தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழுழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பிள்ளையான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தினால் கைது செய்யப்படுவேன் என்று நான் அஞ்சவில்லை.

ஏனென்றால் நான் எந்தக் குற்றங்களையோ, தவறுகளையோ செய்யவில்லை. எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.

இந்திய அமைதிப்படையினருக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1989இல் 5000 ரி 56 துப்பாக்கிகளை விடுதலைப் புலிகளுக்கு வழங்கி ஊக்குவித்திருந்தது ஐதேக அரசாங்கம்.

விடுதலைப் புலிகளை ஊக்குவித்த இதே அரசாங்கம் தான் கடந்தகாலத்தை மறைத்து இப்போது நல்லாட்சி என்று நாடகமாடுகிறது.

கடந்த அரசாங்கத்தில் எனது பங்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்து சாட்சியம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

கருணா குழு என்றே ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எனது பெயர் கூறப்படவில்லை. எனது பெயரைப் பயன்படுத்தி சிலர் குற்றங்களை இழைத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் போர் இறுதிக்கட்டத்தை் எட்டியிருந்த போது, நான் இந்தியாவில் தங்கியிருந்தேன். விசாரணைக்கு அழைத்தால், அதனை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் மட்டக்களப்பில் எனது தாயருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறேன். உலகின் எந்தப் பகுதிக்கும் என்னால் செல்ல முடியும். ஆனால் எனது தாயாருடன் மட்டக்களப்பிலேயே இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply