ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல.

இதனை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் காலத்துக்கு பிந்திய தொடர் நிகழ்வாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது.

காரணம் அன்று டொனமூர் அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை வடக்கில் பகிஸ்கரித்தும் அடுத்த தேர்தலில் பொன்னம்பலம் தலைமையிலான அணி வென்றும் தனி சிங்கள மந்திரிசபை அமைந்தது.

இதனை முன்னிறுத்தி சிறுபான்மை இனங்களின் அதிகாரம் பற்றிய சிந்தனையில் பொன்னம்பலம் வைத்த ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை சோல்பரி ஆணைக்குழுவில் எடுபடவில்லை.

இராமநாதன் அருணாசலம் ஹன்டி பேரின்பநாயகம் போன்ற தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை விட கவரும் தன்மை கொண்டதாக ஐம்பதுக்கு ஐம்பது இருந்ததால் அது தமிழ் முஸ்லிம் மலையக தமிழர் மத்தியில் வரவேற்ப்பு பெறும் நிலை காணப்பட பொன்னம்பலம் தலைமை நிலைக்கு உயர்ந்தார்.

அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் ஏழு ஆசனங்களை பெற்றதை வைத்து தமிழர்கள் சோல்பரி  ஆலோசனையை நிராகரித்தாதாக முன்வைத்த வாதத்தை இரண்டு சுயேட்சை வெற்றியாளர்களான சி சுந்தரலிங்கம் சி சிற்றம்பலம் என்ற தமிழர்களை தனது அமைச்சரவையில் இணைத்ததன் மூலம் முறியடித்து பொன்னம்பலம் தலலைமையிலான அணியின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை நிராகரித்து ஆட்சியை அமைத்தார் சேனநாயக்கா.

இடதுசாரிகளின் தலை எடுப்பு தனித்து ஆட்சி அமைக்க தடையாக இருக்கும் நிலையை மாற்ற மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சட்டம் இயற்ற முயன்றவேளை எல்லா தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய வேளை பொன்னம்பலம் தலைமைக்கு இரண்டு மந்திரி பதவிகள் தருவதாக கூறி அதனை முன்னெடுக்க முயன்றார் சேனநாயக்கா.

ஐம்பதுக்கு ஐம்பது கைநழுவ அமைச்சு பதவி மூலம் அபிவிருத்தி செய்யலாம் என்ற வாதம் பொன்னம்பலம் தலைமையால் முன்வைக்கப்பட்டது.

உள்ளே எதிர்ப்பு எழுந்த போது அவர்கள் இரண்டு அணியாக பிரிந்து பொன்னம்பலம் தலைமை செல்வநாயகம் தலைமை என இரண்டு தலைமைகள் உருவாகி பொன்னம்பலம் அணி ஆதரவுடன் பிரஜா உரிமை சட்டம் நிறைவேறி பலலட்சம் மக்களின் வாக்குரிமைக்கு நாமம் போட்டது.

அதனோடு எமது மக்களை தலைகளின் பின் செல்ல வைக்கும் தலைமைகள் உருவாகின. இந்த தலைகளின் காய் நகர்த்தல்கள் தமிழர் உரிமைகளை பெறாத நிலையில் தமிழர் விடுதலலை கூட்டணி உருவானது.

images
கூட்டு தலைமை என்ற நிலை பொன்னம்பலம் செல்வநாயகம் மறைவுடன் வட்டுக்கோட்டை தீர்மானம் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முன்பே தொண்டைமான் அது தனது மக்களுக்கு ஏற்ப்புடையதல்ல என்ற அறிவிப்புடன் முடிவுக்கு வந்தது.

மீண்டும் தலை தேடும் நிலை. இராசதுரையா அமிர்தலிங்கமா என்ற நிலையில் சிவசிதம்பரம் அனுசரணையில் அமிர்தலிங்கம் தலைவர் ஆனார். இது அண்ணாவின் மறைவின் பின் நெடுஞ்செழியனை விடுத்து கருணாநிதியை எம் ஜி ஆர் ஆதரித்தது போன்றதே.

