வடக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.
பல உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்த போதும், அதில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாத காரணத்தினால், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையேற்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் காங்கிரஸ் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குமிடையிலான நீயா? நானா? போட்டி காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதியடைந்தது.
இதையடுத்தே அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கைப்பற்றிய சாவகச்சேரி , பருத்தித்துறை நகர சபைகளைக் கூட ஈ.பி.டி.பி. யின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பி.க்கும் இடையிலான இந்த திடீர் இணக்கப்பாடு, நட்புறவு, விட்டுக்கொடுப்புகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலரது வரட்டுப் பிடிவாதமும் கௌரவப் பிரச்சினையுமாகவேயுள்ளது.
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற நினைப்பிலேயே அவர்கள் கட்சியை வழிநடத்துவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்தும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்தும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
அரசியலையும் அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் பொறுத்தவரையில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர நண்பனும் கிடையாது என்று கூறப்படுவதுண்டு.
ஆனால், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதோவொரு கொள்கை நிச்சயம் இருந்தேயாக வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அந்தக் கொள்கைகூட காணாமல் போய்விட்டது.
‘பசிவந்தால் பத்தும் பறந்து போய்விடும்’ என்பது முன்னோர் கூற்று. ஆனால், பதவிக்காக கட்டிய கோவணத்தையும் கழற்றி வீசும் நிலையிலேயே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுள்ளது.
அரசியலைப் பொறுத்தவரையில் எதிரியாக இருந்தவர்கள் நண்பர்களாவதும் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாவதும் வழமை.
ஆனால், இந்த வரையறைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஈ.பி.டி.பி. யையும் உள்ளடக்க முடியாது. ஏனெனில், இருவரின் பாதைகளும் வெவ்வேறானவை. கொள்கைகள் முரண்பாடானவை.
செயற்பாடுகள் ஒத்துவராதவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, தமிழ்த் தேசியம், தமிழே எங்கள் மூச்சு , தமிழர் உரிமையே எங்கள் பேச்சு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே, இணைந்த வட, கிழக்கிற்குள் தீர்வு என்றெல்லாம் படம் காட்டிக் கொண்டிருப்பவர்கள்.
ஆனால், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்.
அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஈ.பி.டி.பி. ஒரு தமிழின துரோகக் கட்சியாகவே இன்றுவரை அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.
டக்ளஸ் தேவானந்தாவை தமிழினத் துரோகியென்றே தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அவ்வாறே பேசுகின்றனர்.
அதுமட்டுமன்றி அவரை இராணுவ ஒட்டு குழுத் தலைவரெனவும் விடுதலைப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்தவரெனவும் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போகவும் கடத்தப்படவும் கொல்லப்படவும் பாலியல் வல்லுறவுகளுக்குள்ளாக்கப்படவும் சித்திரவதை செய்யப்படவும் காரணமாக இருந்தவர், உதவியாகவிருந்தவர் அனுசரணை வழங்கியவர் என்றும் பாராளுமன்றம் உட்பட பல இடங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. க்கள் பகிரங்கமாக்க் கூறியுள்ளனர்.
அதேபோன்று, காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றினால் கூட மனித உரிமை மீறல்களிலும் தமிழ் இளைஞர், யுவதிகளின் கடத்தல் மற்றும் கொலைகளுடனும் ஈ.பி.டி.பி. யினருக்கு தொடர்புண்டென கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யினருடன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே கைகோர்த்துக் கொண்டு வடக்கிலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு ஆட்சியமைத்திருப்பதே பெரும்பாலான தமிழ் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போனமை , கடத்தப்பட்டமை, கொல்லப்பட்டமை போன்றவற்றுடன் தொடர்புள்ளதாக நீங்களே குற்றஞ்சாட்டிவிட்டு அதே தரப்புடன் நீங்கள் இணைந்து ஆட்சியமைப்பது, ஆதரவைக் கோருவது எந்தவகையில் நியாயம் என்பதே தமிழ் மக்களின் கேள்வியும் கோபமும் ஆகும்.
அத்துடன், இதுவரை ஈ.பி.டி.பி. மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்றும் கேட்கின்றனர்.
அதுமட்டுமன்றி தனது கொள்கைகளை கைவிட்டு ஈ.பி.டி.பி.யுடனேயே கூட்டுச் சேர்ந்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டமைத்துக் கொண்டு அமைச்சு, பிரதி அமைச்சப் பதவிகளை பெற்றுக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையென்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதில் முக்கிய விடயம் என்னவெனில், எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நீங்கள் ஆட்சியமைக்க நான் ஆதரவு தருகிறேன் வாருங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை டக்ளஸ் தேவானந்தா கேட்கவில்லை.
மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை அறுப்பது போல், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கோபித்துக் கொண்டு டக்ளஸ் தேவானந்தாவின் காலில் விழுந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரி பேசியதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மட்டுமே டக்ளஸ் தேவானந்தாவிடம் தொலைபேசி மூலம் கூறியதாகவும் எந்தவொரு கட்டத்திலும் ஆட்சியமைப்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. கூறியுள்ளார்.
ஆனால், எதனையும் ஆதாரம் வைத்துக் கொண்டே பேசும் டக்ளஸ் தேவானந்தா இதனைக் கேட்டு தனக்கு நெருக்கமான சிலரிடம் ‘மாவை எம்.பி. என்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவு இருக்கிறது.
அதில் அவர் என்ன கேட்டார் என்பதும் தெளிவாக இருக்கிறது. தேவையானால், தேவையான நேரத்தில் அதனை நான் வெளியிடுவேன்’ என்று கூறியதாகவும் தெரியவருகிறது.
ஈ.பி.டி.பி.யுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக ஆட்சியமைத்திருப்பது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவை தமது பரம எதிரியாக கருதும் கூட்டமைப்பின் சரவணபவன் எம்.பி.யோ, சிறீதரன் எம்.பி.யோ இதுவரைக்கும் வாய்திறக்கவில்லை.
எடுத்ததற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யை தமிழினத் துரோகி, தமிழின விரோதி , எட்டப்பன், ஒட்டுக்குழுத் தலைவர் என்றெல்லாம் வசைபாடும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த தமிழ்க் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. இணைந்த ஆட்சி தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடவும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு நன்மையான விடயங்களை செய்திருக்கின்றார்.
பெருமளவு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு கடந்த ஆட்சியில் அவர் அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்ததை மறுத்துவிட முடியாது.
அதுமட்டுமன்றி தற்போது கூட டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண தொண்டராசிரியர் நியமன விடயங்களிலும், வடக்கு , கிழக்கிலுள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் பல முன்னெடுப்புகளை பாராளுமன்றத்தினூடாகவும் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமரூடாகவும் செய்து வருகின்றார் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
ஆனாலும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சிக்கு தமிழ் மக்கள் பெருமளவில் ஆதரவளிக்காமைக்கு அவரையும் அவரது கட்சியையும் விடுதலைப் புலிகள் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தியமையும் அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முன்னெடுத்து வந்தமையுமே காரணம்.
போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகள் அவ்வாறு அடையாளப்படுத்தியமைக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், போர் மௌனிக்கப்பட்ட பின்னர் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன.
இன்று அரசுடன் கூடி உறவாடுபவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே உள்ளனர். அவர்கள் பாராளுமன்றத்திலும் ஜெனீவாவிலும் அரசின் ஊதுகுழல்களாகவே செயற்படுகின்றனர்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்கவிருந்தபோதும் அதனை தாங்களே தடுத்து நிறுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு அரசுடனான உறவுகள் பலமாக இருந்தன.
அதுமட்டுமன்றி அரசைப் பாதுகாக்கும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என தமிழ் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூறும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால், டக்ளஸ் தேவானந்தா இன்றும் எதிர்க்கட்சி வரிசையில் எம்.பி.யாக உள்ளார்.
இவ்வாறான நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட முடியுமானால் , இனிவரும் காலங்களில் ஏன் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.
தாமும் ஈ.பி.டி.பி.யும் ஒன்றேயென்றால் எப்படி தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதிர்காலத்தில் கோரமுடியும்.
ஈ.பி.டி.பி.யை எப்படி விமர்சிக்க முடியும்? இதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்த் தேசிய உணர்விற்காக வாக்களித்த தமிழ் மக்கள் இனி அதே உணர்வுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வாக்களிக்க முடியுமல்லவா?
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூட்டு வைக்கும் அளவிற்கு ஈ.பி.டி.பி. தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படுகின்றது என்றே கருத இடமுண்டு.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பதவி ஆசைக்கான கொள்கைப் பிறழ்வால் ஏற்படப்போகும் விளைவுகளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்கொள்ள நேரிடும். அதேவேளை, ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதியினால் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவேயுள்ளன.
எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்பதற்காக தனது மூக்கை அறுத்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே அமையப்போகின்றது.