ங்கள் அதிகரித்து விட்டன, வடக்கு 80களின் நிலைமைக்கு வந்து விட்டது, இனிப் போர் தான் வெடிக்கப் போகிறது என்று மிரட்டும் தொனியில் பிரசாரங்கள் செய்யப்படுகின் றன.
வடக்கு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்ததால்தான், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி காண நேரிட்டதாக அப்பட்டமாக கூறியவர்கள் தான் ராஜபக் ஷவினர்.
இந்த ஒரு கருத்தில் இருந்தே, வடக்கு மக்கள் மீதான, – தமிழ் மக்களின் மீதான வெறுப்பும் கோபமும் அவர்களிடம் உறைந்து போயிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஜனநாயக அரசியல் வழிமுறைகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து, அதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தான், 80களின் நிலையுடன் ஒப்பீடு செய்து தெற்கில் வாக்குகளை அள்ளும் உத்தியை அவர்கள் கையாளுகின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், தோற்கடிக்கப்பட்ட போது, பிரபாகரனுடன், ஈழக்கனவையும் புதைத்து விட்டதாக கூறியவர்கள் இப்போது, தேர்தல் ஆதாயங்களை அள்ளுவதற்காக, புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலும் அவர்களின் ஈழக்கனவு இன்னமும் உயிர்வாழ்கிறது என்று கூறத் தலைப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ராஜபக் ஷவினருக்கு ஒரு உண்மை புரிந்திருக்காமல் போகாது.
இலங்கைத் தீவில் தமிழர்களின் நியாய மான பிரச்சினைகள், அபிலாஷைகள் தீர்க்க ப்படாமல் போனால், அது என்றோ ஒருநாள் நெருப்பாக வெடிக்கும் என்பது அவர்களு க்குத் தெரியும். அமெரிக்கா கூட இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்திருந்தது.
இலங்கையில், தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நிலையான அமைதி ஏற்படுத்தப்படாது போனால், 5 அல்லது 10 ஆண்டுகளில் மீண்டும் போர் வெடிக்கும் என்று, முன்னைய தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஓ பிளாக் கூறியிருந்தார்.
அப்போது, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று மார்தட்டியிருந்தது.
இப்போது கூட, ரொபேர்ட் ஓ பிளாக் கூறியது போன்ற சூழல் ஏதும், இலங்கையில் ஏற்பட்டு விடவில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட லாம் என்று சிங்கள வாக்காளர்களை மிரட்டி அவர்களின் வாக்குகளை அள்ளப் பார்க்கின்றனர் ராஜபக் ஷவினர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரையில் இலங்கையில் எந்நேரமும், இனவிடுதலைக்கான உணர்வுகள் என்பது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் என்பது சிங்களத் தலைமைகள் அனைவருக்கும் தெரியும்.
அதற்கேற்றவாறு, தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு, போருக்குப் பிந்திய ஐந்தரை ஆண்டுகளை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதற்கு மாறாக, வடக்கிலுள்ள மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுத்ததால் தான் தோற்க நேரிட்டது என்று சிங்கள மக்களிடையே, எதிர்மறையான பிரசாரத்தை மேற்கொண்டு, ஒரு அனுதாபத்தை தேடிக் கொள்ள முனைகிறார்கள்.
இதன் மூலம், இனவெறுப்பு இன்னும் இன்னும் தூண்டப்பட்டு, தெற்கிலுள்ள மக்கள் தமிழ் மக்களுடன் இணக்க நிலைக்கு செல்லாமல் தடுக்க முனைகின்றனர்.
சிங்கள அரசியல் சக்திகள், தேர்தலில் தமக்கு வாக்குகளை அள்ளுவதற்காக, அள்ளி வீசும் பொய்களும் புரட்டுகளும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்களையே தாக்கும்.
இப்போது வடக்கு மக்களையும், வடக்கையும் வைத்து, சிங்கள மக்களிடையே அவர்கள் நடத்தும் அரசியலுக்கு சாதகமான அறுவடை யாக அமைந்தால், அது வடக்கிலுள்ள மக்களுக்குப் பெரும் சாபக்கேடாகவே அமை யும்.
கபில்