“அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழமை போல மீண்டுமொரு பொய்tna mayday வாக்குறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது” இதுவே இவ்வருட இலங்கையின் தொழிலாளர் தின ஹைய் லைற் (highlight) ஆகும்.

ஏற்கனவே 2015 நாடாளமன்றத் தேர்தலின் போது 2016ஆண்டு ஜூன் மாதத்தினுள் இணைந்த வட கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கியது. பின்னர் அது வெறும் கணிப்பாகவே சொல்லப்பட்டது என்றார் சம்மந்தர்

தமக்கு தமிழ்மக்கள் வாக்களித்தால், அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதுடன், படையினர் வசமிருக்கும் தமிழ்மக்களின் காணிகளை மீட்டுத் , தருவோம், காணாமல் ஆக்கப்பட்டவர்ள் விவகாரம் தீர்க்கப்படும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்போம் என இன்னோரன்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

பின்னர் இவ்வாக்குறுதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், சில இணக்கங்களைக் கண்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.

ஆனால் இன்றுவரை எதற்கும் எந்தவொரு முழுமையான தீர்வு எட்டப்படவுமில்லை அவற்றிற்கான திடமான உறுதி மொழிகள் கூட அரச தரப்பில் இருந்து வழங்கப் படவுமில்லை.

ஆனால் அரசாங்கம் தமக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றித்தராமல் இழுத்தடிப்பதாகவும், தொடர்ந்தும் அரசாங்கம் தம்மை ஏமாற்றினால் மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததைப் போல் இந்த ஆட்சியாளர்களையும்  வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும் சம்மந்தர் சூழுரைத்தார்.

ஆனால் கூட்டமைப்பு புதிய ஆட்சியாளர்களுடன், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் ஆக்க பூர்வமான பேச்சுக்களை நடத்தவும் இல்லை. இணக்கங்கள் எதையும் பெறவும் இல்லை என்பதே யதார்த்தம் .

தவிரவும் ‘போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஊடாக விரைவில் முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவோம்’ என்றும் கூறினார்கள்.

இன்று போர்க்குற்ற விசாரணைகளுக்கான இரண்டு வருட கால நீடிப்பை வழி மொழிந்து தமது ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர். “இழுத்தடிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது” என்பது பழுத்த அரசியல் வாதியான சம்பந்தருக்கு தெரியாதது அல்ல.

காலத்துக்குக் காலம் பல பசப்பு வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைமையும் மாறி மாறித் தமிழ்மக்களுக்கு வழங்க,மக்களும் அவற்றை நம்பி,நம்பி ஏமாந்து இன்று ஏமாற்றத்தின் அதி உச்சத்தை தொட்டு நிற்கின்றனர்.

இந்த ஏமாற்றமே தமது பிரச்சனைகளுக்காக தாமே தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.

கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வழமை போல் காற்றில் பறக்க விட்டு விட்டு தமதும் தாம் சார்ந்தவர்களினதும் சுகபோகத்தை மட்டும் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சுய செயல்ப் பாட்டை மக்களே இன்று நேரடியாக விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எதிராகவும் வீதியில் இறங்கிப் போராடவும், துணிந்துவிட்டார்கள்.

இந்நிலையில், தமிழ் மக்களின் கோபத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மீண்டுமொரு வாக்குறுதியை சம்மந்தன் கொடுத்திருக்கின்றார் இந்த மே தினத்திலே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறைப்பற்றில் நடத்திய உழைப்பாளர் தின நிகழ்வில் எடுத்த தீர்மானத்தில்,

1.சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

2.பாதுகாப்புத் தரப்பினரால் வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் நிலங்கள் கால தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

3.போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும்.
என்ற தீர்மானங்களை வீராவேசமாக நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தர், தமது கோரிக்கையின் பிரகாரம் இரண்டு வாரத்திற்குள் அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் உள்ளடக்கப் படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் பரிந்துரைகள் கூட இன்னமும் தயரிக்கப் படாத நிலையில் சம்மந்தர் இப்படி கூறியிருப்பதானது வேடிக்கையான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

வழிநடத்தல் குழுவில் என்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்ற அறிக்கை இரண்டு மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கூறியிருந்தார் இதனைத்தான் சம்பந்தர் அரசியல் தீர்வு எனக் கூறி மக்களை தொடர்ந்தும் மாக்கள் ஆக்க நினைக்கிறாரோ எனவே எண்ணத் தோன்றுகிறது.

அரசியலமைப்பு சீர்திருத்த அல்லது புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பாக பிரதமரினால் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தனும், சுமந்திரனும் அங்கத்தினராக இருக்கின்றார்கள்.

அங்கே நடக்கும் அனைத்தையும் அறிந்த இவர்கள் எவ்வாறு அடுத்த இரண்டு வாரத்திற்குள் அரசாங்கம் தீர்வை முன்வைக்குமென்று நம்புகின்றார்கள்…? என்பதே ஒரு பாமரனின் இன்றைய கேள்வியாகும்.

இரண்டு வாரத்திற்குள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்கா விட்டால், சம்மந்தனும், சுமந்திரனும் முதலில் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறுவார்களா…?

அடுத்து தம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தமிழ்மக்களுக்கு வழங்கியதை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றப் பதவிகளைவிட்டும் ஒதுங்குவார்களா…?

-அலப்பு ஆறுமுகம்-

Share.
Leave A Reply