கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதி.
ஜெனிவா தீர்மானத்திலே கலப்பு நீதிமன்றம் என்ற சொற்றொடர் இல்லை. ஆனால் சுபாவத்திலே அது கலப்பு நீதிமன்றம் தான்.
முன்னர் அனைத்துலக நீதிபதிகள், வழக்குரைஞர்கள், விசாரணையாளர்கள் என்றிருந்தது இப்பொழுது கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கரைஞர்கள், விசாரணையாளர்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஏன் இந்த கொமன்வெல்த்தை இதற்குள் கொண்டு வருகிறார்கள் என்று பலருக்குச் சந்தேகம். கொமன்வெல்த்தைச் சேர்ந்த நீதிபதிகள் என சிறிலங்கா அரசாங்கம் சொல்லுவதிலும் ஒரு காரணம் இருக்கக் கூடும். சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களுக்கு இதை நியாயப்படுத்த வேண்டிய தேவை ஒன்று உள்ளது.
இறைமையுள்ள நாட்டிலே வெளிநாட்டு நீதிபதிகளை உபயோகிப்பது ஒன்றும் புதிதான விடயமல்ல. எங்களுடைய நாட்டுச் சட்டத்திலே இது ஏற்கனவே நடந்துள்ளது.
எங்களுடைய சட்டஅமைப்பிலே நீதித்துறையிலே அவர்களின் பங்களிப்பு வெகுகாலமாக இருந்திருக்கிறது. ஆகையினாலே நாங்கள் ஒன்றும் புதிதாகக் கொண்டு வரவில்லை என்பதைச் சொல்லுவதற்காகவோ, என்னவோ அவர்கள் அந்தச் சொற்றொடர்களைப் பாவிக்க விரும்புகிறார்கள்.
1982ஆம் ஆண்டு வரைக்கும் எங்கள் இறுதி நீதிமன்றமாக பிரிவியூ கவுன்சில் தான் இருந்து வந்துள்ளது. கொமன்வெல்த்திலுள்ள எந்த நீதிபதிகளும் எங்கள் நீதிமன்றங்களில் வாதாடமுடியும்.
அவ்வாறு நீதிபதிகள் செயற்பட்டுள்ளார்கள். சட்டமாஅதிபதிகள் இருந்துள்ளார்கள். அவர்கள் பிரித்தானியப் பிரசைகள்.
ஆகையினாலே நடந்த விடயங்களைக் காட்டி இது ஒன்றும் புதிய விடயம் அல்ல என்று சொல்லுவதற்காக இருக்கலாம். ஆனால், இதில் கொமன்வெல்த் நாடுகள் மட்டுமல்ல வெளிநாட்டு நீதிபதிகள் என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளது.
இது எப்படியாக அமையும் என்பதில் பலருக்கும் பல கேள்விகள். என்னுடைய மனதிலும் பல கேள்விகள் இருக்கிறது. எப்படி நடக்கும் என்பது இன்னும் ஒருவருக்கும் தெரியாது. இந்த தீர்மானம் ஒரு முதற்படி. முக்கியமான முதற்படி.
ஏனென்றால் சிறிலங்கா அரசாங்கம் இதற்கு இணங்கியது மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கம் தம்மை இந்தத் தீர்மானத்தை இணைந்து முன்மொழிகின்ற ஒருநாடாக அடையாளப்படுத்தியுள்ளது.. அதில் அவர்கள் கைசாத்திட்டுள்ளார்கள். சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அதிலே கைச்சாத்திட்டுள்ளார்.
சீனா, பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா போன்ற நாடுகளும் ஏதோ தாங்கள் பிரச்சினையைக் கிளப்புவது போல சிறிலங்கா சார்பாக சில பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். இனி அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது.
ஏனென்றால் சிறிலங்கா முன்மொழிந்திருக்கின்றது. சிறிலங்காவே அதை முன்மொழிகின்ற போது சிறிலங்காவின் இறைமைக்கு அது பாதிப்பில்லை. சிறிலங்காவுக்கு எப்போது பிரச்சினை வரும்?
அந்த நாட்டின் விருப்பத்திற்கு எதிராக அனைத்துலகம் ஏதாவது புகுத்தினால் தான் அந்த இறைமைக்குப் பாதிப்பு வரும்.
அந்த நாட்டினுடைய இணக்கப்பாட்டோடு , எங்களுக்கு அனைத்துலக நீதிபதிகள் தேவை, தொழில்நுட்பத்தில் பரிச்சயமானவர்கள் தேவை என்று அவர்களே அதை வரவேற்கின்ற போது அங்கே இறைமைக்குப் பாதிப்பு என்று இன்னொரு நாடு அவர்களுக்காக வக்காலத்து வாங்க முடியாது.
இதனை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்தாமல் விடுவார்களா என்ற கேள்வி எழக்கூடும். அவ்வாறு செய்யலாம். நடைமுறைப்படுத்தாமல் விடலாம். ஆனால் அதுபல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால் நடைமுறைப்படுத்தும் போது சிறிலங்கா சட்டத்திலேயே இப்படி ஒரு நீதிமன்றத்தை உருவாக்கலாம். அதே வழக்குரைஞர்களையும் நீதிபதிகளையும் நியமித்து இதை முன்கொண்டு செல்வார்களாக இருந்தால் இது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்.
நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் அந்தப் பொறிமுறை ஒருகாலமும் பிரயோசனமாக இருக்காது. அந்தப் பொறிமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஆனபடியால்தான் இறுதியிலே சில தடங்கல்கள் வந்தபோது நாங்கள் நியூயோர்க்கிற்கும்கூட வரவேண்டியதாயிற்று.
சம்பந்தன் ஐயா இரண்டு நாட்களுக்குள் உடனடியாக ஏழு, எட்டு மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் தூதுவர்களைக் கொழும்பிலே சந்தித்து அதே செய்தியைச் சொல்லியிருந்தார்.
இந்தப் பொறிமுறையை நடத்தும் பொறுப்பை நீங்கள் முற்றுமுழுதாக சிறிலங்காவிடம் விடுவதாகவிருந்தால், நாங்கள் ஏற்கமாட்டோம் நாங்கள் சொன்னோம். இங்கு அநீதி இழைக்கப்படுகிறது எனப் பலத்த குரலிலே சொல்லுவோம் என்று எச்சரித்தோம்.
நியூயோர்க்கிலே நான் பாவித்த வார்த்தைகளைச் சொல்லுவதாக இருந்தால் “We will cry foul; we will cry out loud on behalf of the victim community” என்று தான் குறிப்பிட்டேன். அந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருந்தோம்.
பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான சம்மதத்தோடு அதாவது அவர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதான ஒரு பொறிமுறை இருப்பது அத்தியாவசியம். இல்லை என்றால் அது பிரயோசனமற்றதாகி விடும்.
ஆகையினால் தான் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அரசியல்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. அதே நிலைப்பாட்டை இந்த நீதிமன்றம் உருவாக்கப்படுகின்ற போதும் நாங்கள் எடுப்போம்.
எல்லா விபரங்களும் இப்போது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த விபரங்கள் பூர்த்தி செய்யப்படுகின்ற போது – எத்தனை நீதிபதிகள், எந்தெந்த நாடுகள், அவர்களுடைய பெயர்கள் என்ன, விசாரணையாளர்கள் யார் என்ன நடக்கப் போகின்றது என்ற எல்லா விடயங்களையும் ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அவர்களின் நம்பகத்தன்மையைப் பெறுகின்ற வகையில் தான் நாங்கள் செயல்படுவோம்.
இல்லை என்றால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்குவோம். இதை நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். அதனையும் நான் உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
ஆனால் நம்பகத்தன்மை உள்ளதான முன்னேற்றமான ஒருசில நடவடிக்கைகளை எடுக்கின்ற போது நாங்கள் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைக்கத் தயங்கமாட்டோம்.
நாங்கள் எங்களுடைய மனதில் சந்தேகம் இருப்பதற்காக இவர்கள் செய்வார்களா? இடைவழியிலே விட்டு விடுவார்களா? என்று நினைத்துக் கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்காமல் விடமாட்டோம்.
நியாயமான நேரம் வரையும் நாங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்தே தீருவோம். ஏனென்றால் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பிரயோகிக்காமல் விட்டோம் என்ற பழிச்சொல்லுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது.
பலர் கேட்கிற ஒரு கேள்வி தீர்வு வருமா? சம்பந்தன் ஐயா 2016 ஆம் ஆண்டில் தீர்வு வரும் என்று கூறுகிறார். தீர்வு வருமா?
தீர்வு வருமோ வராதோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்று வந்துள்ளது. யாரும் அதை மறுக்க முடியாது.
சந்தர்ப்பம் இருக்கின்றபோது எங்களுக்கு பழைய கதைகளை எல்லாம் வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாமல் அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் இருப்பது முட்டாள்த்தனம். அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் உபயோக்கிக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தை நம்பலாமா என்று பல கேட்கின்றனர். இதிலே நம்பக்கூடாதா, நம்பலாமா என்பதில் அர்த்தமில்லை.
அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. எனக்கு நம்பிக்கையும் இல்லை; நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கும் இல்லை.
நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருந்தாத கேள்வி. சந்தர்ப்பம் இருக்கிறதா இல்லையா என்பது தான் பொருத்தமான கேள்வி. ஒரு சந்தர்ப்பம் இருந்தால் நாங்கள் அதைப் பிரயோகிக்க வேண்டும்.
எங்களுடைய மக்களுக்கு அத்தியாவசியமான பல தேவைகள் உள்ளன. அடிப்படையிலே பல தேவைகள் இருக்கின்றன. அதை எல்லாவற்றையும் விட ஒரு பூரணமான அரசியல்தீர்வு மிகவிரைவிலே பெறவேண்டிய ஒரு தேவை இருக்கிறது.
அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இதை இழுத்தடிக்க முடியாமல் எங்கள் மக்கள் கஷ்டப்படுகின்றார்கள். அதற்காக நாங்கள் மண்டியிட்டு எங்கள் அரசியல் அபிலாசைகளை விட்டுவிட்டு நாங்கள் இணங்கிப் போவோம் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம்.
ஆனால் எங்களுடைய மக்களின் அபிலாசைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தால், ஒரு அரசியல்தீர்வு வருமாக இருந்தால் அதை நாங்கள் புறந்தள்ளக் கூடாது. என்னால் நம்பமுடியவில்லை என்று கூறிக்கொண்டு கையைக் கட்டிக்கொண்டு மற்றப்பக்கம் திரும்பி இருக்கக்கூடாது.
நாங்கள் அதை உபயோக்கிக்க வேண்டும். துணிந்து மக்கள் சார்பாக நாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைக் கையில் எடுக்க வேண்டும். எடுத்தால் தான் நாங்கள் முன்னேற முடியும்.
சிலவேளை பிழைக்கலாம். பிழைத்தால்பரவாயில்லை. செய்யாமல் இருந்தால் ஒன்றும் வராது தானே? இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லைத்தானே?
நாங்கள் எத்தனிக்கவில்லை; இதுசரிவராது என்று சொல்வதிலும் பார்க்க, நாங்கள் எத்தனித்தோம், அது சரிவரவில்லை என்ற நிலைப்பாடு எவ்வளவோ மேலானது.
ஆகவே இந்தப் பிரச்சனையிலும் கூட நாங்கள் ஏன் முழுமனதாக ஈடுபடுகிறோம் என்றால் இன்றைய அனைத்துலக சட்டத்திலே நிலைமாறுகின்ற நீதி என்பது தான்முக்கியமானது.
அதில் நான்கு தூண்கள் உள்ளன. உண்மையைக் கண்டறிதல்; நீதி வழங்கப்படுதல்; இழப்பீடு கொடுக்கப்படுத்தல்; இப்படியான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம்.
இந்த நான்கும் மிகமுக்கியமானவை. உண்மை கண்டறியப்பட வேண்டும். பல விடயங்களில், முக்கியமாக, காணாமல்போனவர்கள் சம்பந்தமான உண்மை கண்டறியப்பட வேண்டும். அவர்களுடைய தாய்மார்கள், மனைவிமார்கள், உறவினர்கள் பலருக்கு உண்மை தெரியும்.
யார் கையில் ஒப்படைத்தோம் என்று அவர்களுக்குத் தெரியும். எந்த முகாமிலிருந்து வந்து என்னுடைய மகனை அவர்களை இழுத்துச் சென்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
பலருக்குத் தெரியும். பலர் வெளிப்படையாக சாட்சியம் கொடுத்திருக்கிறார்கள். அந்த உண்மையைக் கண்டறிய வேண்டும்.
அந்த முகாமுக்குப் பொறுப்பானவர்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று சொல்லவேண்டும். ஏன் அவரை இத்தனை வருடமாகக் காணவில்லை. அந்த உண்மை வெளிவர வேண்டும். அதுமாத்திரமல்ல. பல உண்மைகள் வெளிவர வேண்டும்.
பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறக் கூடிய விதத்திலே நீதிவிசாரணைகள், குற்றவியல் வழக்குகள் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கொடுக்கப்பட வேண்டும். திரும்பவும் அவர்கள் தங்கள் காலிலே எழுந்து நிற்கக்கூடிய வகையிலே இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
இனிமேல் இவை நிகழாமல் எப்படி உறுதிப்படுத்துவதென்றால், அதற்கான ஒரு சிறந்த உறுதிப்பாடு புதிய அரசிடம் உள்ளது என்று அதை வழிவகுக்கின்ற அமைச்சரே ஜெனிவாவில் சொன்னார்.
தமிழ்மக்களுக்கு இதுவரை காலமும் இருந்து வரும் குறைகள் நீக்கப்படுகின்ற விதமான ஒரு புதிய அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்படும்.
அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். அங்கேதான் அரசியல்தீர்வு வருகின்றது. எங்களுடைய மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்.
தென்னாபிரிக்காவில் உள்ள பல அறிஞர்களோடு நாங்கள் பலதடவைகள் பேசியுள்ளோம். அவர்கள் எங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சொல்லும் ஒரு விடயம் இருக்கிறது.
முதலிலே அரசியல்தீர்வு வரவேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைச் சீர்செய்து கொண்டால்தான் நீங்கள் முன்னர் நடந்தவைகளைச் சரியாக ஆராயலாம். எதிர்காலம் எப்படியாக இருக்குமோ என்று தெரியாத ஒரு சூழ்நிலையிலே முன்னர் நடந்த குற்றங்களை ஆராய்வது மிகவும் கஷ்டமானது.
நாங்கள் எங்களுடைய மக்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெற்றுள்ளோம், தொடர்ச்சியான ஆணையைப் பெற்றுள்ளோம்.
இந்தத் தேர்தலிலே இணைந்த வடகிழக்கிலே, ஒரு சுயட்சிமுறையான ஆட்சிமுறையிலே பிளவுபடாத சிறிலங்காவுக்குள்ளே ஒரு அரசியல்தீர்வு என்று சொல்லியுள்ளோம்.
அதற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதற்குப் புறம்பான நிலைப்பாடு உள்ளவர்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள். முற்றுமுழுதாக உதறித்தள்ளியிருக்கிறார்கள்.
ஆகையினாலே இது எங்களுடைய மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பு. இன்றைய நிலைப்பாடு மட்டுமல்ல தொடர்ச்சியாக மக்கள் கொடுத்த ஜனநாயகத் தீர்ப்பு. அந்த ஜனநாயகத் தீர்ப்பை எல்லோருக்கும் முதல் நாங்கள் மதிக்க வேண்டும்.
மக்களுடைய ஜனாயகத் தீர்ப்பை மதிக்கின்றீர்கள் இல்லை, எங்களுடைய மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பை மதிக்காமல் தான் நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று நாங்கள் சிங்கள அரசாங்கத்துக்குச் சொல்கிறோம். ஆனால் அதே குற்றத்தை இப்பொழுது எங்களுடைய ஆட்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக அங்கே உள்ள மக்கள் கொடுக்கின்ற ஜனநாயகத் தீர்ப்பை மதிக்காமல் அதைக் கேலி செய்யும் வகையில் வேறுவிதமாக தங்களுக்கு விருப்பமான முறையில் – இல்லை இதுதான் செய்ய வேண்டும்- என்று சொல்லுவது, ராஜபக்ச செய்ததை விட, ஜேஆர் செய்ததை விட, சிறிமாவோ செய்ததை விட, பண்டாரநாயக்கா செய்ததை விட மோசமானதாகும்.
ஆகையினாலே எங்களுடைய மக்களுடைய ஜனாயகத் தீர்ப்பை நாங்கள் மதிக்கப் பழகவேண்டும். அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அதற்காக நாங்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அதைப் பெறுவதற்கான ஒரு சிறப்பான சந்தர்ப்பம், இந்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேறுவதோடு ஏற்பட்டிருக்கிறது என்பது எங்களுடைய எண்ணம்.
இதிலே மாறுபட்ட எண்ணங்கள், கருத்துக்கள் பலருக்கு இருக்கலாம். அதை இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் நான் ஆரம்பத்தில் சொன்னது போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பிரயோகிப்போம்.
கலப்பு நீதிமன்றத்தை நாங்கள் பிரயோகிப்போம். உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நாங்கள் பிரயோகிப்போம்.
இழப்பீடுகள் எமது மக்களுக்குக் கொடுபட வேண்டும். அவர்கள் திரும்பவும் தங்கள் சொந்தக்காலிலேயே நிற்கக்கூடிய உருவாக வேண்டும்.
இன்றைக்கு ஒரு கிராமத்துக்குச் சென்றால் எந்த இளைஞர்களுக்கும் வேலை இல்லை. வேலை இல்லாதது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரங்களுக்காக நான் பல இடங்களுக்குச் சென்றபோது மற்றவர்கள் சொல்லிக் கொடுத்த கேள்விகளை முதலில் கேட்பார்கள்.
‘நீங்கள் இப்படிச் சொன்னீர்களாம்; அப்படிச் சொன்னீர்களாம்’ என்று கேள்விகள் வரும். மற்றவர்கள் எழுதிக்கொடுத்த கேள்விகளைக் கேட்பார்கள்.
இறுதியில் “ஐயா எனக்கு வேலை எடுத்துத் தருவீர்களா” என்று கேட்பார்கள். “வேலை இல்லாட்டி நான் என்னையா செய்யிறது. நான் வெளிநாட்டுக்குத் தானே போகவேண்டும்?” என்பார்கள்.
எல்லாரும் வெளிநாடு சென்றால் என்ன செய்வது? எல்லா இளைஞர்களும் வெளிநாடு போனால் பிறகென்ன அரசியல்தீர்வு? அதற்குப் பிறகு என்ன சுயாட்சி? ஆகையினாலே எங்களுடைய மக்கள் அங்கே சுயமரியாதையோடு வாழக்கூடிய வகையில் அவர்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
அதற்காகவாவது நாங்கள் செயல்பட வேண்டும். அதை நாங்கள் வற்புறுத்த வேண்டும்; அதை நாங்கள் பெறவேண்டும். எங்களுடைய நாட்டிலே எந்த மக்களுக்கும் சளைத்தவர்களாக இல்லாமல், எவருக்கும் நிகரான பிரசைகளாக, தாங்கள் சட்டபூர்வமாக வாழுகின்ற பிரதேசங்களிலே தங்களைத் தாங்களே ஆளுகின்ற விதமாக, ஒரு சுயாட்சிப்பொறிமுறை ஒன்று அரசியல் சட்டத்திலே திரும்பப்பெற முடியாத வகையிலே ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதுதான் நிலையான நீடித்து நிற்கக்கூடிய ஒரு அரசியல்தீர்வாக இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் ஒன்று இப்பொழுது எழுந்திருக்கிறது. அனைத்துலக சமூகத்தினுடைய இந்த ஈடுபாட்டோடு நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்லலாம் என்று நம்புகின்றோம்.
அதற்கான ஆதரவை நாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலே உள்ள எங்களுடைய உறவுகளிடம் கேட்கிறோம். எங்களுடைய மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள ஆணைக்காகவாவது நீங்கள் எங்களுடன் சேர்ந்து இயங்குங்கள்.
எங்களோடு சேர்ந்து செயல்படுங்கள். இந்த இறுதி இலக்கை நாங்கள் அடைவதற்கு அங்கே வாழுகின்ற மக்கள் மட்டுமல்ல புலத்திலே வாழுகின்ற மக்களும் இணைந்து கைகோர்த்து அந்த இலக்கை அடைவதற்காக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நடக்கப் போவது கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? : சுமந்திரன் விளக்கவுரை – (பாகம் 1)
இன்று சுமந்திரன் கனடாவில் பேசியதென்ன? ஒரு சிறப்பு பதிவு- (விடியோ)