வடமாகாணசபையில் மீண்டும் இன்னொரு சூடான விவகாரdenis-wiknesvaranம் உருவாகியுள்ளது. அல்லது பழைய விவகாரம் புதிதாக முளைத்திருக்கிறது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மறுபடியும் புதியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அல்லது பழைய நெருக்கடி புதிய வடிவத்தில் வந்திருக்கிறது.

விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்களுக்கு மீண்டும் இன்னொரு எரிச்சலூட்டும் பிரச்சினை காலைச் சுற்றும் பாம்பாகியுள்ளது. (கடந்த வாரம் விக்கினேஸ்வரனின் புத்தக வெளியீட்டுக்கு சம்மந்தன், சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்ததை விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் பெரிதாக விரும்பியிருக்கவில்லை. அதனால் பெருமளவான ஆதரவாளர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை)

மறுவளமாக விக்கினேஸ்வரனுடைய எதிர்த்தரப்பினருக்குப் பெருங் கொண்டாட்டம்.

“முதலமைச்சர் தனது பதவியிலிருந்து தார்மீக அடிப்படையில் விலக வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

மறுபக்கத்தில் ரெலோவுக்கு என்ன செய்வது என்று தெரியாத திண்டாட்டம்.

ஏற்கனவே பதவி இழந்த அமைச்சர்கள் மறுபடியும் உஷாராகியிருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணம், வடமாகாணசபையின் முன்னாள் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் பொருட்டு விக்கினேஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்ததாகும்.

கடந்த ஆண்டு “ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நான்கு அமைச்சர்களை பதவீக்கம் செய்திருந்தார்.

இதில் கல்வி அமைச்சராக இருந்த தம்பிராஜா குருகுலராஜா, விவசாய அமைச்சராக இருந்த பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடந்தன. அந்த விசாரணை அறிக்கையின்படி அவர்கள் இருவரும் ஊழற் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக முதலமைச்சர், வடமாகாணசபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரினார்.

sathiyalingam_deniswaran-415x260

sathiyalingam_deniswaran

இதனை சுகாதார அமைச்சராக இருந்த ப. சத்தியலிங்கமும் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகச் செயற்பட்ட பா.டெனிஸ்வரனும் கடுமையாக எதிர்த்தனர். எனினும் முதலமைச்சர் தனது தீர்மானத்தில் உறுதியாக நின்றதுடன், புதிய அமைச்சரவையையும் தெரிவு செய்தார்.

இது அந்த நாட்களில் பெரும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியிருந்தது. மட்டுமல்ல, முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையே கொண்டுவந்தது.

தமது நடவடிக்கைக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வடிவத்தில் பலமான எதிர்ப்பு வரும் என விக்கினேஸ்வரன் எதிர்பார்க்கவேயில்லை. ஆடிப்போனார். அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாத நிலையில் வீட்டுக்குள்ளேயே இரண்டு நாட்கள் முடங்கிக் கிடந்தார் விக்கினேஸ்வரன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் (சுமந்திரனின் எதிர்ப்பாளர்கள்) எதிர்பாராத விதமாகத் திரண்டு, முதலமைச்சரைச் சிறை மீட்டனர். அதாவது, அவர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையை எதிர்த்து பகிரங்கமாகப் போராட்டங்களை நடத்தினர். இந்த எழுச்சியைக் கண்ட எதிர்த்தரப்பினர் தமது நம்பிக்கையில்லாப் பிரேரணையை மெல்ல வாபஸ் வாங்கிக் கொண்டு பின்வாங்கினர். விக்கினேஸ்வரன் மீண்டெழுந்து உஷாரானார்.

ஆனாலும் ப. சத்தியலிங்கமும் பா.டெனிஸ்வரனும் தங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றே தெரிவித்திருந்தனர். இதை ஒரு போதும் தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பா. டெனிஸ்வரன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதாவது, நீதித்துறையின் உயர்பதவியிலிருந்த விக்கினேஸ்வரனை இளம் சட்டவாளரான டெனிஸ்வரன் சட்டத்தின் முன்னே நிறுத்த முயன்றார். (விக்கினேஸ்வரன் என்ற நீதியரசருக்கு எப்போதும் அவருடைய ஜூனியர்களினாலேயே (சுமந்திரன், டெனிஸ்வரன், சயந்தன்) போன்றோரால்தான் கூடுதல் பிரச்சினை)

டெனிஸ்வரனுடைய எதிர்ப்பில் பிரதானமாக இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தான் ஊழல் குற்றச்சாட்டுக்குட்படவில்லை என்பது ஒன்று. இரண்டாவது அமைச்சுப்பதவியைப் பறிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்பது.

