பெங்களூர்: தனது கள்ளக்காதலியை வேறு ஒரு நபருடன் பார்த்த கோபத்தில் அவரின் 3 குழந்தைகளை சாக்கடையில் வீசிக் கொலை செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஃபாஹீம் பைக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜிமா பேகம். அவரது குழந்தைகள் சுல்தான்(4), அப்ரீன்(6) மற்றும் அஃப்னான்(8). நஜிமாவின் கணவர் ஓராண்டுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.இந்நிலையில் நஜிமாவின் மூன்று குழந்தைகளையும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான ஃபாஹீம் பைக் சாக்கடையில் வீசிக் கொலை செய்தார்.

இந்த வழக்கில் ஃபாஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், நஜிமாவுக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.அதில் ஒரு கள்ளக்காதலன் தான் ஃபாஹீம். இந்நிலையில் ஃபாஹீம் நஜிமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நஜிமா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார்.அந்த ஆத்திரத்தில் தான் நஜிமாவின் குழந்தைகளை கடத்தி சாக்கடையில் வீசிக் கொலை செய்துவிட்டார் என்றனர்.