அரசியல், அரசியல்வாதிகள், அரசாங்கம் ஆகிய இம் முப்பதங்களில் சுட்டிக் நிற்கின்ற தரப்பினரை இல்லாவிட்டால் அம்சங்களை இனரீதியாகவோ மதரீதியாகவோ இல்லாவிட்டால் குலரீதியிலோ பிரித்தாளுகை செய்துவிட முடியாது.
அரசியல்வாதிகள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் அமைக்கப்படுகின்ற எத்த கைய, எந்தக்கட்சியுடைய அரசாங்கமானா லும் இந்த தரப்புக்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் குறிப்பாக தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் அனைத்தும் ஆற்று நீரில் எழுதிவைக்கப்பட் டமைக்கு ஒப்பானவை.
இன்றைய நிலை வரையில் இந்நாட்டை ஆட்சி செய்துள்ள எந்தவொரு அரசாங்கமும் சரி இல்லாவிட்டால் அத்தகைய அரசாங்கங்களின் பிரதானிகளும் சரி எந்தத் தரப்புமே தாம் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய வரலாறே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பொய்களுக்கு மேல் பொய்கூறி பித்தலாட்டத்துக்கு மேல் பித்தலாட்டம் செய்து அரசியல் பிழைப்பு நடத்திவரும் ஒவ்வொரு வரும் எந்த முகத்தைக்காட்டிக் கொண்டு மக்களிடத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர் என்பதுதான் இங்கு எழுகின்ற பிரதான கேள்வி.
ஐக்கிய தேசியக் கட்சி குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜே.வி.பி.யும் விமர்சித்து வருகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் விமர்சித்து வருகின்றன.
இதேவேளை மேற்படி இரு பெரும்பான்மைக் கட்சிகளும் ஜே.வி.பி.யை விமர்சிப்பது மிக அரிதாக காணப்படுகிறது என்னவோ விந் தையாகவுள்ளது.
கட்சிகள் மாறி மாறி தமது விமர்சனங்களை முன்வைக்கின்ற அதேவேளை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மாற்றுத்தரப்பினர் மீது எல்லையில்லா விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர் மாற்றுத் தரப்பினர் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் ஊடாக வாக்காளர்கள் அவர் கள் தொடர்பில் நன்கு தெளிவடைந்துகொள்கின்றனர் என்பது மட்டுமே உண்மையாகும்.
அது மத்திரமின்றி விமர்சனங்கள் மற்றும் பொய்யானதும் போலியானதுமான வாக்குறுதிகள் மூலமாக மக்களை மடையர்களாக ஆக்குவதற்கே முயற்சிக்கின்றனர்.
நரம்பில்லாத நாவால் எதனையும் கூறுவர் என்பர் இவ்வாசகம் இன்றைய அரசியல் கள த்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றவர் களுக்கே பொருந்தும்.
பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுக்கிடையில் இருந்து வருகின்ற அதி உச்சக்கட்ட அதிகாரப் போட்டித்தன்மைக்கிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற் றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கிடையிலேயே வைராக்கிய அதிகாரப் போட்டியொன்று இன்றைய அரசி யல் மேடையில் சூடு பிடித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆறுமாத கால அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்திருக்கின்றது என்று கேட்கின்ற தரப்பினர் கடந்த தசாப்த கால அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் செய்தது என்ன என்பது குறித்தும் சிந்தித்து கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
தேர்தல் என்றாலே வாக்குறுதிகளுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது வாக்குறுதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வாக்குறுதிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு சீர்தூக்கிப்பார்த்து செயற்பட வேண்டிய பொறுப்பு வாக்காளரிடத்தில் இருக்கின்றது. வாக்காளர்களின் தீர்மானத்திலேயே ஒட்டுமொத்த மக்களினதும் மாணவ செல்வங்களினதும் எதிர்காலம் தங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 10 வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்தது. இதேகாலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியதிகாரத்தோடு வலம்வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 10 வருடகால ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றினரா? இல்லாவிட்டால் இன்று கூறுகின்ற வாக்குறுதிகளை அன்று நினைத்துப்பார்த்தனரா என்பது அவர்களுக்கும் வெளிச்சம் தான்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஏற்பட்ட புரட்சியுடன் அமைந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றத்தை சுமத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தப்பித்துக்கொள்ள நினைத்தால் அது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.
ஏனெனில் கடந்த 6 மாதகால அரசாங்கம் குறிப்பிடத்தக்க, மக்கள் அனுபவிக்கத்தக்கதான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளதை மறுக்கமுடியாது.
நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி பாவனையாளர்கள் முச்சக்கரவண்டிகளை குடும்ப வருமானத்துக்காக பாவித்துவரும் குடும்பஸ்தர்கள் பெற்றோல் விலைகுறைப்பின் அனுகூலத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு அவர்களே சாட்சிகளாகவும் இருக்கின்றனர். இது போன்று பல உதாரணங்களை கூறினாலும் கூறாவிட்டாலும் மாற்றுக் கட்சியினருக்கும் நன்றாகவே புரியும்.
