தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாகொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்தாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது.
இன்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 74 பேரில் 73 பேர் டெல்லி நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 485 பேரில் 422 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
கடைசி 5 தினங்களில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை
- மார்ச் 31 – 57
- ஏப்ரல் 1 – 110
- ஏப்ரல் 2 – 75
- ஏப்ரல் 3 – 102
- ஏப்ரல் 4 – 74
கடைசி 5 தினங்களில் தமிழகத்தில் 418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அமலாகியுள்ள முடக்கநிலை குறித்து தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 5) முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நோய் தொற்று பொது மக்களுக்கு பரவுவதைத் தவிர்க்க எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது இதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்கவேண்டும்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பத்தார் வெறுப்புடன் பார்ப்பதைத் தவிர்த்து, அன்போடும், பரிவோடும் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரியவந்தால், மாவட்ட ஆட்சியர்கள் அந்த மருத்துவமனைகள் திறக்க வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவிரும்புவார்கள், இதற்காக அரசு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவிசய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்க அரசு தரப்போடு சேர்ந்து சமூக ஆர்வலர்கள் உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேலும் ஒருவர் பலி
டெல்லி மாநாட்டிற்குச் சென்று தமிழகம் திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாகத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று இரவு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி, இன்று காலை 7.44 மணிக்கு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரையில் ஒருவர் இறந்துள்ள நிலையில், இது கொரோனாவால் தமிழகத்தில் உண்டாகும் இரண்டாவது மரணமாகும்.
ராட்சத லிப்ட்களை பயன்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கும் பணி
தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறை மூலம் ராட்சத லிப்ட்களை பயன்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், பொது மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு காய்கறி சந்தை, அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் 150 அடி உயரம் கொண்ட ராட்சத லிப்ட்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
”தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் 4,500 இடங்களை அடையாளம் கண்டு ராட்சத லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. தீயணைப்புத்துறையின் துணையோடு இந்த வேலை நடைபெறுகிறது.
மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுகிறார்கள். இந்த நேரத்தில் கிருமிநாசினி தெளிப்பதால், மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுவது தடுக்கப்படும். மருத்துவமனையிலிருந்து பொது இடங்களுக்குச் செல்லும் மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால், கிருமிநாசினி தெளிப்பது அவசியம்,”என்றார் அமைச்சர்.
மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் இருக்கும் இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
”கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்பதால், அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 17 கொரோனா சோதனை மையங்கள் செயல்படுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.