தேர்தலில் வெல்ல பல புதிய தலைகள் களம் கண்டன. வெற்றிவேல் யோகேஸ்வரன் லண்டனில் இருந்து இறக்குமதியாக நைஜீரியாவில் இருந்து சூசைதாசன் நாடு திரும்பினார்.

தமிழ் ஈழத்தின் வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர்கள் என முறையே அறிமுகம் கிடைத்தது. நிறைய வாக்குகள் அந்த தலைகளுக்கு கிடைத்தது. வடக்கில் சகல தொகுதிகள் உட்பட கிழக்கில் சில ஆசனங்கள் இழப்புடன் வென்றவர்களுக்கு பாராளுமன்ற எதிர்கட்சி அந்தஸ்த்தும் தலைமை பதவியும் கிடைத்தது.

தனி நாடு கேட்டு போன தலைமை மாவட்ட சபையுடன் வந்த போது பல ஆயுத போராட்ட தலைகள் தெரிய தொடங்கின.

மக்களும் புதிய தலைகளை தத்தெடுக்க அணி பிரிந்தனர். அதுவே அவர்களுக்கு வினையாகிப்போன நிலை டெலோ அமைப்பின் மீதான தாக்குதலில் தொடங்கி நந்திக்கடல் கடந்து முள்ளிவாய்காலில் உறவுகளை இழந்து முள் வேலிகளில் முடங்கிய பின்பு மட்டுமல்ல பின்னர் கூட்டமைப்பு என்று பல புதிய தலைகளுடன் பயணிக்கும் நிலையும் நீடித்தது.

தலைகள் மாறின. ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை மாறவில்லை. கிழக்கில் அரசுடன் இணைந்து முன்னாள் புலிகள் மாகாண சபைக்கு போட்டியிட்ட போது கூட்டமைப்பு பகிஸ்கரித்தது.

ஆனால் அடுத்த தேர்தலில் வென்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் இடையில் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றத்தால் மந்திரி சபையில் மட்டும் இடம் கிடைத்தது. வடக்கில் தேர்தல் அறிவிப்பு வந்ததும் பல தலைகள் வெளிப்பட்டன. இருந்தும் முன்னாள் நீதிபதி பின் மக்களை அணிதிரட்டினர்.

vigneswaran-ilankai-oneofcmநீண்ட காலம் நீதித்துறையில் இருந்தபோதும் ஓய்வு பெறும் வேளையில் மட்டுமே நீதி துறையின் பாரபட்சம் பற்றி பேசியதால் பிரபலமானார் விக்னேஸ்வரன்.

கூடவே கம்பவாரிதியின் கம்பன் கழக விளம்பரம் அவருக்கான இலவச அனுசரணையானது.

அதே வேளை பிரபாகரன் இருக்கும்வரை இந்த பழம் புளிக்கும் என மாகாண சபையை கூறிய பலர் அடுத்த முதல்வர் நான் தான் என்ற ஓட்டத்தில் கலக்க வித்தியாதரனா? தமிழ்மாறனா? என்ற நிலையில் வித்தியா கொலையுடன் தமிழ் மாறன் அவுட்.

மைத்துனருக்கு கொடுத்த பாராளுமன்ற பதவியை தன் பத்திரிகை பலம் கொண்டு தடுத்து வெளியேற வைத்த நிகழ்வால் வித்தியும் அவுட்.

மார்தட்டிக்கொண்டு வந்த மாவையை சம்மந்தர் மூன்று காரணம் கூறி மேசையில் அறைந்து (சசிகலா அம்மா சமாதியில் அறைந்தது போல) சாந்தப்படுத்தினார்.

ஆங்கிலம் தெரிந்த, நீதிபரிபாலனத்தில் உச்சம் அடைந்த தலையை முன்னிறுத்தினால் மகிந்த பூதம் அசைந்து கொடுக்கும் என்றார். மகிந்தவோ பயப்படும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய பேய் அல்ல என்றார்.

அரசியல் என்றால் தலைகளின் இராச்சியம் என்ற நிலை மக்களின் மனதில் நிலை நிறுத்தப்படுகிறது. அவர்களின் தலைமைத்துவ திறமை அண்மையில் நடந்த விசாரணை கமிசன் அறிக்கையில் மட்டுமல்ல வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சபையில் தெரிவித்த மிக நீண்ட அறிக்கை விபரம் மூலம் வெள்ளிடைமலையாய்த் தெரிந்தது.

தேர்தலின்போது கவர்ச்சி தலைகளை பார்த்து மக்களை வாக்களிக்க வைத்துவிட்டு அவர்களின் எதிர்பார்க்கைகளை கானல் நீராக்கும் செயலே இது.

ஒவ்வொரு தேர்தலின் முன்பும் இவ்வாறு புதிய தலைகள் தென்படுவதும் தேடப்படுவதும் வழமையாகி விட்ட நிலையில் அண்மையில் யாழில் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் மீண்டும் என் பிடரியை சொறிய வைக்கிறது.

விரைவில் வரவிருக்கும் வடக்கு மாகாண சபை தேர்தல் அதற்கு கட்டியம் கூறும் முன்னோட்ட காட்சிகளாக விரிகிறது. தலை தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகிறது. காரணம் நடந்த சம்பவத்தை நான்கு கோணங்களில் அணுகும் முறை நெருடல் தருகிறது.

இருவர் மது போதையில் மோதல். நீதிவான் மீது குறி. வித்தியா கொலை சந்தேகநபர் சுவிஸ் குமார் தொடர்பு, மீண்டும் புலிகள் மீள் எழுச்சி. என நான்கு கோணங்கள்.

இதில் சரணடைந்தவர் என்ர மச்சான் ஏலுமெண்டால் பொலிஸ்காரனை சுடு பார்க்கலாம் என்றார். அதனால் அவர் துப்பாக்கியை பறித்து சுட்டேன் என்கிறார். நீதவான் இது தனக்கும் நீதி துறைக்கும் விடப்பட்ட சவால் என்கிறார். வித்தியா ஆதரவு மௌனம் காக்கிறது. மகிந்த மட்டும் வடக்கில் நிலைமை கவலைக்கிடம் என்கிறார்.

புரிதல் இல்லாத முதல்கட்ட அறிக்கை பொலிசாரின் விசாரணையின் பின் புதிய வடிவம் பெறுகிறது. அதற்குள் சட்டத்தரணிகள் கண்டனம்.

கட்சி தலைமைகள் கண்டனம், தனியார் போக்குவரத்து துறை பணி பகிஸ்கரிப்பு என நீதவான் மீதான தாக்குதல் என காட்சிகள் விரிந்தன. சட்டத்தரணிகள் செயல் அது அவர்களின் துறைசார்ந்த  அக்கறை எனலாம்.

மகிந்தவும் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ் கட்சிகளும் தனியார் போக்குவரத்தும் இதில் ஏன் ??!!

நீதவான் தான் வழமையாக அந்த வீதியால் பயணிப்பதாகவும் தான் பயங்கரமான வழக்குகளை விசாரிப்பதாலும் தாக்குதல் தன்னை குறிவைத்ததாக கூற சம்பவ இடத்தில் நின்றவர்கள் ஏற்கனவே அங்கு மதுபோதையில் இருந்தவர்களின் செயலால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட அப்போது  அங்கு உந்துருளியில் வந்த நீதவானின் பாதுகாப்பு உத்தியோகத்தர் போக்குவரத்தை சீராக்க முயன்றவேளை அவருக்கும் மதுபோதையில் இருந்தவருக்கும் ஏற்ப்பட்ட இழுபறியில் அவரது துப்பாக்கி உருவபட்டதும்