அது மாத்திரமல்லாது கடந்த 6 மாத கால அரசாங்கம் எனும்போது அது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்று கூறிவிடமுடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கமாகவே அது செயற்பட்டு வந்தது.
ஆகவே தேசிய அரசாங்கத்தின் நன்மைகளைப் போன்றே அதனால் தவறிழைக்கப்பட்டிருக்குமானால் அதனையும் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர மக்களை மடையர்களாக்கி ஒரு தரப்பின் மீது குற்றத்தை சுமத்தி தான் நல்லவராக மாறிவிட முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தோல்வியடைந்து 9 ஆம் திகதி அதிகாலை வேளையில் அலரிமாளிகையில் இருந்து புறப்பட்டு மெதமுலனவுக்கு சென்று அங்கு ஜன்னலில் தொங்கியவாறு பேசி இனவாத பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பயணமே இன்றும் தொடர்கின்றது. அவரது பின்னணியே 100 நாள் வேலைத்திட்டம் முழுமையடையாமைக்கும் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாமைக்குமான காரணிகளாக அமைந்திருந்தன. பாராளுமன்றத்தை படுக்கையறையாக மாற்றியமைத்த வரலாற்றையும் நிகழ்த்திவிட்டனர்.
இன்று நாட்டு மக்கள் சகல விடயங்களை யும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் சீர்தூக்கிப் பார்த்து தீர்மானிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றே கூற வேண்டும்.
நிலைமைகள் இப்படி இருக்கையில் மேற்படி அரசியல்வாதிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் போலியான வாக்குறுதிகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் மயங்கிக் கிடக்கப் போவதில்லை.
எனினும் அரசியல் வாதிகள் நினைப்பது போன்று மடையர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இன்றைய நிலையில் நாட்டின் 75 சத வீதமானோர் இந்நாட்டின் அரசியலையும் அரசியல் வாதிகளையும் பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொண்டு விட்டனர். ஆதலால் மக்களை மடையர்களாக்கும் முயற்சி ஒருபோதும் பலனளிக்காது.
ரணிலுக்கும் மஹிந்தவுக்குமிடையிலான அதிகாரப் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற கேள்விக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி பதிலளிக்கும் மக்கள் அதன் பிரதிபலனை 18 ஆம் திகதி விடியற்காலையில் தெரிந்து கொள்வர்.
இந்நிலையில் நாடு முழுவதும் விருப்புவாக்கு வேட்டையில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் தாம் சார்ந்த கட்சி வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதற்குப் பதிலாக தாம் பாராளுமன்றத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற ரீதியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ரணிலுக்கும் மஹிந்தவுக்குமிடையிலான அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இவ்விரு வரையும் சார்ந்து நிற்கின்றவர்கள் எப்படியான தீர்மானத்தை அறிவிக்கப் போகின்றனர் என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
நல்லாட்சியை நாட்டு மக்கள் எதிர்பார்க் கின்றனர். அது யாரால் சாத்தியமாகும் என் பதை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்க ளாக இருக்கின்றனர்.
மலையக அரசியலை எடுத்து நோக்குவோமானால் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற தலைமைகள் பிரதான கட்சிகளிலும் தனித்தும் போட்டியிடுகின்றனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய மூன்று பிரதான மலையகக் கட்சிகளும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்ற அதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்தும் போட்டியிடுகின்றது.
ஒருவகையில் பாராளுமன்றத்தில் மலையகப் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ளும் எண்ணத்தில் இவ்வாறு செயற்படுவதாகக் கூறினாலும் மலையகத்தில் வேட்பாளர்களிடத்தில் இருந்து வருகின்ற குரோத மனப்பான்மை வெட்டுக்குத்துக்கள் போட்டிகளுக்கு அப்பால் மிஞ்சி நிற்கின்ற பொறாமைகள் மலையக வாக்காளர்களை சலிப்படைய செய்துள்ளது.
மலையக இளைஞர் யுவதிகளும் சரி ஒட்டுமொத்த மக்களும் சரி எல்லோருமே இத்தகைய அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர்.
அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கூட இவ்வாறு மாயாஜால வார்த்தைகளால் மயக்கமடைந்துள்ளனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பதவியை அடைந்து கொள்வதற்காகவுமே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் தான் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை எத்தகையது? தனது செயற்காரியங்கள் திருப்தியானவையா? போலியானவையா? தேர்தல் கால வாக்குறுதிகள் எந்தளவில் சாத்தியமானவை? நடைபெறுகின்றவை நடைபெறப்போகின்றவை எல்லாவற்றையுமே அறிந்திருக்கின்றனர்.
இருப்பினும் இவர்கள் அனைவருமே அவரவர் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்கையில் நுவரெலியா மாவட்டத்தில் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டி ஏமாற்றுகின்ற விலாங்கினைப் போன்று இரட்டை வேடமிட்டுத்திரியும் ஒரு சில அரசியல்வாதிகளும் புல்லுருவிகளைப் போன்று மலையக அரசியலுக்குள் புகுத்து நாசம் செய்கின்ற நயவஞ்சக மேதாவிகளையும் காணமுடிகின்றது.
