எதிர்வரும் ஆகஸ்ட் 17, 2015 அன்று நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அடுத்த இலங்கைப் பிரதமர் ரணிலா? ராஜபக்ஷேவா என்று முடிவு செய்யும் நிலைகள் இருந்தாலும், இந்தத் தேர்தல் குழப்பங்களையும், அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளையும் கொண்டிருக்கின்றன.
ராஜபக்ஷே தனக்கு வாக்களியுங்கள் மீண்டும் விடுதலைப்புலிகள் தலையெடுத்து விடுவார்கள் அதைத் தடுக்க வேண்டும் என்று சிங்களப்பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகின்றார்.ராஜபக்ஷேவுக்கு சீனாவின் ஆதரவு உள்ளது.
மறுபுறத்தில் ரணிலோ திரும்பவும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகளைக் குறிவைத்து பிரச்சாரம் செய்கின்றார்.
தமிழர்களை எப்போதும் ஏமாற்றுவதாகத் தான் ரணிலுடைய நிலைப்பாடு இருந்து வருகிறது. இரண்டு பேருமே, தான் வெற்றி பெறுவோமா, தோல்வியடைவோமா என்ற கலக்கத்தில் தான் இருக்கின்றார்கள்.
துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்கள் தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நடக்கின்றன.
தமிழ் மக்கள் விரும்பும்,
1. 2009 இன அழிப்புப் போரில் ராஜபக்ஷே மீது சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணையும், புலனாய்வும்.
2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்.
3. தங்களுடைய அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு.
4. தங்களுடைய காணிகளை திரும்ப பெறுதல்.
5. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல், நில நிர்வாகம், மீன்பிடிப்பு போன்ற அதிகாரங்கள் முழுமையாக வழங்கவும்.
என்பவை பற்றி இந்தத் தேர்தல் களத்தில் எந்தப் பிரச்சார அழுத்தத்தையும் காணமுடியவில்லை.
தமிழர்கள் இவற்றையெல்லாம் விரும்பினாலும் மௌனமாக இருக்க வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களும் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான குரல். புதிதாக, “ஒரு நாடு இரு தேசம்” என்றும் கோஷம் எழுந்துள்ளது.
தனி ஈழம் என்னவாயிற்று? சுயநிர்ணய உரிமை என்னவாயிற்று? தமிழ்த் தலைவர்களே நீங்களாவது சற்று சிந்திக்க வேண்டாமா? எதிர்கால ஈழத் தமிழர் சந்ததிகள் உங்களைப் பற்றி என்னவென்று வரலாற்றில் பதிவார்கள் என்று சற்றே உங்களுடைய இதயத்தைத் தொட்டுப்பாருங்கள். உங்கள் மனசாட்சி உரிய பதிலளிக்கும்.