பின்னர் உருவியவர் பாதுகாவலரை சுட்டதாகவும் அந்த நேரம் பின்னால் காரில் வந்த நீதிவான் மற்றும் அவரது மற்றைய பாதுகாவலர் சம்பவ இடத்தை நோக்கி ஓட, மீண்டும் அவர் சுட்டதில் இரண்டாவது பாதுகாவலரும் காயப்பட்டும் அவர் மீண்டும் அந்த நபரை சுட்டதாகவும் உடனே அந்த நபர் அவ்வழியே வந்தவரின் உந்துரூளியை கவர்ந்து அதில் தப்பி செல்லும்போது கையில் இருந்த துப்பாக்கியை விட்டு சென்றதாகவும் கூறுகின்றனர். பொலிஸ் அறிக்கையும் அவ்வாறே குறிப்பிடுகிறது.

மேலும் நீதவானை நோக்கி சுட்டிருந்தால் அவர் மீது குண்டு படாவிட்டாலும் அவரின் வாகனத்தின் மீது பட்டிருக்க வேண்டும் எனவே அவ்வாறு நடைபெறாததால் அந்த சம்பவம் நீதவானை இலக்கு வைத்தது அல்ல என்றும் கூறப்படுகிறது.

இங்கு பொலிசாரின் அறிக்கையின் நம்பகத்தன்மை ஒரு பகுதியினரால் கேள்விக்கு உள்ளாகியது. அதற்கு காரணம் பல்கலைக்கழக மாணவர் மீதான துப்பாக்கி பிரயோகம் சம்மந்தமாக முன்பு பொலிசார் தெரிவித்த மூடிமறைக்கும் முதல் கட்ட அறிக்கை.

ஆனால் அந்த சம்பவம் சம்மந்தமான விளக்கத்தை அந்த பகுதி மக்கள் தெரிவித்த பின்பு விசாரணை வேறுவிடயங்களை கவனத்தில் கொண்டு உண்மை வெளிப்பட பொலிசார் குற்றவாளி கூண்டில் ஏற அவர்கள் பற்றிய சந்தேக பார்வை தொடர்கிறது.

ஆனால் இங்கு நடந்தது என்ன என்பதை நேரில் பார்த்த மக்களும் சரணடைந்த நபரும் கூறிய பின்பும் இது பற்றிய பார்வை ஒரு கோணத்தில் இல்லை. அதிலும் அரசியல் பார்வை நீதவானுக்கு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் குடிகொண்டுள்ளது.

இங்கு தலைப்பாகைக்கு தலை ஒன்று தயாராகின்றது என்ற கணிப்பு நிதர்சனம் ஆகலாம். அதற்கு காரணம் கீரை கடைக்கு எதிர்க்கடையாக பேரவை வந்துவிட்டது.

04-douglas-devananda-300கூரை ஏறத்தெரியாதவர்கள் என தேவானந்தா இவர்களின் செயலற்ற நிலையை கூறி என்னிடம் அதிகாரத்தை தாருங்கள் நான் நடத்தி காட்டுகிறேன் என சவால் விடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

கூடவே அவர்களின் கூட்டாளிகளும் இணைவோம் எம்மால் இயன்றதை செயல்படுத்தி காட்டுவோம் என்ற நோக்கில் கூடிப் பேசுகின்றனர்.

ஏற்கனவே நல்லூர் கூட்டுறவு சங்கம் ஈ பி டி பி வசம் சென்றுவிட்டது. மாகாண சபை தேர்தலில் அதன் தலைமை தானே முன்வந்து போட்டியிடும் சூழ்நிலை அந்த கட்சிக்கு உண்டு.

சென்ற தடவை மகிந்தவின் அன்புக்கட்டளை அவ்வாறு செய்வதை தடுத்தது.    ஆனால் இம்முறை நல்லாட்சி அரசில் அவருக்கு அமைச்சு பதவி கொடுக்காத காரணம் அவரை கட்டிப்போட முடியாத நிலையில் அவரும் எந்தவிதமான கட்டளைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இல்லாத நிலை.

