பிரான்சில் மனித எலும்பு, மண்டை ஓடுகளால் சுவர் போல் அடுக்கப்பட்ட கல்லறை தான் உலகின் மிகப் பெரிய மயான பூமியாக விளங்குகிறது.
பிரான்ஸின் தலைநகரான பாரீஸில், டென்ஃபெர்ட் ரொச்செரியோ என்ற இடத்திலேயே இந்த கல்லறை அமைந்துள்ளது, இங்கு ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.
தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் விறகுபோல சீராக நெருங்க அடுக்கி, சுவர் போல அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அடுக்குகளுக்கு ஊடாக சென்று, பார்வையிட வசதியாக குறுகலான பாதையும் இந்த கல்லறைக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனிதன் தனக்குள் இருக்கின்ற எலும்புக் கூட்டை வெளியில் பார்க்கும்போது வினோதமாகவே உணர்வான். அதிலும், லட்சக்கணக்கான மனிதர்களின் எலும்புகளை ஒரே இடத்தில் பார்க்க நேர்ந்தால், அவன் மனநிலை எப்படி இருக்கும். அதை ஒருமுறை இங்கு சென்று வந்தால் மட்டுமே உணர முடியும்.
உலகின் பயங்கரமான 20 இடங்களில் 13 வது இடத்தில் இந்த பாரீஸ் கல்லறை இருக்கிறது.
இது 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மயானத்தில் இருந்த கல்வெட்டுகளை அகற்றி, அவற்றுக்கு கீழிருந்த எலும்புக்கூடுகளையும் மண்டைஓடுகளையும் தோண்டி எடுத்து, அடுக்கி சீர்படுத்தி பூமிக்கடியில் கல்லறையாக மாற்றியுள்ளனர்.
ஆனாலும், 4 ம் நூற்றாண்டுகளில் தொடங்கி பலநூற்றாண்டுகளின் மயான எலும்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன, இவை பல மயானங்களில் பல காலகட்டங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லறை 1874 ம் ஆண்டிலிருந்து பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. சில அழிவுச் சம்பவங்களின் காரணமாக, செப்டம்பர் 2009 ல் மூடப்பட்டது. மீண்டும் அதே வருடத்தில் டிசம்பர் 19 ல் திறக்கப்பட்டது.
இங்கு உள்ள எலும்புகளுக்கு உரிய மனிதர்கள் ஒரே காலகட்டத்தில் இறந்தவர்கள் இல்லை. பல்வேறு காலங்களில், போர்களிலும், இயற்கை மரணத்தாலும் தண்டனையாலும், இயற்கை பேரழிவுகளாலும் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்லறை (catocombs) வரலாற்று நினைவுச் சின்னமாகவும் அதே நேரத்தில் இதுபோன்று உலகில் வேறுஎங்கும் இல்லாத தனித்துவத்தையும் கொண்டது.
இந்த கல்லறை 130 படிகள் சுரங்கமாக கீழே இறங்கிச் செல்கிறது, அடுத்துவரும் 83 படிகள் மீண்டும் மேற்பகுதிக்கு வெளியில் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கல்லறைக்குள் 14* செல்சியஸ் குளிர்நிலை நிர்வகிக்கப்படுகிறது.
இந்த கல்லறையை பார்க்க 14 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை யாரேனும் பெரியவர்கள் அழைத்து வந்தாலும் எச்சரித்தே அனுப்புகிறார்கள்.
இதயம், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நடக்க முடியாதவர்களை பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்.
2 கி.மீ. தூரம் உள்ள இந்த கல்லறையை, பார்க்க 45 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவும் 200 பேர் வரை மட்டுமே, அதற்கு மேல் அனுமதியில்லை. வளர்ப்பு விலங்குகளுக்கும் அனுமதியில்லை. உள்ளே கழிவறை உட்பட பிற வசதிகள் ஏதும் இல்லை.
அனுமதி நேரம் காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வாரத்தின் திங்கள்கிழமையும், மே1 ம் திகதியும் விடுமுறை. கடைசி பார்வையாளர் அனுமதி மாலை 7 மணியுடன் நிறுத்தப்படுகிறது.
இங்கு குவிந்துகிடக்கும் மனிதனின் கட்டுமானப் பொருளான எலும்புகளையும் மண்டைஓடுகளையும் பார்த்தால், இந்த இயற்கை எத்தனை கோடான கோடி மக்களை காலகாலமாக உருவாக்கியும் அழித்தும் கொண்டு, மவுனமாகவும் இருப்பது நினைவுக்கு வரும்.