மொடலாக தொழில்புரியும் யுவதியொருவர் விமானத்தில் தனது பூனையை கடத்திச் சென்றபோது, ஏற்பட்ட மோதல் காரணமாக சர்வதேச பயணிகள் விமானமொன்று அமெரிக்க யுத்த விமானங்களினால் சூழப்பட்ட நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
செக் குடியரசைச் சேர்ந்த ஸனேட்டா ஹசிகோவா, இச்சம்பவத்தையடுத்து அமெரிக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
34 வயதான ஸனேட்டா ஹசிகோவா அண்மையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எயார்லைன்ஸ் விமானமொன்றில் பயணம் செய்தார்.
விமானத்தில் பிராணிகளை கொண்டு செல்வதற்கு ஜேர்மனி பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆனால், மொடல் ஹசிகோவா, தனது பைக்குள் வைத்து பூனையொன்றை தன்னுடன் விமானத்துக்குள் எடுத்துச் சென்றார்.
விமானம் புறப்பட்டு சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னரே விமான ஊழியர்கள் இந்த பூனையைக் கண்டனர்.
அதன்பின் அப்பூனையை ஹசிகோவாவிடமிருந்து கைப்பற்றி, விமானத்தின் கழிவறையொன்றில் அடைத்து வைத்தனர்.
சிறிது நேரத்தின்பின் அப்பூனையை பார்ப்பதற்காக ஸனேட்டா ஹசிகோவா அந்தக் கழிவறையை நோக்கி நடந்தார். அப்போது விமானப் பணிப்பெண் ஒருவர், ஹசிகோவாவை தடுத்ததுடன், அவரின் ஆசனத்துக்குச் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதனால், ஹசிகோவா ஆத்திரமடைந்து, மேற்படி விமானப் பயணிப்பெண்ணை தாக்கினார்.
அத்துடன் “விமானத்தை நான் வீழ்த்தப்போகிறேன்” எனவும் அவர் அச்சுறுத்தினார்.
அந்த போயிங் 767 விமானத்தில் 250 பயணிகள் இருந்தனர்.
ஹசிகோவாவின் வன்முறையான நடவடிக்கை மற்றும் அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமானி தகவல்கள் கொடுத்தார்.
250 பேர் கொண்ட அப்பயணிகள் விமானத்தை வீழ்த்தப்போவதாக அச்சுறுத்தப்பட்டதை பாரதூரமானதாக அதிகாரிகள் கருதினர்.
அதையடுத்து விமானத்தை கட்டுப்பாட்டுடன் தரையிறக்குவதற்கு வசதியாக அமெரிக்க விமானப் படையின் இரு எவ்.16 ரக போர் விமானங்கள் மேற்படி பயணிகள் விமானத்தை சூழ்ந்துகொண்டன.
பின்னர், ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த அவ்விமானம் திசை திருப்பப்பட்டு அமெரிக்காவின் டென்வர் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதையடுத்து அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் விமானத்துக்குள் நுழைந்து ஸனேட்டா ஹஸிகோவாவை கைது செய்தனர்.
அவரின் விஸாவில் சிக்கல் இருப்பதகாவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவ்விமானத்தில் இருந்த ஏனைய 249 பயணிகளும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
சுமார் 24 மணித்தியால தாமதத்தின்பின் அப்பயணிகள் மீண்டும் ஜேர்மனி நோக்கி புறப்பட்டனர்.
ஸனேட்டா ஹசிகோவா, அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
செக்கஸ்லோ வாக்கியாவின் மிஸ் மல்டிவேர்ஸ், மற்றும் ஸ்விம்சூட் யூ.எஸ்.ஏ. வேர்ல்ட் ஆகிய அழகுராணி போட்டிகளிலும் தான் பங்குபற்றியதாக ஸனேட்டா ஹசிகோவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.