பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது அரசுகளை உலக வல்லரசுகளாக நிலை நிறுத்தினர்.

எகிப்த்தின் வரலாற்றுப் பெருமை நிகரில்லாதது. முகம்மது நபி இஸ்லாமிய மார்க்கத்தை உருவாக்கிய பின்னர் கிபி 661ம் ஆண்டு டமஸ்கஸில் நிறுவப்பட்ட உமய்யிட் வம்ச அரசு கிபி 750ம் ஆண்டு வரை பல நாடுகளை ஆளும் பேரரசாக இருந்தது.

அதைத் தொடர்ந்து பாக்தாத்தில் உருவான அப்பாஸிட் வம்ச அரசு ஐநூறு ஆண்டுகள் ஒரு பேரரசாக ஆட்சி புரிந்தது. இந்த ஆட்சிக்காலம் அரபுக் கலாச்சாரத்தின் பொற்காலம் எனப்படுகின்றது.

ஆனால் இன்று சிரியாவும் ஈராக்கும் நாடுகள் என்ற தகுதியை இழக்கும் அளவிற்கு அங்கு உள்நாட்டுப் போர் நடக்கின்றது. எகிப்து தனது பெருமையை இஸ்ரேலுடனான போர்களில் தோல்வியடைந்து தனது பெருமைகளை இழந்து நிற்கின்றது.

saudiஅரபுலகம் பின்தங்குமா?
இன்று ஐரோப்பிய நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாகவும், ஆசிய நாடுகள் எல்லாத் துறையிலும் முன்னேறும் நாடுகளாகவும் மற்ற ஆபிரிக்க நாடுகள் வேகமாக அறிவிலும் பொருளாதாரத்திலும் வளரும் வேளையில் பெருமை மிக்க அரபு நாடுகள் பின் தங்கிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் மோசமான உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியா சிதறுபடுமா என்ற அச்சமும் இருக்கின்றது.

ஆசியாவில் மக்களாட்சி முறைமை மேம்பட்டுக் கொண்டிருக்கையில் மற்ற ஆபிரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமையில் ஆட்சியை சிறப்பாக நடத்தும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அரபு நாடுகளில் மக்களாட்சி வரும் நிலை அண்மையில் இல்லை. துனிசியா மட்டும் மக்களாட்சியை மிகவும் சிரமப் பட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

isமொரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, சாட், லெபனான், எகிப்து, சூடான், ஜோர்தான், சிரியா, ஈராக், குவைத், பாஹ்ரேய்ன், கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், யேமன் ஆகிய 19 நாடுகள் அரபு நாடுகளாகும்.

ஈரான், துருக்கி, கிழக்கு ஆபிரிக்கா தென் அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் அரபுக்கள் வசிக்கின்றனர். அரபுக்களில் 93 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகும்.

அரபு மொழிபேசும் யூத மதத்தினரை அரபுக்கள் என ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்த்த மத்தைத்தழுவிய அரபுக்கள் இப்போதும் அரபுக்களாகவே கருதப்படுகின்றனர்.

isGamal Abdel Nasser

ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு
அரபு நாடுகளிடையே ஒரு ஒற்றுமை என்றும் இருந்ததில்லை. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் (Gamal Abdel Nasser) அரபு நாடுகளை ஒன்று படுத்த முயன்றார்.

முதற்கட்டமாக அவர் சிரியாவையும் எகிப்தையும் இணைத்தார். ஆனால் அந்த இணைப்பு நீடிக்கவில்லை. அப்போது அரபு நாடுகளில் சிலவற்றில் மன்னர் ஆட்சியும் சிலவற்றில் மன்னர்களைப் பதவியில் இருந்து விலக்கிய படைத் தளபதிகளின் ஆட்சியும் நிலவின.

இந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர். அப்போது எகிப்தின் கமால் நாசர், சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத்.

லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியவர்கள் உலக அரங்கில் தம்மை இஸ்லாமியர்களாக முன்னிறுத்தாமல் அரபுக்களாக முன்னிறுத்தினர். தமது நாடுகளிலும் மத சார்பற்ற ஆட்சியை நடாத்தினர்.