இப்பொழுது மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனிஸ்வரனைப் பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் “அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை” என்ற சேதி சொல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெனிஸ்வரன் தன்மீதான ஊழல் குற்றச்சாட்டை(?)க் கடந்திருக்கிறார். பொது உணர்நிலை அவ்வாறே கருதுவதாக உள்ளது. டெனிஸ்வரன் வெற்றியடைந்துள்ளார் என.

இதேவேளை இது இப்பொழுது இரண்டு விதமான உணர்நிலைகளை உருவாக்கியுள்ளது. ஒன்று, அரசியல் ரீதியில் இது மாகாண அதிகார எல்லைகளைப் பற்றி மீளவும் சிந்திக்க வைக்கிறது.

இது மிக முக்கியமான விடயம். இரண்டாவது, டெனிஸ்வரனுடைய அரசியல் உரிமைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டை எதிர்த்து அவர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் விளைபயன். கூடவே நீதியரசாகப் பதவி வகித்த விக்கினேஸ்வரன், இளைய சட்டத்தரணி ஒருவரின் மூலம் தோற்கடிக்கப்பட்டிருப்பது.

முதலாவது விடயத்தின்படி, ஆளுநருக்கும் மாகாண முதலமைச்சருக்குமான இழுபறிகள் எப்போதும் அதன் அதிகார எல்லைப் பிரச்சினைகளாலேயே நடக்கின்றன. இப்பொழுது வந்திருக்கும் இந்த மேன்முறையீட்டு மன்றத்தீர்ப்பும் ஆளுநரை மேலும் பலப்படுத்தப்போகிறது. மாகாணசபை – முதலமைச்சரைப் பலவீனப்படுத்தவுள்ளது.

ஏற்கனவே ஒரு நீதிமன்றத்தீர்ப்பு வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையைத் துண்டாக்கியது. இந்தத்தீர்ப்பு மாகாண முதலமைச்சரின் அதிகாரங்களைக் குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆகவே சட்டங்களின் மூலமாக (நீதிமன்றங்களின் வழியாக) மாகாணசபை பலவீனப்படுத்தப்படுகிறதா? என்று நாம் கேட்கவேண்டியுள்ளது.

“மாகாணசபையைப்பொறுத்தவரை ஆளுநரின் கையிலேயே அதிகாரங்கள் குவிந்துள்ளன. இதனால் ஆளுநரின் பிடியிலேயே பல விடயங்களும் தங்கியிருக்கின்றன. ஆளுநர் எல்லாவற்றிலும் தலையீடு செய்கிறார். இடையீடுகளை உருவாக்குகிறார்” என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு இதை மேலும் உறுதி செய்கிறது.

இந்த நிலை ஏன் வந்தது?

அரசியல் விடயங்களையும் விவகாரங்களையும் பொது நிலைப்படுத்திச் சிந்திக்க முற்படாததன் விளைவே இதுவாகும். தனிநபர் அல்லது தமது அமைப்பின் நலமே முக்கியமானது என்ற மேலாண்மையின் வெளிப்பாடு அல்லது அதன் விளைவு இதுவாகும்.

இப்பொழுது சிலர் கூறுகின்றனர், “விக்கினேஸ்வரன் என்ற தனிநபர் மீதான கோபம், வெறுப்பு, அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற விருப்பங்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்மொழிச் சமூகங்களைப் பலவீனப்படுத்தியுள்ளன” என. இது ஒரு வகையில் உண்மையே.

முன்பும் (1987 – 1990) இதுவே நடந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மீதும் இருந்த கோபம், வெறுப்பு ஆகியவற்றுக்காக அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ மூலமாக மாகாணசபைக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

ஆகவே தொடர்ச்சியாகவே மாகாணசபையைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் அரசாங்கத்தினால் மட்டுமல்ல, தமிழ்த்தரப்பினாலும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் இங்கே கவனத்திற் கொள்ள வேணும்.

