இலங்கைத் தீவு பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம்
தமது உரிமைக்காக போராடியிருந்தது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக விளங்கிய டீ.எஸ்.சேனநாயக்கா அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.

இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் பிரித்தானியரால் இலங்கையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழுவில் பிரித்தானியருடன் இணைந்து டீ.எஸ்.சேனநாயக்காவும் பணியாற்றியிருந்தார்.

அதன் அடிப்படையில் அந்த நன்றி விசுவாசத்திற்காக அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார். அன்று முதல் இன்றைய நல்லாட்சி எனச் சொல்லும் மைத்திரி வரை தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் உளப்பூர்வமாக செயற்படவில்லை.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றி ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் நிறைவேற்று  அதிகார ஜனாதிபதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னைய காலத்தை விட தீவிரம் பெற்றிருந்தன.

கலவரம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது வயது வேறுபாடின்றியும், ஆண், பெண் என்று பாராமலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

அரச பாதுகாப்பில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீதும் வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டது. சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளாலும், காடையர்களாலும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இது இளைஞர், யுவதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னிலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்ப முடியாது என்ற மனநிலையில் அவர்கள் தற்காப்புக்காக ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்கியது.

தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்து 50இற்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்று போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

இந்தியாவின் சூழ்ச்சியாலும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றதுடன், ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகியன நின்று பிடித்தன.

இதில் சகோதர முரண்பாடுகள் ஏற்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரம் இறுதி வரை தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடினர்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே ரெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி அவர்களால் உருவாக்கப்பட்ட  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கத்துவத்தை பெற்றிருந்தன.

2009 முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின் புளொட் அமைப்பும் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெறுவதற்கு ஐக்கியம் அவசியம் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னர் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளையும், நிரந்த தீர்வையும் பெற்றுத் தர வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது விழுந்தது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற தோற்றப்பாட்டுடனும், தமிழ் மக்களது அபிலாசைகளை முன்நிறுத்துவதாகவும் காட்டி மக்கள் ஆதரவைப் பெற் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலில் இருந்து தமிழ் தேசியவாதத்தை நீக்கம் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

போர் முடிந்த கையுடனேயே அதற்கான காய் நகர்தல்கள் இடம்பெற்றிருந்தது. இந்தியா தனது நலனை அடிப்படையாக கொண்டு 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வை திணிக்க முயல்கிறது.

இந்தியாவினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் உடன்பட்டு செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாகவே 2010 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்ல வேண்டி ஏற்பட்டது.

2010 முதல் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டும் வருகின்றது.

பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த பனிப்போர் இன்று உச்ச கட்டத்தை தொட்டு நின்கின்றது. இருந்தும் பங்காளிக்கட்சிகள் ஒவ்வொன்றும் இன்றும் தமிழரசுக் கட்சியின் தயவில் தமது கட்சியை கொண்டு நடத்த வேண்டிய நிலையிலேயே இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளின் கூட்டாக செயற்படுகின்ற போதும் அது ஒரு கட்சியாக பதிவு செய்ளப்படவில்லை. அதற்கான ஒரு நிர்வாக கட்டமைப்போ, கூட்ட அறிக்கையோ, யாப்போ இல்லை.

பங்காளிக்கட்சிகள் பாராளுமன்றத்திலும், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசுக் கட்சியின் பெயராலும், அக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை பயன்படுத்தியும் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.

ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் மூன்றும் இணைந்து தமிழரசுக் கட்சியின் பெயரையும், அதன் சின்னத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அந்தக் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இதனால் தமது கட்சி கட்டுமானத்தை பங்காளிக் கட்சிகளால் பாதுகாக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

sritharan_mp_1492365473ஈபிஆர்எல்எப் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அந்தக் கட்சி நியமித்த வேட்பாளராக போட்டியிட்டு தமிழரசுக் கட்சிக்கு தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினரான ஜெயசேகரம் ஆகியோரை அந்தக் கட்சியால் தமது கட்சிக்குள் தக்க வைக்க முடியவில்லை.

வடமாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் கூட ஈபிஆர்எல் சார்பாக போட்டியிட்டு வென்ற போதும் அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக தெரியவில்லை.