முரண்பாடுகள்
அரபுக்களின் இரு பெரும் புனித நகரங்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய உலகத்திற்கே தலைமை தாங்க வேண்டிய ஒரு நாடு.

ஆனால் அது தன்னை அரபு சுனி இஸ்லாமிய நாடாக முன்னிறுத்துவதால் பல பிரச்சனைகளை உருவாக்கும் நாடாக இருக்கின்றது.

அரபுக்களைக் கொண்டிராத துருக்கியுடன் அது இன ரீதியில் முரண்படுகின்றது. சியா முஸ்லிம்களைக் கொண்ட ஈரானுடன் அது இனரீதியாகவும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டு ரீதியாகவும் முரண்படுகின்றது.

இஸ்லாமிய அரசு என்பதைப் பிரகடனப் படுத்தியுள்ள ஐ எஸ் அமைப்பு தனது இஸ்லாமிய அரசில் ஈராக், சிரியா, லெபனான், பலஸ்த்தீனம், ஜோர்தான், துருக்கியின் ஒரு பகுதி போன்றவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்றது.

அத்துடன் தாம் முழு உலகையும் கைப்பற்றுவோம் என்றும் பாரிஸ், இலண்டன், நியூயோர் நகரங்களின் வீதிகளில் நாம் படுகொலை புரிவோம் என்கின்றது.

   gccஇடைவெளியை சவுதி நிரப்புமா?
மற்ற அரபு நாடுகள் பொருளாதாரப் பிரச்சனையாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மோசமான நிலையில் இருக்கையில் வலுவான நிலையில் இருக்கும் சவுதி அரேபியாவால் அரபு நாடுகளுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியுமா?

ஐக்கிய அமெரிக்காவும் அரபு நாட்டு உறுதி நிலையைப் பேண சவுதி அரேபியாவும் தோள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.

அதன் முதற்படியாக யேமனின் உள்நாட்டுக் குழப்பத்தைத் தீர்க்கும் (தீர்த்துக் கட்டும்) பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டது.

ஐக்கிய அரபுக் குடியரசும் சவுதி அரேபியாவிற்குக் கை கொடுக்கின்றது. ஐ எஸ் அமைப்பு சவுதி அரேபியாவிற்கு எதிராகவும் தாக்குதல்கள் செய்கின்றது.

isCAQ77HCL

ஐ எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 431பேர் சவுதியில் கைசெய்யப்பட்டுள்ளனர். சுனி முஸ்லிம்களைக் கொண்ட பல அரபு நாடுகள் தமக்கு இஸ்ரேலிலும் பார்க்க சியா ஈரானாலும் ஹிஸ்புல்லா அமைப்பினாலும் அதிக ஆபத்து எனக் கருதுகின்றன.

அந்த ஆபத்தில் இருந்து சவுதிதான் தம்மைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவை ஈரானை அடக்குவதற்கு இஸ்ரேலுடன் இப்போது பகிரங்கமாக ஒத்துழைக்கின்றன.

தற்போது அரபு நாடுகளில் நிலவும் மோசமான சூழ்நிலை ஒரு புவிசார் அரசியல் மீளமைப்பை வேண்டி நிற்கின்றது.

ஆனால் அமெரிக்காவின் ஓத்துழைப்பு சவுதி தலைமை தாங்குவதற்கு அவசியமாகும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவது மட்டுமல்ல ஈரானுடனும் தனது உறவை மேம்படுத்த விரும்புகின்றது.

பணத்தில் படைவலிமை
சவுதி அரேபியா ஒரு வலிமை மிக்க படைத்துறையைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவிடமிருந்த்து பல புதிய தர படைக்கலன்களை வாங்கிக் குவித்துள்ளது. ஆனால் சவுதியின் படையினருக்கு போர்க்கள அனுபவம் மிகக் குறைவானதே.

இந்த அனுபவமின்மை யேமனில் தற்போது வெளிப்படுகின்றது. அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள், பிரித்தானியாவின் Paveway IV எனப்படும் துல்லியமாகத் தாக்கக் கூடிய வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற படைக்கலன்கள் சவுதி அரேபியப் படைகளின் முக்கிய படைக்கலன்களாகும்.