ஆனால், மேலே சுட்டியுள்ளவாறு “விக்கினேஸ்வரன் என்ற தனிநபர் மீதான கோபம், வெறுப்பு, அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற விருப்பங்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்மக்களைப் பலவீனப்படுத்துகிறது” என்போர், விக்கினேஸ்வரன் தவறான முடிவுகளை எடுத்தபோது அதைக்குறித்து ஏன் பேசவில்லை? என்ற கேள்விக்குரியவர்கள்.

அவ்வாறே வரதராஜப்பெருமாள், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளுக்கும் பொறுப்புக்குரியவர்கள்.

ஏனெனில் ஒருவருடைய, ஒரு அமைப்பினுடைய ஒழுக்கம், மரியாதை, எதிர்காலம் போன்றவற்றில் யாரும் கைவைத்தால், அவர் அல்லது அந்த அமைப்பு அதிலிருந்து மீள்வதற்கும் தன்னை அந்தப் பழிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்குமாக முயற்சித்தே தீருவது இயல்பு.

டெனிஸ்வரன் இப்பொழுது செய்திருப்பதும் இதுவே.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அதனால் பறிக்கப்பட்ட பதவியையும் அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் அதைத் தான் எதிர்த்து உண்மையை வெளிப்படுத்துவேன் என்றும் முயன்றிருக்கிறார்.

ஆனால், அதன் மறுவளம் ஒட்டுமொத்தத்தில் மாகாணசபையின் அதிகாரத்தைக் குறித்த கேள்விகளையே எழுப்புவதாக அமைந்துள்ளது.

இந்த நிலை உருவாகுவதற்கு முழுக்காரணமும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் டெனிஸ்வரன் அங்கம் வகிக்கும் ரெலோ, கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகள் ஆகியவற்றையே சாரும்.

அன்றைய சூழலைச் சரியாகக் கையாண்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது. இதில் பங்காளிக் கட்சிகள் பாரிய தவறிழைத்திருக்கின்றன. ரெலோ டெனிஸ்வரனை ஆறுமாத காலத்துக்குத் தமது கட்சியில் இடைநிறுத்தும் தீர்மானத்தையும் எடுத்திருந்தது.

இன்று இவையெல்லாவற்றுக்கும் மேலாக – தலைக்குமேலே – வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

ஆனால், தற்போது வந்திருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளார் முதலமைச்சர் எனவும் இதைக்குறித்து சட்டரீதியாக ஆலோசிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு மாற்றுச்சாத்தியங்களை உண்டாக்கும் என்பதை இனிவரும் நாட்களில் அவதானிக்கலாம்.

சிலவேளை மாகாணசபை கலைக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அதுவரையில் சட்டரீதியாக இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தாமதிப்பதற்கு உதவக் கூடும். மாகாணசபை கலைந்து விட்டால் பிறகு இது அப்படியே செயலற்றுப்போய்விடுமே.

தற்போதுள்ள சூழலில் டெனிஸ்வரன் தன்னைச் சுத்திகரிப்புச் செய்திருக்கிறார். அதேவேளை சட்டத்துறையின் மூத்த பிரதிநிதியையும் முதலமைச்சரையும் தோற்கடித்திருக்கிறார். ஆகவே இது டெனிஸ்வரனுக்கு வெற்றியே.

விக்கினேஸ்வரன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியற்ற நிலையில் மேலும் ஒரு அடி சறுக்கலுக்கு உள்ளாகியுள்ளார். மட்டுமல்ல, சட்டத்துறையிலும் பலவீனமாகியிருக்கிறார்.

சட்ட ரீதியாக அரசியல் சாசனத்தின் அடிப்படையில் வலுவாக்கம் பெற்றிருக்க வேண்டிய மாகாண அதிகாரம், ஆளுநரின் விருப்பம், இணக்கம், ஒத்துழைப்பு, ஆதரவு போன்றவற்றை எல்லாம் கருணை நிலையில் தயவாக மாகாணசபை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை எப்படிக் கையாள முடியும் என்று தெரியாமல் மேலும் ரெலோ குழப்பத்திற்குள்ளாகியுள்ளது. கூட்டமைப்புக்கு வெற்றியும் தோல்வியும் என்ற இருநிலை. ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொரு தரப்பினருக்குச் சங்கடத்தைக் கொடுக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழிச் சமூகங்களுக்கோ மாகாணசபைகளுக்கோ இதெல்லாம் நல்லதல்ல. ஆனால், என்ன செய்வது, அரசியல் பேதமைகளின் ஆட்சியில் இதுவல்ல, இதற்கு மேலும் நடக்கும்.

Share.
Leave A Reply