என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார்.
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிள்ளையான் ஆகியோர் மட்டும் இருக்க தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து திறந்த நீதிமன்ற பகுதிக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு அவரது சட்டத்தரணியால் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
‘ எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி உங்களை இதே மன்றில் முன்னிலைப் படுத்துவர். அப்போது நாம் வருவோம். ஒன்றும் பயப்பட தேவையில்லை. உங்கள் உறவினர்களுக்கு சனிக்கிழமை உங்களை பார்வையிடலாம். உணவும் கொண்டுவந்து தரலாம் என இதன் போது அந்த சட்டத்தரணி பிள்ளையானிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கைவிலங்கிடப்பட்ட பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வரப்பட்டார்.
இதன்போது மன்றின் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பிரதான வாயிலை பிள்ளையான் அடைந்த போது அங்கிருந்த புகைப்படப் பிடிப்பாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர்.
பிள்ளையானின் தடுப்புக்காவல் நீடிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொலிஸ் விசாரணைக்காக 72 மணித்தியாலங்களுக்கு மேல் ஒருவரை தடுத்து வைக்க முடியாது. 72 மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை செய்வதாயின் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.
இதன் பிரகாரம் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு துறையினரால் இன்று புதன்கிழமை முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் 4ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.
நான்காவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டு பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை
13-10-2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நீண்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட அவரிடம் முன்னாள் எம்.பி. பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில், புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழ் நேற்று மாலையாகும் போதும் விசேட விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் சிறப்பு ஆராதனைகளின் போது மட்டக்களப்பு, தேவாலயம் ஒன்றில் வைத்து முன்னாள் எம்ஜ்பி ஜோஸப் பரராஜ சிங்கம் அடையாள்ம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன் அவரது மனைவி உள்ளிட்ட 8 பேர் சம்ப்வத்தில் காயங்களுக்கு உள்ளாகினர்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசேட விசாரணைகளை நடத்துகின்றது.
கடந்த புதன்கிழமையன்று மட்டக்களப்புக்கு சென்றிருந்த விசேட பொலிஸ் குழுவினர், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா என்றழைக்கப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரையும் கொழும்புக்கு அழைத்து வந்த புலனாய்வுப் பிரிவினர் அவர்களை 90 நாள் தடுப்புக் காவலில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் மன்றில் பெற்றுக் கொண்ட அனுமதிக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக பிள்ளையான கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிள்ளையான கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை 6.15 ஆகும் போது கைதாகி 24 மணி நேரமே நிறைவடைந்திருந்தது.
அதன்படி பொலிஸாருக்கு பிள்ளையானை 48 மணி நேரம் தடுத்து விசாரிக்க அனுமதியுள்ள நிலையில் இன்று அவர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவொன்றின் கீழ் விசரணை யொன்றுக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.