விடுதலைப் புலிகளின் போலி முகாம் ஒன்றைச் செயற்படுத்திய கிரித்தல சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவம் அனுமதி மறுத்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கிரித்தல இராணுவ முகாமுக்குள் தேடுதலை நடத்த ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால், அப்போது நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டவாளர் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

கிரித்தல இராணுவ முகாமுக்குள் நடத்தப்படும் தேடுதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கிரித்தல இராணுவ முகாமுக்குள் தேடுதல் நடத்த குற்றப்புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கை தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கிரித்தல இராணுவ முகாமுக்குள், இருந்தே போலியான புலிகள் அமைப்பு ஒன்று இயக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, கிரித்தல இராணுவ முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply