பிரித்தானிய உள்ளாட்சி நிர்வாகம் ஒன்றின் விஷேச அழைப்பின் பேரில் பிரித்தானியாவிற்கு vikneswaran-cmநீங்கள் வந்திருப்பது கடந்த ஏனைய வருகைகளை விட வித்தியாசமானது.
பிரித்தானிய மக்களுக்கும், இலங்கை மக்களுக்குமிடையே குறிப்பாக வட மாகாண மக்களுக்குமிடையே ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தும் வரலாற்று நிகழ்வு அது ஆகும். எனவே உங்களது இவ் வருகையை மிக மகிழ்வோடு வரவேற்கிறோம்.
பிரித்தானிய உள்ளுராட்சி அமைப்புகள் பல ஐரோப்பிய நகரங்கள் பலவற்றுடன் இணைப்பில் உள்ளன. முதலாவது, இரண்டாவது உலக மகா யுத்தங்களின் காரணமாக பெற்ற கசப்பான அனுபவங்களால், அவ்வாறான கொடுமை நிறைந்த, பல லட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட போர் மீண்டும் இடம்பெறக்கூடாது என எண்ணி ஐரோப்பிய நாடுகள் பலவும் மக்களுடன் மக்கள் என்ற அடிப்படையில் இணைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவை முற்றிலும் தனித்துவமானவை. உதாரணமாக பிரித்தானிய உள்ளுராட்சி சபைகளில் பல ஜேர்மனியிலுள்ள உள்ளுராட்சி சபைகளுடன் இணைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களிடையே நல்லுறவுகளை வளர்த்து வருகின்றன.
இதன் பின்னணியில் உள்ளுராட்சி சபைப் பிரதிநிதிகளும், அச் சபைகளில் பணி புரியும் நிர்வாகிகளும் முதுகெலும்பாக உள்ளனர்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வௌ;வேறு மக்களிடையே பரஸ்பர உறவுகளைப் பலப்படுத்தவதன் மூலம் போருக்கான வாய்ப்புகளைத் தணிக்கலாம் என உறுதியாக நம்புகின்றனர்.
அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அதனையே உணர்த்துகின்றன. சமூக அமைப்புகள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், முதியோர் அமைப்புகள் போன்றன இதில் ஈடுபடுவதால் ஒவ்வொரு பிரஜையும் தாமே ஈடுபடுவதாக உணர்கின்றனர்.
இதனால் தாம் ஐரோப்பிய பிரஜைகள் என்ற பலமான அடையாளத்தை, உணர்வை வளர்க்க உதவுகின்றன. இதனால் மற்றவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை அறிகின்றனர்.
இவை இணைப்பை மேலும் பலப்படுத்த உதவுகின்றன. உதாரணமாக பிரித்தானியா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளது.
ஆனால் இதனை நிறைவேற்றுவது என்பது மிகவும் எளிதான அலுவல் அல்ல என்பது ஆட்சியாளர்களால் தற்போது உணரப்படுகிறது.
மிகப் பெருந்தொகையான பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிரந்தரமாக தங்கி இணைந்து வாழ்கின்றனர்.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் என்பது மென்மையானதா? அல்லது கடுமையானதா? என்ற வாதங்களும் எழுந்துள்ளன.
முதலமைச்சர் அவர்களே!
முதலாம், இரண்டாம் உலகப் போரின் விளைவுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்;, உதாரணமாக கிழக்கு ஐரோப்பிய மக்கள் குறித்து காணப்படும் தாழ்வு எண்ணங்கள் என பல காணப்பட்ட போதிலும் ஐரோப்பிய மக்களிடையே இணைப்பின் அவசியம் எப்போதும் உயர்ந்தே உள்ளன.
பல்வேறு சந்தேகங்கள், வெறுப்புகளுக்கு மத்தியிலும் மக்களிடையே உறவுப் பாலத்தை அமைப்பதற்கு முதலிடம் வழங்குகின்றனர்.
பிரித்தானிய உள்ளுராட்சி அமைப்புடன் இணைப்பை ஏற்படுத்த வந்திருக்கும் நீங்கள் இவ் இணைப்பிலிருந்து எந்த அனுபவத்தை அமுல்படுத்த எண்ணுகிறீர்கள்?
பிரித்தானிய அரசியல் நிர்வாகம் ஒற்றை ஆட்சித் தன்மை கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்தில் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையில் செயற்படுகிறது.
உள்ளுராட்சி சபைகள் நியாயமான அளவிற்கு சுயாதீனமாக இயங்குகின்றன. வரி விதிக்கும் அதிகாரங்கள் உள்ளன. மத்தியில் மாற்றுக் கட்சி பதவியில் இருப்பினும் நிர்வாகம் சுயாதீனமாக இயங்குகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களே அரசியல் பிரச்சனைகளைக் கையாள, உள்ளுராட்சிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றன.
இவ்வாறான நிலையில் நீங்கள் வட மாகாண சபையின் பதவியைப் பெற்று மூன்று ஆண்டுகளாகின்றன.
இம் மூன்று ஆண்டுகளில் போரினால் சீரழிந்த பொருளாதாரத்தையும், மக்களையும் மேன்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, 13வது திருத்தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபையைக் கேள்விக்குட்படுத்தி பதவியைக் கைப்பற்றிய உங்கள் நிர்வாகம் இதுவரை சாதித்தது என்ன? எனப் பார்க்கும்போது கவலைதான் மிஞ்சுகிறது.
ராணுவ ஆளுனர் நிர்வாகங்களை நடத்தியபோது இருந்ததை விட மிக மோசம் என மக்கள் முணுமுணுக்கின்றனர்.
அதிகாரம் போதாது என கூக்குரல் இடும் நீங்கள், பல கோடி மோசடிகள் நடந்திருப்பதாக, அமைச்சரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருப்பதாக, தலைமை ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுகின்றனவே, இவை அதிகாரப் பற்றாக்குறையால் எழுந்த நிலமைகளா? அல்லது தரமற்ற நிர்வாகச் சீர்கேடுகளா?
முதலைமைச்சர் அவர்களே!
சில தினங்களுக்கு முன்னர் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் லண்டனில் உரையாற்றியபோது வட மாகாணத்தின் அவல நிலையை பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக்காட்டி உரைத்தார்.
இதில் போதை வஸ்துப் பாவனை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு, இளைஞர்கள் மத்தியிலே வளர்ந்து வரும் மதுப் பாவனை, பெருகி வரும் மதுபானச் சாலைகள் என வரிசையாக எடுத்துக் கூறினார்.
இவை யாவும் மாகாண சபையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சாதாரண பிரஜை வெளிப்படுத்தும் ஆதங்கம் போல பேசுகிறார்.
தனக்குள்ள பொறுப்பினை தட்டிக் கழிப்பதாக, மறைப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ்த் தேசியவாதத்தின் புதிய பாதுகாவலராக காட்ட முனைகிறீர்கள்.
அவ்வாறானால் வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது யார்? போர்க் குற்றங்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள் பொறுப்பாளர்கள் எனில் இந்த நிலமைகளுக்கு நீங்கள் பொறுப்பாளர் இல்லையா?
அவர் தனது உரையின் போது பேரவையின் செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கையில் சமீபத்தில் உங்கள் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியின் நோக்கம் பற்றிய சந்தேகங்களை வெளியிட்டார்.
சிவில் சமூகத்தால் அப் பேரணி நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அங்கு தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், முன்னைய ஆயுதப் போராளிகளில் சிலர் சிவில் சமூகம் என்ற பெயரால் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டதாக விபரித்தார்.
கூட்ட அமைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மாவை. சேனாதிராஜா அவர்களிடம் தமது கூட்டத்திற்கு ஆதரவு தரும்படி கோரியதாக முறையிடுகிறார்.
அவரின் உரையின் பிரகாரம் பார்க்கையில் நீங்கள் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுவதாகவும், அரசியல் அமைப்பு மாற்றம் குறித்த செயற்பாடுகளில் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கையில் சிங்கள தீவிரவாத சக்திகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டது விவேகம் நிறைந்த செயல் என கருதுகிறீர்களா? நீங்கள் இரு பக்கத்திலுமுள்ள தீவிரவாத சக்திகளுக்கு உதவுவதாக, நொந்துபோன தமிழ் மக்களுக்கு மேலும் துன்பம் கொடுக்க முயல்வதாக நாம் குற்றம் சாட்டுகிறோம். மறுக்க முடியுமா?
எதிர் காலத்தில் வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை 10 எனவும் 6 பேர் போட்டி மூலமும், அடுத்த 4 பேர் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறுகிறார்.
இவை அடுத்த 10 வருடங்களுக்கு மட்டுமே எனவும் அதன் பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும் கூறுகிறார். அவ்வாறானால் மக்கள் குடித் தொகையை அதிகரிப்பது மாகாண சபையின் கடமையாகும்.
இதுவரையில் அதற்கான திட்டம் எதனையும் தயாரித்துள்ளீர்களா? தமிழகத்திலுள்ள அகதிகளில் ஒரு பகுதியினர் மீண்டும் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறானால் அவர்களைக் குடியேற்ற உங்கள் திட்டம் என்ன? அரசினால் ஒதுக்கப்பட்ட பணம் உரிய முறையில் பயன்படுத்தாமையால் அப் பணம் திருப்பி அனுப்பப்பட்டதாக முறையிடப்படுகிறது. அவ்வாறானால் நீங்கள் வினைத் திறன் அற்ற நிர்வாத்தை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறோம். மறுக்க முடியுமா?
இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையை மக்களும், உலகமும் நன்கு அறியும். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, விடுதலை இயக்கங்கள், தமிழர் தேசியக் கூட்டமைப்பு என தமிழ்க் கட்சிகள், இயக்கங்கள் என அவ்வப்போது அவதாரம் எடுத்து மக்களின் வாக்குகளைப் பறித்த போதும் பிரச்சனைகள் தீரவில்லை.
பதிலாக பிரச்சனைகள் மேலும் உக்கிரம் அடைந்து தீர்ப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து, மக்களும் துன்பத்திற்குள் தள்ளப்பட்ட வரலாறுகளே எஞ்சியுள்ளன.
அத்துடன் இந்த வரலாறுகளோடு தம்மையும் இணைத்துச் சென்ற அரசியல் தலைவர்கள் சிலர் தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட அனுபவங்களும் உள்ளன.
இதன் விளைவாகவே தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் எனவும், சமஷ்டி, ஒற்றை ஆட்சி எனவும் அரசியல் வாழ்வை சிக்கலுக்குள் தள்ளியவர்கள் இறுதியில் ஒற்றுமைக்கு முதலிடம் கொடுத்து கூட்டணி அமைத்தார்கள்.
ஒற்றை ஆட்சி, சமஷ்டி என்ற கோட்பாடுகள் மறைந்து பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தின் அடிப்படையிலான சுயாட்சி என்ற புதிய வியாக்கியானத்திற்குள் தமது அரசியலை எடுத்துச் செல்கிறார்கள். இது அரசியல் அனுபவத்தின் வெளிப்பாடாகும்.
இவ்வளவு அரசியல் வரலாறும் உங்களது வாழ்வுப் பயணத்தில், உங்களுக்கு வெளியில், உங்களின் பங்களிப்பு கிஞ்சித்தும் இல்லாமல் நடந்தேறியுள்ளது.
ஆனால் மாகாண சபை நிர்வாகத்தைப் பொறுப்பேற்க மிகவும் தயக்கத்துடன் பலரின் வற்புறுத்தலுக்காக வந்ததாக கூறிச் செல்லும் நீங்கள், மாகாணசபைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் போக்கை மாற்றப் போவதாகக் கூறி புதிய பயணத்தை மேற்கொண்டிருப்பது பழைய அனுபவங்கள் எதுவும் உங்கள் கவனத்தில் இல்லை எனக் கொள்வதா?
அல்லது புதிய மொந்தையில் பழைய கள்ளை விற்க முனைகிறீர்களா? தமிழரசுக் கட்சித் தலைமை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டி பேரவை என்ற பெயரில் இன்னொரு அவதாரம் எடுத்து மக்களை மீண்டும் முள்ளி வாய்க்காலுக்கு எடுத்துச் செல்கிறீர்களா?
காலம் காலமாக அரசியல் கட்சியை நடத்தி பல போராட்டங்களினூடாக தம்மைத் தியாகம் செய்த பலர் இருக்கையில் எந்தவித சுய இழப்புகளும் இல்லமலே புதிய அரசியல் வியாபாரியாக நீங்கள் வலம் வருவதும், ஏற்கெனவே பழமும் தின்று கொட்டையும் போட்டதாக எண்ணிச் செயற்படும் முன்னோர்களுக்கு நீங்கள் சவால் விடுவதும் பொருத்தமற்ற சப்பாத்துடன் அலையும் ஒரு நிலையாக கருதவில்லையா?
வட மாகாணத்து மக்கள் போரின் அனர்த்தங்களால் மட்டுமல்ல, இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போதுமான குடிநீர் இல்லை. நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. மிக அதிகமான கிணறுகளும், அருகருகே மலக் கழிவுக் கிடங்குகளும் அதிகரித்து கிடைக்கும் குடிநீர் மேலும் மோசமான நோய்களை ஏற்படுத்துகிறது.
கடல் நீரை குடிநீராக மாற்றும் யோசனைகளில் ஊழல் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இரணைமடுக் குளத்து நீரை குடாநாட்டிற்கு எடுத்து வருவதில் அரசியல் தலையீடு காணப்படுகிறது. இவை எதுவும் சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்பட்டதல்ல. தமிழரைப் பாதுகாப்பதாக பீத்தும் எமது அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
குடாநாட்டிற்குள்ள நீர்த் தேக்கங்கள் யாவும் தூர்ந்து போயுள்ளன. யாழ். நகரத்திற்குள் காணப்பட்ட நீர் நிலைகள் மூடப்பட்டு சட்ட விரோத கட்டிடங்கள் எழும்பியுள்ளன.
மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான நீர் நிலைகளும், நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால்களும் தூர்ந்துள்ள பின்னணியில் உவர் நீரை நன் நீராக்கி எந்தத் தேவையை நிறைவேற்ற எண்ணுகிறீர்கள்? ஆடு, மாடு மற்றும் இதர ஜீவராசிகளின் உயிர்வாழ்தல், சிறு விவசாயம் போன்றன குறித்து உங்கள் கவனம் என்ன?
தீவகத்திலிருந்த மக்கள் அங்கு காணப்பட்ட நீர்ப் பற்றாக் குறையினால்தான் வன்னியை நோக்கி நகர்ந்தார்கள். நீங்கள் குடாநாட்டில் நிலவும் நீர்த் தேவையை நிறைவேற்றா விடில் குடாநாடு வனாந்தரமாக மாறுவது தவிர்க்க முடியாதது.
நீங்கள் கனவு காணும் சுயநிர்ணய உரிமையும் கானல் நீராகி விடும். அது மட்டுமல்ல பாடசாலைகள், வைத்தியசாலைகள், தெரு வீதிகள் மிக மோசமாக உள்ளன.
இதனால் கல்வி, சுகாதாரம் மிகப் பின்தங்கியுள்ளது. சாமான்ய மக்கள் தனியார் பாடசாலைகளுக்கு அல்லது தனியார் வைத்தியசாலைகளுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம். முதியோர், மாற்றுத் திறனாளிகளின் தொகை அதிகரித்துள்ளது.
இவர்களின் தேவைகளைக் குடும்பங்களால் நிறைவேற்ற முடியவில்லை. மாகாணசபை, பிரதேச சபைகள், மாநகர சபை போன்ற உள்ளுராட்சி சபைகளும் மாகாண சபையின் மேற்பார்வையில் வருகின்றன.
இவை குறித்து உங்கள் கவனம் ஏன் திரும்பவில்லை? தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் நீங்களும் அதில் இணைவது உங்கள் பலவீனங்களை நாறிக் கிடக்கும் மாகாண நிர்வாகத்தை தமிழ்த் தேசிவாதம் என்கின்ற போர்வையால் நீங்கள் மறைக்க எண்ணுவதாக மக்கள் கருதுகின்றனர்.
நாம் உங்களிடம் அரசியல் தீர்வை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அரசியல் நடத்தி உரிமையைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு இல்லை.
மாகாணசபையின் 5 வருடகால ஆயுளில் மூன்று வருடங்களை விரயமாக்கினீர்கள். அடுத்த 2 வருடங்களையாவது மக்களுக்காக, உங்களை தெரிவு செய்த மக்களுக்காக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக நீங்கள் செலவழிக்க ஏதாவது யோசனைகள் உங்களிடம் இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். புலம் பெயர் மக்கள் அவை குறித்து தமது கவனத்தைச் செலுத்த முடியும்.
நாம் தாயகத்திற்கு அப்பால் வாழும் மக்களின் ஆதங்கங்களில் சிலவற்றை உங்கள் மேலான கவனத்திற்கு வைக்கவே இப் பகிரங்க மடலை வரைகிறோம். தாயக மக்களின் நல் வாழ்விற்காக புலம் பெயர் தேசங்களில் கிடைக்கும் வளங்களை ஒருமுகப்படுத்தி அரசியலுக்கு அப்பால் மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறோம்.
நன்றி
பிரித்தானிய தமிழர் புலம்பெயர் அமைப்பு