போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வட மாகாண சபையை இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றதும் உள்ளக விசாரணை எவ்வாறு அமையும் என்ற தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ளஉள்ளக விசாரணை செயற் பாட்டில் வட மாகாண சபையை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை இதுவரை இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை.
எவ்வாறெனினும் உள்ளக விசாரணை செயற்பாட்டில் மாகாண சபைகள் தமது பங்களிப்பை செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தம் தொடர்பிலான விசாரணை பொறிமுறைமை அமைக்கும் பேச்சுவார்த்தைகளில் வட மாகாணம் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வட மாகாண சபையை இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை இதுவரை அரசுக்கு உததியோகபூர்வமாக கிடைக்கவில்லை.
மேலும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் உள்ளக விசாரணை செயற்பாட்டில் மாகாண சபைகளை இணைத்துக்கொள்வதா என்று இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.
இது மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணை அல்ல. மாறாக முழு இலங்கைக்கும் தாக்கம் செலுத்தும் செயற்பாடாகும். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து செயற்படவேண்டும். ஆனால் உள்ளக விசாரணை செயற்பாட்டில் மாகாண சபைகள் தமது பிரதிநிதித்துவத்தை செய்ய முடியும்.
எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றதும் உள்ளக விசாரணை எவ்வாறு அமையும் என்ற தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படும்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே அடுத்த அமைச்சரவை கூடும். அதன்போது இந்த விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும். போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான நம்பகத்தன்மை வாய்ந்த உள்ளக விசாரணை நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
அதனை நாங்கள் செய்வோம். ஆனால் அதில் வட மாகாண சபையை இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து தற்போது கூற முடியாது. அது குறித்து அறிக்கை வந்ததும் அமைச்சரவையில் ஆராய்ந்துவிட்டு கூறுவோம் என்றார்.
ஐ.நா. அறிவிப்பு
அதாவது யுத்தம் தொடர்பிலான விசாரணை பொறிமுறைமை அமைக்கும் பேச்சுவார்த்தைகளில் வட மாகாணம் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசிய மட்டத்தில் யதார்த்தமான ஆலோசனை கோரல்கள் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கைக்கு மிகவும் பொருத்தமான ஓர் விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய முயற்சிகளுக்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள்அமைப்பு ஆதரவளிக்கும்
தொழில்நுட்ப உதவி
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எல். பீரிஸ் கருத்து
இது இவ்வாறு இருக்க வடமாகாண சபையை விசாரணைப் பொறிமுறைமையில் இணைத்துக் கொள்ளக் கூடாது என அண்மையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
30 இல் விவாதம்
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை தொடர்பில் நடத்தப்படும் விவாதத்திலும் ஆணையாளர் அல் ஹுசேன் மற்றும் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
அறிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
2014 பிரேரணை
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகள் செயற்பாட்டு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன.
இதற்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.