தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகனை தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொன்றார்கள், நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வின் மூன்றாவது நாள் விசாரணை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மூன்று மகன்கள் இல்லாமல் போய் விட்டனர். ஒரு மகன் வாகரை – கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர். 1994ம் ஆண்டு காணாமல் போனார், யார் கடத்திக் கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது.

அக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் இருந்தார்கள். யார் கொண்டு போனார்கள் என்று தெரியாது.

இதுவரையில் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. மற்றைய மகன் கண்டலடி தரவைப் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார். அவருக்கு இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது.

இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை. எனது மூன்றாவது மகன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரூடியோவில் வேலை செய்து விட்டு வரும் போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நான் மூன்று மகன்களை இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும், துன்பத்தோடுமே எனது காலத்தினை கழித்து வருகின்றேன்.

எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொடுக்க வேண்டும். இங்கு மகனை, கணவனை தொலைத்தவர்களும், வந்துள்ளார்கள் அவர்களுக்கும் நல்ல முடிவினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் உள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆணைக்குழு சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என நம்பியே வந்துள்ளேன்.

நான் மூன்று பேரை இழந்துள்ளேன். நான் மட்டும் இழக்கவில்லை. இன்று எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளார்கள்.

கண்ணீரோடும் துன்பத்தோடும் உள்ளார்கள். கடத்திச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வேதனையுடனும் கண்ணீருடன் வாழ்கின்றனர், என அவர் கூறினார்.

திங்கட்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நடைபெற்ற அமர்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 175 பேர் சாட்சியங்களை அளித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

tamil-news-virakesari-lkww

பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம்.

இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம் என கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ந.சிவலிங்கம் தமது சகோதரர் தொடர்பான விடயத்தினை கண்ணீர்மல்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

களு­வாஞ்­சி­குடி மற்றும் வெல்­லாவெளியில் இடம்பெற்ற காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 255 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டன. இதன் போது  பதியப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்ட சாட்சியம் முன்வைக்கப்பட்டது.

குறித்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

‘நடராஜா செந்தூரன் (19) எனது இளைய சகோதரர் பாடசாலைக்கு செல்லும் போது 2000.11.19 ஆம் திகதியன்று காணமால் போயிருந்தார்.

அருகில் உள்ள கறுவாக்கேணி வித்தியாலயத்திலே கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம்.

எனது சகோதரனின் சடலத்தினை ஏறாவூர் வைத்தியசாலையில் இருந்தே பெற்றுக் கொண்டோம். இது வரைக்கும் எனது சகோதரன் யாரால் கொல்லப்பட்டார் என அறியமுடியவில்லை.

அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன. இதேபோன்று எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸ்வரன் (29) 2005 காலப்பகுதியில் காணமல் போயிருந்தார்.

மாவடிவேம்பு வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது.

இதேபோன்று எனது மூத்த சகோதரர் ந.விணாயகமூர்த்தி (31) 1985 இல் காணாமல் போனார். கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன்வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணாமால் போயிருந்தார்.

இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றார்கள் என அப்பகுதி பொது மக்கள் சிலர் தெரிவித்தனர்.

இது மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவினை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

நானும் எனது சகோதரங்களும் அம்மா இல்லாமல் மிக துன்பப்பட்டு வாழ்ந்தோம். இவ்வாறன நிலையிலேயே எனது சகோதரர் 3 பேர்களையும் எனது சகோதரியின் கணவரையும் இழந்துள்ளோம்.” என கவலையுடன் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொணடு வருகிறது.

களு­வாஞ்­சி­க்குடி மற்றும் வெல்­லாவெளியில் இடம்பெற்ற காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 255 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்­குழு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply