இலங்கையில் மிகப்பழமையான சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட, 84 வயதை கடந்த மூத்த அரசியல்வாதியான என்னிடமிருந்து, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விடுக்கும் அவசர அழைப்பு இதுவாகும்.

உணர்ச்சிவசப்பட்டும், பொய் அறிக்கைகள் மூலமும் பாதிக்கப்படாது, உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.

இது இளைஞர்கள், முதியோர்கள், ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வைத்திய கலாநிதிகள், பொறியிலாளர்கள்  எல்லாவற்றுக்கும்  மேலாக  ஒவ்வொரு  தமிழ் பிரஜைக்கும் விடுக்கும் அழைப்பாகும்.

இனப்பிரச்சனை சம்பந்தமாக எம்மில் பலர் பாராமுக மனப்பான்மை கொண்டிருந்ததனாலேயே இந்த தேவை எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக இடம்பெற்ற அகிம்சை போராட்டம், அதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், இளைஞர்கள், யுவதிகள் ஆகியோரின் மரணத்திலும், பல கோடிகணக்கான ரூபா பெறுமதியான சொத்தழிவிலும் இப் பிரச்சனை முடிந்தது.

ஒரு சிறு குழுவினரிடம் முழுப்பொறுப்பையும் கையளித்தமையே நாம் செய்த பெரும் குற்றமாகும் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். விழிப்படைந்து பார்க்கின்றபோது எம் மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்டிருப்பதை நாம் கண்டுள்ளோம்.

நாடும், மக்களும், குறிப்பாக தமிழ் மக்கள் இன்றும் குழப்பமான நிலையிலேயே வாழ்கின்றனர். நாட்டில் நிலவும் குழப்பகரமான நிலையிலிருந்து எமது நாட்டையும், எமது மக்களையும் விடுவித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்குண்டு.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை உணர வைக்க நீண்ட காலமாக மேற்கொண்ட முயற்சி, துரதிஷ்டவசமாக, எமது பிரச்சினையை பற்றி மக்கள்  அறிந்து கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை.

இந்த குழப்பகரமான நிலைமைக்கு, எமது மக்கள் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும்;, தமிழரசு கட்சியிலும்; அதன் தலைவர்கள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளமையே அடிப்படை காரணமாகும்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பெருமளவிலாள நட்டத்தை பண ரீதியாக இழப்பின் பெறுமதியை கணிப்பிட முடியாமல் இருப்பதைப்பற்றி இவர்கள் இன்னமும் உணரவில்லை.

தமிழ் மக்களின் இரட்சகர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என தமிழ் மக்கள் இன்றும் கருதுகின்றார்கள்.

தமிழ் மக்களை நம்ப வைக்கப்பட்ட மாதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலோ அல்லது தராக்கியாலோ உருவாக்கப்பட்டதல்ல.

இந்த விடயத்தை மிகப்பொருத்தமான நேரத்தில் தராக்கி அவர்கள் 11-02-2004ம் ஆண்டு தன்னால் எழுதப்பட்ட கட்டுரை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

01. தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ அதிலும் பார்க்க கூடுதலாக மிகைப்படுத்தியே காட்டப்படுகிறது என்றும், பல விதமான பிற அழுத்தங்கள் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அது ஆரம்பத்திலேயே உள்ளுக்குள்ளேயே வலுவிழந்து அற்றுப்போயிருக்கும்.

02. விடுதலைப் புலிகளாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிநடத்தப்படுகின்றது என்பது பெரும் மாயை ஆகும்.

03. சில முன்னணி அரசியல் தலைவர்கள் மனச்சாட்சியின்றி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மட்டுமின்றி தமது சுயநலனுக்காக மனச்சாட்சியின்றி விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்துகின்றனர்.

04. அவர்களில் சிலர், தமிழ் மக்களுடைய போராட்டங்கள் அபிலாஷைகள் ஆகியவற்றில் எவ்விதமான அக்கறையும் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

05. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர் கூட தமிழ் ஊடகங்களால் வைக்கப்பட்டதே அன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் விரும்பியது தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு என்றே.

06. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அது விடுதலைப் புலிகளின் அதிகாரம் என்று கருதுவதும்கூட உண்மைக்கு மாறானதாகும்.

07. வடக்கு கிழக்கில் ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளையும், மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும், உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே.

08. தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர் எனக் கூறிக்கொள்ளும் நபருடன் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய குழுக்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக வினவியபோது விடுதலைப் புலிகள் அவ்விரு குழுக்களையும் இணைத்துக்கொள்ள மாட்டார்கள் எனக்கூறியுள்ளார்.

09. கிழக்கு மாகாண விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கரிகாலன, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகியவற்றை கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதில்   விடுதலைப் புலிகளுக்கு எவ்விதமான   மறுப்பும் இல்லையென்றும்  அவ்விரு குழுக்களையும், புளொட் இயக்கத்தையும் விரைவாக ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமெனவும் கூறியிருந்தார்.

(இக்காலகட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய மூன்று குழுக்களும் உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் என்பது மட்டுமல்ல உளவு துறையிலும் வடக்கில் நடைபெற்ற இராணுவத்துடனான கூட்டு, எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த காலமாகும்.)

10. இறுதிக் கட்டத்தில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ‘உதயசூரியன்’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைக்கப்பட்டதாகும்.

11. தமிழரசு கட்சி தனது நீண்டகால பாவனையில் இருந்த ‘வீட்டுச்சின்னத்தை’ கைவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தால் உருவாகிய தமிழ் தேசிய ஒற்றுமையின் காரணமாக தீர்மானிக்கப்பட்ட ‘உதயசூரியன்’ சின்னத்தை ஏற்றுக்கொண்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழரசு கட்சியும் சக்திமிக்க ஓர் பெரும் அமைப்பாக ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அரசியல் அடையாளத்தை ஏற்றுக்கொண்டன.

12. ஆகவேதான் ஒருகாலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களாக இருந்த மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள் ஏற்கனவே இருந்த அரசியல் அடையாளத்தை கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது புதிய அரசியல் அடையாளமாக ஏற்றுக்கொண்டனர். இன்று தமிழரசு கட்சி பெயரளவில் வெறும் கடதாசியில் மட்டும்தான் இருக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட பல துணுக்குகள் 2004ம்ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி வெளியாகிய தராக்கியின் கட்டுரையில் இருந்து பெறப்பட்டதாகும்.

இக்கட்டுரை புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல. அதேநேரத்தில் சில விடயங்களுக்கு விளக்கம் அவசியமாகிறது.

அந்த நேரத்தில், அதாவது 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளாலேயே உருவாக்கப்பட்டதென்றும், அவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும், சில அரசியல் தலைவர்கள் சுய தேவைக்காக அவற்றை   உபயோகிக்கின்றார்கள் என்றும், தலைவர்கள், பொது மக்களுடைய அபிலாசைகளில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போன்ற விடயங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இங்கு மிகத்தெளிவாக காணப்படுவது யாதெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரால் அப்பாவி மக்கள் ஆசை வார்த்தைகளால்; ஏமாற்றப்பட்டு, அவர்களுக்கு பல மரணங்கள் உட்பட பல இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்னுமொரு விடயம் மிகத் தெளிவாக தெரிவது யாதெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே உருவாக்கப்பட்டது என்றும் அதன் பெயர் மட்டும் ஊடகங்களால் வழங்கப்பட்டது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் காங்கிஸ் கட்சியும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியம் என்ற பெயரையே விரும்பியிருந்தன என்பதே உண்மை.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க இரண்டு ஆண்டுகளாக தமிழ் குழுக்களின் அமைப்பு பெரும் சிரமப்பட்டபோது முன்னணியில் உள்ள சிலர் இந்த கட்சிகளின் ஒற்றுமையை பற்றி இரகசியமாகக் கூட ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அப்படி அவர்கள் ஒற்றுமையை கோரியிருந்தால் இறுதி முடிவில் பல ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகளுடன் ஒரு சுதந்திர போராட்ட அமைப்பின் பல்லாயிரக்கணக்கான வீர இளைஞர்களும், தலைவர்களும் அழிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது எனக் கருதுகிறேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர் என்ற நபர் அந்த தமிழ் குழுக்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படுவதை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை என்ன துர்நோக்கத்தோடு கூறினார் என்பது எமக்குத் தெரியாது.

ஆனால் அது நல்லெண்ணத்துடன் சொல்லப்படவில்லை. சில சமயம் தங்களுடைய கட்சியாகிய தமிழரசு கட்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.

மொத்தத்தில் ஒரு விடயம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரே சின்னமாகிய ‘உதயசூரியன்’ சின்னத்தில் ஒரே கொள்கையின் கீழ் ஒரே கட்சியாக தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தமிழரசு கட்சி வெற்றிகரமாக அதற்கு குந்தகம் விளைவித்தது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

2004ம் ஆண்டு தேர்தல் திட்டமிட்டபடி தமிழ் குழுக்கள் விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் போட்டியிட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை ஜனநாயக ரீதியாக பெற்று, யுத்தம் நிறுத்தப்பட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

எல்லாவற்றுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். இன்று நாடு செழிப்புற்று இனப்பிரச்சினை உட்பட சகல பிரச்சினைகளும் ஒன்றில் தீர்வு காணப்பட்டிருந்திருக்கும்; அல்லது குறைந்த பட்சம் நம்பிக்கையோடு முடிவு வரும் என்ற நிலைப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்திருக்கும்.

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – தமிழர் விடுதலைக் கூட்டணி

Share.
Leave A Reply