தருமபுரி: காதலனை காண முடியாத ஏக்கத்தில், கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திட்டக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் பிரீத்தா (வயது 18). இவர், திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் ஜோடி, கடந்த சில மாதங்களாக யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பிரீத்தாவின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தன் மகள் பிரீத்தாவை கண்டித்து காதலை கைவிடுமாறு கூறி இருக்கிறார்.

ஆனால் பிரீத்தா தனது காதலை கைவிட மறுத்து, எதிர்ப்பையும் மீறி தனது காதலனை சந்தித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரீத்தாவின் தந்தை, அவசர அவசரமாக மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார்,

மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தத்துக்கும் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதனை அறிந்த பிரீத்தா தனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தொலைபேசி மூலம் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

உடனே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரீத்தாவின் திருமண ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டது.

இதில் மகிழ்ச்சி அடைந்த பிரீத்தா, பெற்றோருக்கு தெரியாமல் தனது காதலனை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறார்.

இதை அறிந்த பிரீத்தாவின் பெற்றோர், பிரீத்தாவை பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று விட்டுள்ளனர். அதன்பிறகு, அங்கிருந்தபடியே பிரீத்தா கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார். இதனால், பிரீத்தாவால் கடந்த ஒரு வாரமாக தனது காதலனை சந்திக்க முடியாமல் போயிருக்கிறது.

மேலும், தனது காதலனை பிரீத்தாவால் செல்போனிலும் தொடர்புகொண்டு பேசவும் முடியாமல் போயிருக்கிறது.

இதனால் சோகத்தில் இருந்த பிரீத்தா, மனமுடைந்து நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதன்பின் தீயின் கோரப்பிடியில் சிக்கிய ப்ரீத்தா, வெப்பம் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.

ப்ரீத்தாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனே ஓடி வந்து அவரை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பிரீத்தா பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

காதலனை காண முடியாததால், கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply