நாளுக்கு நாள் பல இளம் மொட்டுக்கள் பல்வேறு காரணங்களுக்காக கசக்கி எறியப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே செல்கின்றன.
அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் ‘குற்றம்’ பகுதியின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தோம்.
பாலியல் தேவைகள், பழிவாங்கல்கள், கள்ளத்தொடர்பு, பணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு பாவமும் அறியாத சிறுவர்கள் பலியெடுக்கப்படுகின்றார்கள்.
அதுவும் வறுமை, கடன் பிரச்சினைகள், குடும்பத் தகராறு, ஆடம்பர வாழ்க்கையின் மீதான நாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தான் பெற்ற பிஞ்சுக்குழந்தைகளை பரிதவிக்கவிட்டு மாற்றான் குழந்தைகளுக்கு தாயாகி கடல் கடந்து தொழிலுக்காக செல்கின்றார்கள்.
இதனால் பிள்ளைகள் தான் பல்வேறு உடல், உள, சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றனர்.
அந்தவகையில் இவ்வாரம் ‘குற்றம்’ பகுதியில் இடம்பெறுவது அத்தகையதொரு சம்பவமாகும். தாய் வெளிநாட்டு தொழிலுக்காகச் சென்ற நிலையில் தந்தையின் இரகசிய தொடர்புகளை பேணுவதற்கு இடையூறாகவிருந்த குழந்தையை தந்தையே கொலை செய்ய முயற்சித்த சம்பவமாகும்.
ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 28வயதான பியந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு தன்னுடைய ஆண் குழந்தையை கொலை செய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 7 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணையின் மூலம் இது ஒரு கள்ளக் காதல் தொடர்பு ஒன்றின் காரணமாக ஏற்பட்டது என்பதும் தெரியவந்ததுள்ளது.
பியந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு பியூமி என்பவளை காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தான். இந்த நிலையில் கல்கிசை பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றிலேயே பியந்த தொழில் புரிந்து வந்துள்ளான்.
எனவே இருவருடைய திருமண வாழ்க்கையிலும் எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. மிகவும் அந்நியோன்யமாகவே அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக கழிந்தது.
அவர்களுடைய அன்பின் ஆதாரமாய் பியூமி கருவுற்று ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். நாட்கள் செல்லச் செல்ல பிள்ளையின் செலவு, வீட்டுச்செலவுகளுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது.
இதனால் பியூமி இரண்டு வருடங்கள் வெளிநாடு தொழிலுக்காகச் செல்ல முடிவெடுத்தாள். அதன்படி அதற்கான ஆயத்தங்களையும் மிக குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தாள்.
இதன்போது தெரிந்த வெளிநாட்டு முகவர் ஒருவரின் மூலம் பியூமிக்கு நல்ல இடத்தில் தொழிலும் கிடைத்தது. அப்போது பியூமியின் குழந்தைக்கு ஒரு வயது.
ஆயினும், தனது குடும்பத்தின் நன்மைக்காகவும், தனது குழந்தையின் எதிர்க்காலத்துக்காகவும் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வெளிநாட்டு பயணத்துக்கு பியூமி ஆயத்தமானாள்.
குழந்தையை கணவரினதும் கணவரின் தாயாரிடமும் விட்டு விட்டு வெளிநாட்டுக்குப் பயணமானாள். எனினும், தனது வெளிநாட்டு பயணத்தின் மூலம் தனது அழகிய குடும்பம் சின்னாபின்னமாக ப்போகின்றது என்பதை பியூமி சிறிதும் அறிந்திருக்கவில்லை.
பியூமி மாதா மாதம் தவறாமல் தனது கணவருக்கு செலவுக்கு பணம் அனுப்பினாள். எனினும், பியூமியின் பிரிவு பியந்தவின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தாயை பிரிந்திருக்கும் குழந்தையிடம் ஒரு தந்தையாய் பாசத்தைக் காட்டத் தவறினான்.
தனது அதிகளவான நேரத்தை வெளியிலேயே செலவழிக்க ஆரம்பித்தான். இந்நிலையில் தான் பியந்த பணிபுரியும் கல்கிசை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் குமாரியின் அறிமுகம் பியந்தவுக்கு கிடைத்தது.
இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களைப் போல் பழகி வந்தார்கள். பின் நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி இருவருக்குமிடையில் இரகசிய காதல் தொடர்புகளும் ஏற்படத் தொடங்கின.
இதன்விளைவாக இருவரும் பல நேரங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தமது பொழுதை உல்லாசமாக கழித்து வந்துள்ளனர்.
ஆயினும் இவை எதுவுமே பியூமி அறிந்திருக்கவில்லை. தனது கணவன் பியந்த தனது குழந்தையை எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்றே அவள் நிம்மதியுடன் வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுகொண்டிருந்தாள்.
இதனிடையே தான் கடந்த 7 ஆம் திகதி தனது இரகசிய தொடர்புகளை பேணுவதற்கு இடையூறாகவிருந்த தனது குழந்தையை பியந்த கொலை செய்ய முயற்சித்திருக்கின்றான்.
7 ஆம் திகதி முல்ஓயா பிரதேசத்திலுள்ள தனது மிக நெருங்கிய தோழியின் வீட்டுக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு குழந்தையையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கின்றான்.
பின் தோழியின் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியிலேயே குழந்தையை கொலை செய்ய பியந்த முயற்சி செய்திருக்கின்றான்.
முல்ஓயாவிலிருந்து வரும் வழியில் ஹங்கரகெத கடுகஸ்ஹின்ன எல்ல பிரதேசத்துக்கு சென்றிருக்கின்றான்.
அங்கு ஆபத்தான கல் உச்சியொன்றுக்கு மேல் நின்றுகொண்டு குழந்தை கீழே தள்ள முயற்சிக்கும் போதே அம்மலைப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் பலர் இக்காட்சியை கண்ணுற்று இருக்கின்றார்கள்.
அதன்பின்னரே இது தொடர்பாக உடனடியாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் நிலையத்துக்கு மேற்படி சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளார்கள்.
இதன்மூலம் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
எனினும், இது தொடர்பாக சந்தேக நபரிம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குழந்தையையும் அழைத்துக்கொண்டு தான் மலை உச்சியின் அழகை இரசிப்பதற்காக சென்றதாகவும் தனக்கு இரகசிய தொடர்பு ஒன்று இருந்த போதிலும் குழந்தையை கொலை செய்யும் எண்ணம் தனக்கு இருக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
ஆயினும், அப்பிரதேசத்தை சேர்ந்த நபர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களில் சந்தேக நபரான பியந்த குழந்தையை மலையில் இருந்து வீச முயற்சி செய்தமையை தாம் அவதானித்ததாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.“
எது எவ்வாறாயினும் பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டு தாய்மார்கள் தனது கணவன் பிள்ளைகளை விட்டு பிரிந்து வெளிநாட்டு தொழிலுக்காக செல்வதால் பல குடும்பங்கள் இவ்வாறு சின்னாபின்னமாக்கப்படுவதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகின்றது.