வடக்கின் பலாலி மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இதனூடாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இரவு 10.00 மணியாகும் போது 233 ஆக அதிகரித்துள்ளது.

பலாலி இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் , அரியாலை பகுதியில் மத போதகர் ஒருவரின் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த 14 பேருக்கு  கொரோனா தொடர்பிலான பரிசோதனைகள்  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் அதில் 8 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இந் நிலையில் ஜா – எல தொற்றாளர் ஒருவருடன் இருந்த தொடர்பாடல் காரணமாக ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில்  கடற்படை முகாமில் உள்ள  தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராகமை வைத்தியசாலை என அறியப்படும்  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின்  5 சுகாதார ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக முழங்காவில் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில்  சிலருக்கு முன்னெடுக்கப்பட்ட  கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகளில் இன்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக விஷேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டினார். அதன்படி இன்று மட்டும்   இவ்விரு  தனிமைபப்டுத்தல் முகாம்களிலும் இருந்தவர்களில் 12 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19  தொற்று பரவல் தொடர்பில் பகுப்பாய்வு செய்யும் போது, நாட்டில்  அதன் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத் தரப்பினரால் முடிந்துள்ளமை வெளிப்படுவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின்  சிரேஷ்ட ஆய்வாளர்  விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை இலங்கையில் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 233 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு வெளிநாட்டவர் உட்பட 61 பேர் பூரண குணமடைந்து இன்று வரை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் 163 பேர் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை வெலிகந்த முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோராக அடையாளப்படுத்தப்பட்டாலும் 12 பேர் இன்று இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில், பலாலி, முழங்காவில் முகாம்களிலேயே  மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.   மேலும் நாடளாவிய ரீதியில் 24 வைத்தியசாலைகளில் 142 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை  அதிகமான தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும்.

இதில் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 45 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 29 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அடையாளம் காணப்பட்டவர்களில்  மொறட்டுவை, நுகேகொட, ஹோமகம,  மருதானை, பத்தரமுல்லை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவுகளில் தலா இருவர் வீதமும்  தெஹிவளை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 8 பேரும் பன்னிபிட்டிய சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் ஒருவரும், இரத்மலானை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோர் கொழும்பு மாநகர சபை சுகாதார அத்தியட்சர் அதிகார எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 53 பேரும் பண்டாரகம சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டோரில் அடங்குகின்றனர்.

அத்துடன் கம்பஹாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 25 பேரில்  ஜா எல சுதுவெல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மட்டும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவர் நீர்கொழும்பு சுகாதார அத்தியட்சர் அதிகார பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். ஏனையோர்  கடான, சீதுவ, மினுவாங்கொடை, வத்தளை மற்றும் மஹர பகுதிகளில் இருந்து அடையளம் காணப்பட்டுள்ளனர்.

 

மேல் மாகாணத்தின் பகுதிகளை தவிர்த்து புத்தளம் மாவட்டத்தில், 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   யாழ். மாவட்டத்தில்  15 பேரும், கண்டி மவட்டத்தில் 7 பேரும்,  இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும் கொரோனா தொற்று  குறித்து அடையாளம் காணப்பட்ட 233 பேரில் உள்ளடங்குகின்றனர்.

இதனைவிட குருணாகல்   மாத்தறை அம்பாறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா இருவர் வீதமும்   காலி, மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர் வீதமும் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட 3 வெளிநாட்டவர்களும்  வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்ட 37 பேரும் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் தற்போதும்  கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த அல்லது அவர்களுடன் நெருங்கிப் பழகியமை தொடர்பில் 1500 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இராணுவத்தின் 12 தனிமைப்படுத்தல் மையங்களிலும் கடற்படையின் 4 தனிமைப்படுத்தல் மையங்களிலும் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக  கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் , இராணுவத் தளபதி லெப்டினன் கொமாண்டர் சவேந்திர சில்வா கூறினார்.

தற்போது  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பெரும்பாலும்  தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையிலேயே   குறித்த தொற்றின் பரவல் ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதார தரப்பினர் நம்புகின்றனர்.

இது குறித்து கருத்துரைத்த சுகாதார சேவைகள்  திணைக்களத்தின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமர வீர,

‘ கடந்த 5 நாட்களை நோக்கும் போது  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் பழகிய நிலையில்  அறிகுறிகள் இல்லாமல் இருந்த  தொடர்பாடல் வட்டத்துக்குள் வருபவர்களாவர்.  இந் நிலைமையில் இருந்து  நாம் ஒருவாறு இந்த தொற்றின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை தெளிவாகிறது.

இந்த கட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணம் ஒன்றுள்ளது. தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதும்,  அந்த பகுதியை தனிமைப்படுத்தி  அவரது தொடர்பாடல் வலையமைப்பு வட்டத்தை முதலில் அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா என பரீட்சித்து  அவர்களுக்கும் கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்தமையே இந்த கட்டுப்பாட்டுக்கு காரணமாகும்.

அடையாளம் காணப்படாத தொற்றாளர்கள் ஒரு சிலர் சமூகத்தின் மத்தியில் இருக்கலாம். தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும் போது, தற்போதைய கட்டுப்பாட்டு நிலைமை தொடர்வது உறுதியாகும் சந்தர்ப்பத்தில், எமக்கு ஊரடங்கை தளர்த்தி சாதாரண  நிலைமைக்கு திரும்புவது குறித்து திட்டமிட முடியும். மக்கள் எவ்வாறு ஊரடங்கு அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என்பதெல்லாம் அப்போது தீர்மானிக்கப்படலாம். அனேகமாக இந்த மாத இறுதிக்குள் எமக்கு அந் நிலைமையை அடையலாம் என உறுதியாக நம்பலாம்.’ என தெரிவித்தார்.

Share.
Leave A Reply