ஆக ஈபிஆர்எல் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களை சக பங்காளிக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியே பறித்து எடுத்திருக்கிறது அல்லது அவர்களை இணைத்து வைத்திருக்கிறது.

இதை தடுக்கக் கூடிய கட்சிக் கட்டமைப்பு ஈபிஆர்எல்எப் கட்சியிடம் இருந்திருக்க வில்லை. அதற்கு அமைவாக தமது கட்சி கட்டமைப்பையும் வளர்க்க ஈபிஆர்எல்எப் தவறியிருக்கிறது.

ஆனால் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் ஒரு பங்காளியாக அது தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. இந்தவிடத்தில், ஈபிஆர்எல்ஏபு; கட்சியை விட ரெலோவின் நிலைப்பாடு மிகவும் மோசமானது.

ரெலோ கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சி கூட்டமைப்பின் பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் தயவில் நிற்கின்றதே தவிர, தனக்கான ஒரு கட்சிக் கட்டமைப்பை இறுக்கமாகவும், ஒழுங்காகவும் பேணவில்லை.

2009 இல் இருந்து அந்த தளம்பல் நிலை அந்தக் கட்சிக்குள் காணப்படுவதை அவதானிக்கவும் முடிகிறது.

போர் முடிவடைந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக கூட்டமைப்பு கட்சியில் இருந்து வெளியேறியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி.

தமிழரசுக் கட்சி மீது விமர்சனம் செய்யும் பங்காளிக்கட்சிகள் அத்தகைய ஒரு துணிவான முடிவை எடுக்கும் நிலையில் இல்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கஜேந்திரகுமாருடன் இணைந்து வெளியேறுவதாக கூறிய ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆனையிறவு வரை சென்று, பின்னர் தனது தொலைபேசியை அணைத்து விட்டு கொழும்புக்கு சென்றமை வரலாறு.

July132015ரெலோ தலைமை உறுதியான நிலைப்பாட்டில் இல்லாத நிலை நீடிக்கிறது. ரெலோவின் உயர் பீடத்தில் இருக்கின்ற சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் ரெலோவில் இருந்து வெளியில் நின்றதும், ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் போது ரெலோவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டதும் தெரிந்ததே. அந்த வரிசையில் அவர்கள் எல்லோரையும் மிஞ்சியிருக்கிறார் வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்.

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து வடக்கு முதலமைச்சர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் அமைச்சரவையை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கை மாகாண சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுப்பதற்கும் தூண்டியது.

முதலமைச்சரையும், பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அழைத்து மாகாணசபை விவகாரம் குறித்து பேசி சுமுகமாக தீர்ப்பதை விடுத்து தான்தோன்றித் தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்பட்டு தமிழரசுக் கட்சி எடுத்திருந்த நகர்வு இன்று மாகாணசபை விவகாரத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

denரொலோ சார்பில் அமைச்சைப் பெற்றிருந்த டெனீஸ்வரன் அவர்களும் ரெலோவின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையில் கையயெப்பமிட்டிருந்தார்.

இதனால் அவருக்கு எதிராக ரெலோ ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருந்தது. ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக வடக்கு அமைச்சர்கள் மீதான செயற்பாட்டில் முதலமைச்சரின் நிலைப்பாட்டை வரவேற்று ஆதரவளித்திருந்தன.

இந்தப்பின்னனியிலேயே ரெலோவின் தலைமைக் குழு பல சுற்றுப் பேச்சுக்களை பல மணிநேரமாக நடத்தி டெனீஸ்வரன் அவர்களை ரெலோ கட்சியின் உறுப்புரிமையில் இருந்து ஆறுமாதகாலம் நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது கட்சியின் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் பெறாமலும், கட்சியுடன் ஆலோசிக்காமலும் தன்னிச்சையாக வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டதன் மூலம் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை  மீறியிருந்தார் என்றும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்றும் ரெலோ தெரிவித்தது.

ஆனால், மறுநாள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட டெனீஸ்வரன் ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள்.

கட்சியின் அடிப்படை உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தங்களுடைய கட்சியின் யாப்பில் இடம் இருக்கின்றதா?

அத்தோடு கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று கூறுவீர்கள் என்று சொன்னால், அத்தகைய உறுப்புரிமையானது எங்கு, எப்போது, எவ்வாறு, உறுப்புரிமை எனக்கு வழங்கபட்டது என்பதை தங்களால் எனக்கும் எமது மக்களுக்கும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? என்ற கேள்வியை பகிரங்கமாக ரெலோ கட்சிக்கு விடுத்துள்ளார்.

தானே அமைச்சர் என ஆளுனருக்கு கடிதமும் எழுதியிருந்தார். ஆனாலும் ரெலோ அனுப்பி வைத்த கடிதம் கிடைத்ததும் முதலமைச்சர் டெனீஸ்வரன் அவர்களை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி தற்போது புதிய அமைச்சர் பதவியேற்று இருக்கின்றார்.

தனது கட்சிக்கும், தலைமை அமைச்சருக்கும் சவால் விடும் டெனீஸ்வரனின் செயற்பாட்டை கட்டுப்படுத்தக் கூடிய நிலை தமிழரசுக்கட்சியிடம் இருந்தும் அது இதில் கவனம் செலுத்தாமல் மௌனமாக இருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அமைச்சரவைக்கும் ஆதரவு வழங்காமல், வடக்கு முதலமைச்சருக்கு நெருக்குதல்களை தமிழரசு கட்சி பல்வேறு வழிகளிலும் கொடுத்து வருகின்றது.

இந்தப் பின்னனியில் தான் டெனீஸ்வரனுக்கு எதிராக ரெலோ கட்சி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. தற்போது ரெலோவால் அமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட விந்தன் கனரட்ணம் புறக்கணிக்கப்பட்டு குணசீலன் அவர்களை முதலமைச்சர் அமைச்சராக நியமித்து இருக்கின்றார்.

இந்தவிடத்தில் குணசீலன் கட்சி எடுத்த தீர்மானத்தை மீறியதாக ரெலோ ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது. அவ்வாறான ஒரு முடிவை ரெலோ எடுக்குமாக இருந்தால் அது அந்தக் கட்சிக்கு இன்னும் பலவீனத்தையே ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலைமைகள் நீடிப்பது என்பது பங்காளிக் கட்சிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குட்படுத்துவதாக அமையும். கட்சி கட்டமைப்புக்களை கூட்டமைப்பை பதிவு செய்து அதற்கான சின்னத்தின் கீழ் வளர்ப்பதன் மூலமே இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க முடியும். அல்லது தமிழரசுக்கட்சியின் தயவிலேயே இயங்க வேண்டிய நிலை உருவாகும்.

பங்காளிக் கட்சிகள் மூன்றும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தியைக் கொண்டிருக்கின்ற போதும் ரெலோ அவ்வப்போது தமிழரசு கட்சி சார்ந்தும் செயற்பட்டிருக்கிறது.

ரெலோ தமிழரசு கட்சியுடன் தனித்து சந்தித்து சில உடன்பாடுகளை எட்டி அதன் மூலம் ஏனைய பங்காளிக் கட்சிகள் பிரிந்து சென்றாலும் தமக்கான ஒரு கட்டைமைப்பை உருவாக்க விரும்புகின்றது. எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான இடபங்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் இதன்போது உடன்பாட்டை எட்ட முனைகிறது.

அதற்கான சந்திப்புக்களும் இடம்பெற்றிருக்கிறது. மறுபுறம் பங்காளிக் கட்சிகளுடனும் தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.

புளொட் அமைப்பைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள். ஈபிஆர்எல்எப், புளொட் என்பன ஒரு அணியில் பயணிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றது.

தமது அரசியல் அனுபவத்தையும், ஆளுமையையும் வைத்து பங்காளிக்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலையை கட்டுப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தவறியிருக்கிறார்.

இதனால், தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய நான்கு சுவர்களைக் கொண்ட வீடு இன்று ஆட்டம் கண்டிருக்கின்றது. இதனை கூட்டமைப்பு தலைமை சரியாக கையாளது விடின் இதன் விளைவை வரவிருக்கும் தேர்தலில் காணாலாம்.

ருத்திரன்-

Share.
Leave A Reply