2020-ம் ஆண்டு உலகின் படைத்துறைச் செலவீனப் பட்டியலில் சவுதி ஐந்தாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சவுதியின் பொருளாதாரம் எதிரிக்குச் சகுனப்பிழை
சவுதி அரேபியா பல நாடுகளுடன் நல்லுறவைப் பேணுகின்றது. அதன் அரசுறவு(இராசதந்திரம்) காசோலை அரசுறவு என விபரிக்கப்படுவதுண்டு.

சவுதி அரேபியா தனது பணத்தின் மூலம் பன்னாட்டரங்கில் நட்பை வாங்குகின்றது என்பதற்காக இப்படி விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் பொறுப்பைக் கூட எடுக்க முயற்ச்சித்தது.

எகிப்து, பாக்கிஸ்த்தான், ஜோர்தான், பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளின் நட்பு சவுதியின் பணத்தால் பெற்ற நட்புக்களே. சவுதியின் பணத்திற்கு ஐக்கிய அமெரிக்காவின் அரசுறவியலாளர்களே விலை போவதுண்டு.

சவுதியின் பொருளாதாரம்
சவுதி அரேபிய மன்னர் குடும்பம் வெறுக்கும் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனத்தைச் சேர்ந்தவரான பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற சவுதி பெரிதும் விரும்புகின்றது.

அதற்கு இரசியா தடையாக இருக்கின்றது. இதனால் இரசியாவிற்குப் பாடம் போதிக்க சவுதி முயல்கின்றது. சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையை விழச் செய்து கொண்டிருக்கின்றது.

எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியப் பொருளாதாரம் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது சவுதியின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது.

சவுதியின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு இன்னும் ஒரு நோக்கத்தைக் கொண்டது. எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதால் புதிய எரிபொருள் அகழ்வு முயற்ச்சிகள் பல இடை நிறுத்தப்படுகின்றன.

எரிபொருள் வீழ்ச்சி சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதி இப்போது 27பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.

சவுதி நீண்ட கால எரிபொருள் விலை ஆகக்க் குறைந்தது 85 டொலர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றது ஆனால் தற்போது 50 டொலர்களுக்கும் குறைவாக இருக்கின்றது.

இது சவுதியின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. ஈரான் தனது நிதி நிலைமையைச் சமாளிக்க எரிபொருள் விலை 130 டொலர்களுக்கு மேலும் இரசியாவிற்கு 105 டொலர்களுக்கு மேலும் இருக்க வேண்டும்.

உறுதியான மன்னர் ஆட்சி தொடருமா
சவுதி அரேபியாவின் மன்னராக தற்போது இருக்கும் சல்மன் பின் அப்துலஸீஸ் அல் சவுத் அவர்களுக்குப் பின்னர் ஓர் வாரிசுப் போட்டி உருவாகலாம்.

முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயீஃபிற்கும் துணை இளவரசர் மொஹமட் பின் சல்மனுக்கும் இடையில் வாரிசுப் போட்டி உருவாக வாய்ப்புண்டு என அரசியல் நோக்குனர்கள் கருதுகின்றனர்.

மன்னர் ஓய்வு பெறும் போது அவருக்குப் பிடித்தவரும் அவரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் துணை இளவரசரை அரசராக முடி சூட்டலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இது ஒரு வழமைக்கு மாறான செயலாகும். இதனால் சவுதியில் ஒரு வாரிசுப் போட்டியும் உள்நாட்டுக் குழப்பமும் உருவாகலாம்.

அரபு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் போல் ஆசியான் போல் தமக்குள்ளே வலுவான ஒரு நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். வளைகுடா ஒத்துழைப்பு ஒன்றியம் தற்போது உள்ளதிலும் பார்க்க சிறந்த ஓர் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே இது பற்றிய முன்மொழிவுகள் மற்ற நாடுகளால் முன்வைக்கப்பட்ட போது சவுதி அரேபியா அதை எதிர்த்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போல் ஒரே மாதிரியான மனித உரிமை நிலைப்பாடு, எல்லைப் பிரச்சனை இன்மை, ஒருவருக்கு ஒருவர் பொருளாதாரக் கைகொடுப்பு , பொதுவான கலாச்சாரம் ஆகியவற்றை அரபு நாட்டில் உருவாக்க முடியும்.

 -வேல் தர்மா-

Share.
Leave A Reply