மலையகத்தில் மாத்திரமின்றி வடக்கு மக்களையும் இவ்வாறு ஏமாற்றி பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் வாழ்வதற்கு மலையகத்தில் ஒரு கூட்டம் துணைநிற்பது கவலைக்குரிய விடயம்.
சுயேச்சைக் குழுவொன்றில் அப்பாவிப் பெண்களை களத்தில் இறக்கிவிட்டு செயற்படும் ஒருவர் தன்னை மலையகத்தில் இப்படியான ஒரு பகுதியினரிடம் மேதாவியாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
இப்படியான கோமாளி அரசியல்வாதிகள் மலையகத்துக்குள் நுழைவதற்கு காரணமே மலையக அரசியல்வாதிகள் தான். மலையக அரசி யல்வாதிகள் உண்மையான அரசியல் வாதி களாக நடந்து கொண்டிருந்தால் இப்படியானவர்கள் வந்து புகுவதற்கு இடமிருந்திருக்காது.
கோமாளி அரசியல்வாதியின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள அப்பாவிப் பெண்கள் தாம் நம்பியிருக்கும் நபர் பற்றிய உண்மைத் தோற்றத்தை காணாதுள்ளனர்.
மலையக அரசியல் இன்று சிதைந்து காணப்படுகின்ற நிலையில் மேலும் இங்கு கும்மியடிப்பதற்கு எத்தனித்துள்ள வஞ்சக அரசியல்வாதியொருவரின் தாளத்துக்கு ஆடிக் கொண்டிருக்கும் மேற்படி மலையகத்தின் குறிப்பிட்ட பகுதியினர் என்றோ ஒரு நாள் தமது தவறை உணர்வார்கள்.
போக்கிடம் இல்லாது அரசியல் அநாதையாகிவிட்ட இப்படிப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் குறிப்பாக மலையக மக்கள் வெகு விரைவிலேயே வெள்ளையடித்து அனுப்பிவைக்கப்போகின்றனர்.
இப்படியானவர்களுக்கு மத்தியில்தான் இன்று நாட்டிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள், நலன் விரும்பிகள், மாற்றுக் கொள்கையாளர்கள் மற்றும் மதத்தலைவர் கள் என பல்வேறு தரப்பினரும் வேண்டி நிற்பது என்னவென்றால் ஒவ்வொரு வாக்காள னும் நாடு குறித்தும் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்பதாகும்.
நல்ல சமுதாயத்தை, சிறந்த நாட்டை, நற்பண்புகளை, ஒழுக்க சீலர்களை கட்டியெழுப்ப வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாகவும் ஆதங்கமாகவும் இருக்கின்றது.
இன்று மலையகத்திலிருந்து தமிழ்ப் பிரதிநிதிகள் அதிகமாக உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனினும் அதிகப்பிரதிநிதிகள் வேண்டும் என்பதற்காக சண்டியர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் பொய்யர்களை யும் பிரதிநிதிகளாக ஆக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
உண்மையான சமூகப் பற்றாளர்கள் சேவையாளர்கள் மக்களோடு மக்களாக இருந்து வருபவர்கள், தோட்டத் தொழில ாளியை தோழனாக நினைப்பவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக படித்தவர்கள், அரசியல் ரீதியிலான ஞானமுள்ளவர்களை மலையக வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமான தமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வேண்டும்.
இன்று வாக்குக் கேட்டு நிற்பவர்கள் தாம் வழங்குகின்ற தேர்தல் வாக்குறுதி என்ன என்பதை மறந்துவிடக் கூடாது.
ஏனெனில் மக்கள் அதனை மறக்கப்போவதில்லை. ஐந்து வருடங்களின் பின்னர் இதேநிலைமை மீண்டும் வரத்தான் போகின்றது.
அது மாத்திரமன்றி உள்ளூராட்சித் தேர்தல்களும் இடம்பெறவுள்ளமை இங்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமாகும். எப்படி இருப்பினும் மலையகத்தினின்று தமிழ்ப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்கள், இளைஞர் யுவதிகள் ஆழமாக சிந்தியுங்கள்.
மதத்தலை வர்களும் கல்விமான்களும் கூறுகின்ற அறிவுரைகளை செவிமடுங்கள். அரசியல் வாதிகளது சுயரூபம் தொடர்பில் பகுத்த றியுங்கள். அது தொடர்பில் தீர்மானியுங் கள். பின்னர் வாக்களியுங்கள். அப்படி செய் வீர்களானால் நீங்களே வெற்றியாளர்கள்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் ஆசிரிய உதவியாளர்களுக்கான சம்பள விவகாரம் தொடர்பில் மேற்படி இரு தரப்பினருமே பேராசையை வளர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஜே.ஜி.ஸ்டீபன்