முன்பு அமைச்சராக இருந்த போது விமர்சனங்களுக்கு அப்பால் அவர் சார்ந்தவர் செயல்த்திறன் தான் பேரலையில் அள்ளுண்டு போகாமல் ஒரு ஆசனம் ஆவது பெற்று அவர் பாராளுமன்றம் செல்ல உதவியது.

முக்கியமான இருவர் அணிபிரிந்து சென்றாலும் தலைமைத்துவம் கொடுப்பதன் மூலம் திறமையானவர்களை அவரால் உள்வாங்க முடியும் என்பதே கடந்த கால வரலாறு. காலைக்கதிர் வரவு அவருக்கு நல்வரவாகலாம். கூடவே பனாகொடை, பெருமாள் என பன்முக இணைவுகள்.

இந்த சூழ்நிலை நீடித்தால் கூட்டமைப்பில் இருக்கும் மாற்றம் விரும்பும் கட்சிகள் வீட்டை விட்டு வெளியேறி மாற்று தலையை தேடலாம்.

izancheliyan-45447eஅது தீவிரவாத போக்கை போர்வையாக கொண்டு தனது வினைத்திறன் அற்ற செயலை மூடி மறைக்கும் விக்னேஸ்வரனா? அல்லது நள்ளிரவில் கூட பெண்கள் பயமின்றி வெளியில் சென்று வீடு திரும்பும் நிலை வரும்வரை நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறமாட்டேன் என கூறும் இளம்செழியனா? என்பதே நடைமுறை யதார்த்த கேள்வி.

தீர்ப்புகளில் அதிரடி, மேடைகளில் எச்சரிக்கை, உடுவில் மாணவர் விடயத்தில் கரிசனை, ஆசிரியர் மறைவில் ஆதங்கம், பாதுகாவலர் உயிர்பறிப்பில் காலில் விழுந்து கதறி அழுதல் என மனிதநேய மனுநீதி பேணும் நீதவான் என்ற கோணத்தில் நிறையவே அனுதாபிகள் அவருக்கு.

அமெரிக்க தூதுவரே தனது டுவிட்டரில் நெகிழ்ந்து போட்ட பதிவு பலர் பார்வையை அவர் பக்கம் திருப்பும். குறிப்பறிந்து தலைகளை தெரிவு செய்யும் கட்சி நிச்சயம் அவர் வரவை சாதகமாக்க அறிக்கை விடும்.

சம்பவ இடத்தில் நின்றவர் சொன்னவை, பொலிஸ் விசாரணையில் முதல் அறிக்கையாக வந்தவை மட்டுமல்ல சரண் அடைந்தவர் கூறியவை கூட முன்னிப்லைப்படாது.

நான் தினசரி அந்த வழியால் போய் வருவதால் நான் தான் இலக்கு என்ற நீதவான் கூற்று முன்னிலைப்படும். கொல்லவந்தவன் ஏன் ஆயுதம் கொண்டுவரவில்லை என்ற கேள்வியோ அல்லது உந்துரூளியில் சென்ற பாதுகாவலர் ஏன் தானே களத்தில் இறங்கி நேரடியாக சம்பவத்தில் கலந்து கொண்டார் என்ற கேள்வியோ

அல்லது நீதவான் ஏன் தானும் இறங்கி அவர்களை நோக்கி ஓடினார் என்ற கேள்வியோ? அவரது மற்ற பாதுகாவலர் மீது மட்டுமே துப்பாக்கி பிரயோகம் செய்தவர் ஏன் நீதவானை நோக்கி சுட்டு அவர் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்ற கேள்வியோ எழுப்பப்பட்டால் எப்படியான பதில்கள் கிடை க்கும் என்பது பூரண விசாரணையின் பின் தெரியவரும்.

அதுவரை கட்சிகள் நீதவானுக்கு அச்சுறுத்தல் என்றும் மகிந்த புலிகளின் மீள் எழுச்சி, வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் துளிர்ப்பு என அலப்பறை பண்ணட்டும்.

– ராம் –

Share.
Leave A Reply