இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் தற்போது மற்றொரு பிரச்சனை உருவெடுத்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரு சிங்கள பிரஜையும், இரு முஸ்லிம் பிரஜைகளும் அடங்குகின்ற நிலையிலேயே இந்த பிரச்னை உருவாகியுள்ளதை காண முடிகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மூவரது சடலங்களும் சுகாதார தரப்பின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கத்தின் முழுமையான செலவில் தகனம் செய்யப்பட்டிருந்தன.

இஸ்லாமிய மதத்தின் பிரகாரம், இஸ்லாமியர்கள் ஜனாஸா (சடலத்தை) நல்லடக்கம் செய்வதே வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நீர்கொழும்பு பிரதேசத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரது ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த இஸ்லாமிய பிரஜையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதை கண்டித்து பலர் தமது எதிர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணாக தகனம் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

இஸ்லாமியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் ஜனாஸாவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைய நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிஷ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய நேரத்தில் அரசாங்கம் மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புக் கொண்டு, ஜனாஸா தகனம் செய்யப்படுவதை அவசர அவசரமாக தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தங்களது சமய ரீதியான உரிமையை தாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்த பூர்வமான நடைமுறை சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, ராணுவ தளபதியுடன் கலந்துரையாடல்

கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய வலியுறுத்தும் வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் சந்திப்பொன்றை கடந்த 31ஆம் தேதி நடத்தியிருந்தது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி முஸ்லிம்கள் எவரேனும் மரணிக்க நேர்ந்தால், அவர்களின் ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதன்போது உறுதியளித்திருந்ததாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கையொன்றின் ஊடாக அன்றைய தினம் அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான முஸ்லிம்களின் ஒத்துழைப்புகள், சமூகத்துடன் இணைந்து செயற்படல், வைரஸ் பற்றிய விழப்புணர்வை மேலும் அதிகரித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனது கடமையல்லாத போதிலும், கொரோனா வைரஸினால் முஸ்லிம்கள் எவரேனும் உயிரிழந்தால், அவர்களின் ஜனாஸாக்களை முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக தாம் உதவி புரிவதாக இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி மறுப்பு

சுகாதார தரப்பினால் விடுக்கப்படும் ஆலோசனைகளுக்கு அமையவே தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கோவிட்-19 நோய்த்தொற்று தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்போரின் சடலத்தை தகனம் செய்யும் தீர்மானத்தை சுகாதார பணிப்பாளர் நாயகம் எட்டியுள்ள நிலையில், அவரின் ஆலோசனைகளை பின்பற்றி தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

_111550214_gettyimages-1208075107கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதே அனைவரது எதிர்பார்ப்பு எனக்கூறி அவர், இனம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற் சென்று, அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தகனம் செய்வதற்கு தீர்மானம்

கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளின் பிரகாரம், புதைத்தல் மற்றும் தகனம் செய்தல் இரண்டும் ஏற்புடையது என்ற போதிலும், தகனம் செய்வது மிகவும் சிறந்ததொரு நடைமுறை என்பதை கருத்திற் கொண்டே தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கோவிட் 19 வைரஸினால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு நடத்தப்பட வேண்டிய நடைமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சடலத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் கழுவக்கூடாது, சடலம் அங்கீகரிக்கப்பட்ட உரையில் இடப்பட வேண்டும், சடலம் தகனம் செய்யப்பட வேண்டும் மற்றும் போலீஸார், சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சடலம் அழிக்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களை சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கோவிட் 19 தாக்கத்திற்கு உள்ளான மூன்றாவது நபர் நேற்று நள்ளிரவு உயிரிழந்திருந்தார்.

கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய நேற்று நள்ளிரவு முதல் முஸ்லிம் தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும், அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், கோவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்த மூன்றாவது நபரின் ஜனாஸாவும் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் கருத்து

உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றி, நாட்டிலுள்ள சட்டத்திற்கு அடிப்பணிந்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அனைவரது உயிர்களும் இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

”நாம் இந்த சந்தர்ப்பத்தில் மதம், இனம் பேதமின்றி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கு அமையவே செயற்படுவதாக நாம் கூறுகின்றோம். உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகளினால் கூறப்படும் விடயங்களை ஏற்றுக்கொள்வதை விடுத்து, எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அரசியல்வாதிகள் என்ற வகையில் தேவையற்ற விதத்தில் எம்மால் நடந்துக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பம் இல்லாவிடினும், மனிதர்களை பாதுகாப்பதற்காக சுகாதார அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்குகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவரது உயிர்களும் இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாக்கப்பட வேண்டும், அனைவருக்கும் கௌரவமான மரணமொன்று அமைய வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. அனைவரும் சட்டத்தை மதித்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றினால் சிறந்து என நினைக்கின்றேன்” என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Share.
Leave A Reply